நூல் : குளத்தில் மிதக்கும் பருந்தின் நிழல் நூல் ஆசிரியர் : கவிஞர் கருமலை பழம் நீ நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

நூல் : குளத்தில் மிதக்கும் பருந்தின் நிழல் நூல் ஆசிரியர் : கவிஞர் கருமலை பழம் நீ நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : நூலேணி பதிப்பகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை - 600 018. பக்கங்கள் 90, விலை ரூ. 130 ****** ஹைக்கூவின் தந்தை என புகழப்படுகிற 'பாஷோ'வின் 380வது பிறந்த நாளை முன்னிட்டு 'நூலேணி' பதிப்பகம் 'கன்னிக்கோவில் இராஜா' வடிவமைத்து வெளியிட்டுள்ள நூல். நூலாசிரியர் கவிஞர் 'கருமலை பழம் நீ' அவர்கள் பல்வேறு நூல்கள் எழுதியவர். பல்வேறு இதழ்களில் எழுதி வருபவர். பல பரிசுகள், விருதுகள் பெற்ற புகழ்பெற்ற கவிஞரின் நூல் இது. நூல் விமர்சனம் செய்வதில் சாதனை புரிந்துள்ள, 1300 நூல்களுக்கு மேல் விரிவான விமர்சனம் எழுதியுள்ள இனிய நண்பர் சேலம் 'பொன்.குமார்' அவர்களுக்கு இந்த நூலை காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு. பாராட்டுகள். எல்லா வயது வாசகர்களும் விரும்பிப் படிக்கும் ஹைக்கூ வகையைத் தேர்ந்தெடுத்து, ஹைக்கூ நூல் வடித்த ஆசிரியருக்கு பாராட்டுகள். மிகவும் பிடித்த கவிதைகளை மேற்கோள் காட்டுவதற்கு பக்கங்களை மடித்து வைத்து வந்தேன். கடைசியில் எல்லாப் பக்கங்களையும் மடித்து வைத்து விட்டேன். பிறகு மறுபரிசீலனை செய்து குறைத்து விட்டேன். நூலில் உள்ள அனைத்து ஹைக்கூ கவிதைகளும் சிந்திக்க வைக்கின்றன. சிந்தனை மின்னலை சிந்தையில் உருவாக்குகின்றன. கவிதை உணர்வோடு பார்த்த பார்வையால் கிடைத்த ஹைக்கூகள். பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ! 'குளத்தில் மிதக்கும் பருந்தின் நிழல்' நூலின் தலைப்பே கவித்தவமாக உள்ளது. நூலின் அட்டை தொடங்கி உள்ளே ஹைக்கூ கவிதைகளிலும் பருந்தின் படமே உள்ளன. கன்னிக்கோவில் இராஜாவின் வடிவமைப்பு ஒவ்வொரு பக்கமும் நூலின் தலைப்பையே நினைவூட்டுகின்றன. எதையும் ரசிக்கப் பிடிக்கவில்லை தாய்வீட்டில் மனைவி! உண்மை தான், மனைவி இல்லாத வீடு, வீடாக இருக்காது. மனம் சோர்ந்து விடும். தாய்வீட்டிற்கு போனவள் எப்போது திரும்புவாள் என்று ஏக்கமே இருக்கும். அந்த மனநிலையில் எதையும் ரசிக்க மனம் வராது என்பதை ஹைக்கூவால் படம்பிடித்துக் காட்டி உள்ளார். மரண வீடு ஓடி விளையாடும் குழந்தைகள்! ஆம், குழந்தை மனங்களுக்கு மரணம் பற்றி புரிதல் இருப்பதில்லை. அவைகள் மனம் போன போக்கில் விளையாடி மகிழும். வளர்ந்தபின்னே தான் மரணத்தின் வலி தெரியும். அதுவரை கவலையின்றி விளையாடும் குழந்தைகள் இயல்பை உணர்த்தியது சிறப்பு. குளத்தில் மிதக்கும் பருந்தின் நிழல் அச்சத்துடன் மீன்கள்! நூலின் தலைப்பைத் தந்த ஹைக்கூ இதுதான். நம் கண்முன்னே காட்சிப்படுத்தி விடுகிறார். பருந்து வானிலிருந்தே குறி வைத்து வரும், குளத்தில் உள்ள மீன்களை கொத்திச் செல்ல. அந்த நிழல் கண்டால் மீன்கள் பயம் கொள்வது இயல்பு தானே. இந்த ஹைக்கூ படித்தபோது, உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர் பர்வீன் சுல்தானா அவர்கள், இணையத்தில் பார்த்த ஒரு காட்சியைக் குறிப்பிட்டார். பருந்து மீனை கால்களால் குத்தி விட்டது. மீனை மேலே தூக்க முயல்கின்றது. அனால் மீனோ கழுகை குளத்திற்குள் இழுத்து வெற்றி பெற்று விடுகிறது - இந்தக்காட்சி நினைவுக்கு வந்தது. பயமின்றி துணிவுடன் எதிர்கொண்டால் சாகாமல் உயிர் வாழலாம் என்பதை உணர்த்தியது. ஆனால் எல்லா மீன்களுக்கும் இது சாத்தியப்படாது. பனித்துளி ஒன்றில் தூங்காமல் விழித்திருந்தது பரந்த வானம்! இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு தமிழக ஹைக்கூ கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக காட்சிப்படுத்துதல், இயற்கையைப் பாடுதல் என நூல் முழுவதும் நிறைய ஹைக்கூ கவிதைகள் உள்ளன. பனித்துளியில் தெரிந்த வானத்தைப் பார்த்து வடித்த ஹைக்கூ சிறப்பு. கடை திறக்கும் முன்பாகவே வரிசையில் காத்திருக்கிறார்கள் மது விரும்பிகள்! உண்மை தான். திறக்குமுன்பே வரிசையில் நிற்கும் குடிமகன்களைப் பார்க்கிறோம். குடியால் நாடே சீரழிந்து வருகிறது- இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக மதுக்கடைகளை மூடிட வேண்டும். நாடு நலம் பெறும். மதுவிரும்பிகள் என்ற மூன்றாவது வரியை குடிகாரன்கள் என்றே இருக்கலாம். குடிகாரனுக்கு மரியாதை தேவை இல்லை. கத்திரிக்கோலாய் அல்ல தைக்கும் ஊசியாய் வேண்டும் - நட்பு! நட்புக்கு இலக்கணத்தை உவமைகளுடன் சொல்லியது சிறப்பு. எதற்கெடுத்தாலும் சண்டையிடுபவர்களிடம் நல்ல நட்பு இருக்காது. இணைந்து ஒத்த கருத்துடன் இருப்பதே நல்ல நட்பு. புயல் பூகம்பம் பேரழிவு புலம்பித் தவிக்கிறான் இயற்கையை அழித்த மனிதன்! இயற்கையை நீ அழித்தால், இயற்கை உன்னை அழிக்கும் என்பதை உணர்ந்து இயற்கையை அழிக்காமல் வாழக் கற்றுக்கொள் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று. புகைப்படக் காரரை அசையாமல் நிற்க வைத்தது மலையருவி! புகைப்படக்காரர் அருவியைப் படம் எடுத்தால், படத்தில் அசையாமல் விழும். அருவியை பார்த்து பிரமித்து நின்ற புகைப்படக்காரரை நூலாசிரியர் ஹைக்கூவால் படம் பிடித்தது சிறப்பு. எங்கே படுப்பதாம் மனைவி கேட்கிறாள் வீடெல்லாம் புத்தகங்கள்! இந்தக் கேள்வி எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் எல்லோர் வீட்டிலும் கேட்கும் கேள்வி. ஆம், புத்தகப் பிரியர்களுக்கு புத்தகத்தை பிரிய மனமின்றி சேகரித்தே வைப்பார்கள். நாட்டுநடப்பை ஹைக்கூவால் உணர்த்தியுள்ள நூலாசிரியர் கவிஞர் கருமலை பழம் நீ அவர்களுக்கு பாராட்டுகள்.

கருத்துகள்