நூல் : எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கைச் சரித்திரம் நூல் ஆசிரியர் : டாக்டர் கார்முகிலோன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

நூல் : எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கைச் சரித்திரம் நூல் ஆசிரியர் : டாக்டர் கார்முகிலோன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை. சென்னை 600 018. அலைபேசி 98414 36213 பக்கங்கள் 212, விலை ரூ. 300 ****** புகழ்பெற்ற திரைப்பட நடிகர், அந்தக்காலத்து சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் வாழ்க்கைச் சரித்திரம் நூலாக வந்துள்ளது. டாக்டர் கார்முகிலோன் சிறப்பாக எழுதி உள்ளார். பதிப்பாளர் கவிஞர் வசீகரன் சிறப்பான பதிப்புரை வழங்கி உள்ளார். அக்ரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் டாக்டர் கார்முகிலோன். கவிஞர் வசீகரன் திருக்குறளில் ஆழ்ந்த புலமை மிக்கவர், இசுலாமியர். இந்த இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல இணைந்தே இருப்பார்கள். மதங்கள் கடந்த சிறந்த நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கிடும் நண்பர்களின் படைப்பு இந்த நூல். தியாகராஜ பாகவதர் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். பார்த்தது இல்லை. வாழ்க்கை வரலாற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து வடித்துள்ளார். இந்த நூலின் சிறப்பினைக் கண்டு, தினமலர் நாளிதழ் விரும்பிக் கேட்டு பிரசுரம் செய்தார்கள். பொதினை மின்னல் மாத இதழில் தொடராக வந்து கொண்டு இருக்கிறது. மாதாமாதம் படித்தாலும் மொத்தமாக நூலாகப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. மிகப்பெரிய ஆளுமை பற்றி வருங்கால இளைய சமுதாயம் அறிந்து கொள்ளும்வண்ணம் ஆவணப்படுத்தி உள்ள நூலாசிரியருக்கும், பதிப்பாளருக்கும் பாராட்டுகள். நூலின் அட்டையில் வண்ணத்திலும், நூலின் உள்ளே கருப்பு வெள்ளையிலும் தியாகராஜ பாகவதர் அவர்களின் கம்பீரமான படம் உள்ளது. பதிப்பாளரின் பதிப்புரையில் தோரண வாயிலாக நூலில் உள்ள வாழ்க்கை வரலாற்றின் நுட்பத்தை மிகப் சிறப்பாக பதிவு செய்துள்ளார். பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் தான் பதிப்பாளர். அணிந்துரையைப் படித்ததும் நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்வண்ணம் அழகாக எழுதி உள்ளார். நூலாசிரியர் டாக்டர் கார்முகிலோன் பற்றிய குறிப்பும் விரிவாக உள்ளன. 24 நூல்கள் எழுதிய ஆசிரியர், பணிஓய்வுக்குப் பின் முனைவர் பட்ட ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வரலாறு நூல் எழுதுவதற்கு முன், மனம்போன போக்கில் எழுதிவிடாமல், பாகவதர் பற்றிய நூல்கள் பல வாசித்து, ஆய்ந்து, ஆராய்ந்து அந்த நூல்களின் பட்டியலையும் நூலின் தொடக்கத்திலேயே வரிசைப்படுத்தி உள்ளார். நூல் எழுத உதவிய நெஞ்சங்களின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூறி உள்ளார். அறிவு நாணயத்திற்கு எடுத்துக்காட்டாக உதவிபுரிந்த நூல்களின் பட்டியல் குறிப்பிட்டது சிறப்பு. 23 நூல்களைப் படித்து முனைவர் பட்ட ஆய்வு போல ஆய்வு செய்து மிகவும் நேர்மையாகவும், மிகையின்றி, இயல்பாக நடந்தவற்றை அப்படியே பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். பாரதி என்ற பட்டம் பலருக்கு வழங்கப்பட்ட போதும், பாரதி என்றதும் நம் நினைவிற்கு வருபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான். அதுபோல பாகவதர் என்றதும் நம் நினைவிற்கு வருபவர் எம்.கே. தியாகராஜ பாகவதர் தான் என்ற வார்த்தைகளுடன் நூலைத் தொடங்கி உள்ளார். தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்துள்ளார். கிட்டப்பாவின் பாராட்டைப் பெற்றவர் பாகவதர். தன் திரைப்படங்களுக்கு பாபநாசம் சிவன் அவர்கள் தான் பாடல் எழுத வேண்டும் என்று பாகவதர் விரும்பினார். அவரிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார். பாகவதரின் சிறப்புகளாக குறிப்பிடுகையில், உடன் பணிபுரிபவர்கள் அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும், மிகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளும் பண்பை பல இடங்களில் விவரித்து உள்ளார். அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ், திருநீலகண்டர், நவீன சாரங்கதாரா, சத்தியசீலன், சிவகாமி, பவளக்கொடி சரித்திரம் என திரைப்படங்களுக்கு அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள் நூலில் உள்ளன. பாகவதர், பி.பானுமதி-யோடு, மற்ற நடிகர்களுடன், அம்பிகாபதி திரைப்படத்தில், எம்.ஆர். சந்தானலட்சுமியுடன் பாகவதர் இருக்கும் புகைப்படம், பாகவதருடன் அம்பிகாபதி திரைப்படத்தில் நடித்த டி.எஸ்.பாலையா புகைப்படம் என இவைகள் எல்லாம் நூலில் உள்ளன. திருச்சியில் உள்ள தியாகராஜ பாகவதர் கல்லறையில் நூலாசிரியர் சென்று வணங்கிய புகைப்படம் நூலில் உள்ளது. நூலாசிரியரின் தேடலுக்கு கிடைத்த வெற்றிதான் இந்நூல். முக்கியமான சான்றுகளை ஆவணப்படுத்தி இருப்பது சிறப்பு. பாகவதர், உடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களை மரியாதையாக நடத்தி உள்ளார். மஞ்சள் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்படுகிறார். ஒருமாதம் கழித்து, அந்தக் கொலைப்பழி பாகவதர் மீது அநியாயமாக சுமத்தப்படுகிறது. சிறை செல்கிறார், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுகிறார். மறுவிசாரணை செய்து வழக்காடி, வெளியில் வருகிறார் பாகவதர். பாடலாசிரியர் பாபநாசம் சிவன் உடன், பாகவதருக்கு ஏற்பட்ட தூய நட்பு. அறிஞர்அண்ணா நாடகத்தில் கடவுள் இல்லை என்ற வசனம் பேசி நான் நடிக்க மாட்டேன் என்கிறார் பாகதவர். பாகவதருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மன்னிப்புக் கடிதம் கொடுங்கள், சிறையிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள். மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், கொலை செய்தேன் என்று பொய்யான குற்றச்சாட்டு உண்மையாகி விடும். எனவே மன்னிப்பு மடல் தரமாட்டேன், அதற்கு சிறைவாசமே மேல் என்று, உண்மைவழி நின்று, பிறகு நிரபராதி என விடுதலையாகிறார். முகமது அலி ஜின்னா அவர்களை வழக்கறிஞராக வைத்து வாதாடி வெளியே வருகிறார். இராஜாஜி தான் இந்த வழக்கறிஞரை பரிந்துரை தந்துள்ளார். சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வந்த பாகவதர் வாழ்வில், இன்னல் வந்து மீண்டு வந்த வரலாறு நனி நன்று. தோல்விக்கு துவளாத நெஞ்சம் பாகவதர் நெஞ்சம்.

கருத்துகள்