Selvan Anbu
பள்ளி படிக்கும் ரேடியோக்காலங்களில் 'லலிலலிலலா...என் மச்சான' பாடலும், அதன் ஹம்மிங்கும், 'சிங்கார வேலனே தேவா'...பாடலும், அதன் நாதஸ்வரமும் தரும் மன அமைதியும் பின்னாளில் வளர்ந்து சொந்தமாக CD ப்ளேயர் வைத்துக்கேட்கும் போது கிடைத்ததில்லை..
அந்த மயக்கும் குரல் தான் நமக்கு அந்த அமைதியை தருகின்றது என புரிந்து கொள்ள பல காலம் ஆகிற்று. சாப்பிட்டு விட்டு பாயை போட்டு படுத்து விட்டாலும் அடுத்த வீடோ, அதற்கடுத்த வீட்டிலிருந்தோ பாடல் வரும். 'தூக்கமும் கண்களை தழுவட்டுமே...' என ஒலிக்கும் அந்தக்குரல் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தூக்காத்தை வரவைத்து விடும். சரி தூங்கி விடுவோம் என நினைக்கும் போது 'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்' என ஒலிக்கும் போது வந்த தூக்கமும்போய் மனம் உற்சாகமாகிவிடும். அந்தக்குரலில் தான் எத்தனை வாஞ்சை....எத்தனைக்காதல்...
'காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது..காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது...' எவ்வளவு ரம்மியமான பாடல்.
'ஓஹோ எந்தன் பேபி' பாடலில் நாயகி வாட்டர் ஸ்கேட்டிங்கில் போய்க்கொண்டே பாட வேண்டும். ராஜாவும், ஜானகியும் பாடும் பாடலும் தண்ணீரில் வழுக்கிக்கொண்டே போகும்..அழகான பாட்டு.
ஜானகி அவர்களின் குரலை ராஜாவுக்கு முன், ராஜாவுக்குப்பின் எனப்பிரிக்கலாம். இளையராஜா வருவதற்கு முன் ஜானகியின் குரலில் Nozzle tone வராமல் கஷ்டப்பட்டு பாடி இருப்பார். ராஜா கஷ்டப்படாதீங்க...இயல்பா பாடுங்க என சொல்லி இருப்பாரோ என்னவோ..பின் வந்த பாடல்களில் மூக்கால் பாடியது போல் இயல்பான அவர் குரலில் இருக்கும்.
செந்தூரப்பூவே, குயிலே கவிக்குயிலே, வெண்மேகமே..., எங்கெங்கோ செல்லும், வான் மேகங்களே....எல்லாமே அப்போதைய ரேடியோ ஹிட்டுகள்.
குழந்தைகள் பாடும் போது பெரிய பாடகிகள் குரலில் பாடும் போது ராஜாவே ஜானகியின் குழந்தைக்குரலை வைத்து ருசி கண்ட பூனை படத்தில் கொடுத்த 'கண்ணா நீ எங்கே' பாடல் அப்போதைய ஆச்சர்யப்பாடல். பின் பாக்யராஜ் படத்தில் 'டாடி டாடி..' பாடல் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிக்கும் அளவுக்குப்போனது ஜானகியின் குழந்தைக்குரல்.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் தவிப்பு,
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ பாடலில் ஆணவம்,
கண்மணி அன்போடு காதலன் பாடலில் வாஞ்சை,
இஞ்சி இடுப்பழகாவில் வரும் பத்தாம்பசலித்தனம்,
உறக்கக்கத்துது கோழி பாடலின் விரகம், சாண்புள்ளயானாலும் நீ ஆண்புள்ள தான்யா என உறவுக்கு தயாராக்குவது, தென்றல்வந்து தீண்டும் போது மனசுல பாடலின் உற்சாகம்...
எத்தனையெத்தனை வேறுபாடான பாவங்கள்.
ஜானகிஅம்மாவின் குரலின் ஊடே வாழ்க்கையின் தத்துவங்களை புரியவைக்க முடியும் என உணர்த்திய அந்த குரல் ஓய்ந்து விட்டது.
அஞ்சலிகள் அம்மா...

கருத்துகள்
கருத்துரையிடுக