நூல் : விதைக்க வராத நட்சத்திரங்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் ஆரிசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

நூல் : விதைக்க வராத நட்சத்திரங்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் ஆரிசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி வெளியீடு : ஆசா பதிப்பகம், 1126/2 எம்.ஜி.ஆர் நகர், கீழ்க்கொடுங்காநல்லூர், வந்தவாசி வட்டம் - 604 403. திருவண்ணாமலை மாவட்டம். பக்கம் – 112, விலை - ரூ.150. ****** கவிஞர் ஆரிசன் அவர்கள் பல்லாண்டுகளாக எழுதி வரும் படைப்பாளி. ஹைக்கூ, புதுக்கவிதை, விமர்சனம், குழந்தை இலக்கியம் என பல்வகை வகைப்பாட்டிலும் எழுதக்கூடிய எழுத்தாற்றல் மிக்கவர். இது புதுக்கவிதை நூல். “விதைக்க வராத நட்சத்திரங்கள்”. நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. இந்த நூலை கவியருவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். நா.வே. அருள் அவர்கள் ‘மரம் பார்த்து அமரவில்லை புத்தர்’ என்று தலைப்பிட்டு சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளார். விமர்சனங்கள் எழுதி சாதனை புரிந்துவரும் சேலம் பொன். குமார் அவர்களும், மகாகவி இதழாசிரியர் வதலை பிரபா அவர்களும் அணிந்துரை நல்கி உள்ளனர். நூலாசிரியர் கவிஞர் ஆரிசன் என்னுரையில், மனதுக்குள் கருவாயிருந்தது முளைத்து செடியாகி, வளர்ந்து மரமாகி, பூத்துக் காய்கனிகளை தருகிற விருட்சம் தான் இலக்கியம்.என்கிறார். அப்படி வடித்த புதுக்கவிதைகளின் தொகுப்புத்தான் இந்நூல். எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? எப்போது வருகிறது? எங்கு வருகிறது? என்று நதிமூலம் ரிஷிமூலம் அறிய முடியாமலேயே எதையும் சட்டை செய்யாமல் புதுப்புது இசையில் சங்கீதத்தோடு தனக்கான பாதையிலே பயணித்துக் கொண்டு இருக்கின்றன ஆறுகளும்! ஓடைகளும்! ஆறுகளும் ஓடைகளும் பயணிப்பதை உற்று நோக்கி அதன் ஓசையை ரசித்து வடித்த புதுக்கவிதை நன்று. எப்படி? ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை எல்லாம் ஆறுகள் பொருட்படுத்துவதில்லை, அதன் வழியில் அவை மகிழ்ச்சியாகப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். நெய்தவனின் வலி முழுக்க / தறிக்குழி சுமக்க கைகளின் இழுபறியில் / உந்துவிசை முறுக்க திரைப்பாடல் அரங்கேற / நாடாவின் மையத்தில் கரை கடக்க முடியாமல் / நெசவு சுருட்டிப் போட்டது சூழல் மரம் போர்த்திக் கொண்டது மானம் காக்க / பசித்திருக்கும் ஆடை? நெசவாளியின் உழைப்பை கண்முன் கொண்டு வந்து ‘ஆடை நெய்கிறான் பசியோடு’ என்று முத்தாய்ப்பான முடிப்பு சிறப்பு. ‘நெசவாளி / வாழ்க்கை / கந்தல்’ என்ற எனது ஹைக்கூ நினைவிற்கு வந்தது. நூல் விலை ஏற்றம், மின்தட்டுப்பாடு என நெசவாளியின் வாழ்க்கையும் சிக்கலில் தான் உள்ளது. புதுக்கவிதைகள் நீண்ட வசன கவிதைகளும் உள்ளன, சின்னக் கவிதைகளும் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் ஆரிசன் சமுதாயத்தை உற்று நோக்கி மனதில் பட்டதை புதுக்கவிதையாக வடித்து வாசகர்களை சிந்திக்க வைக்கிறார். எழுதும்போது அவருக்கு தோன்றியது போலவும், வடிக்கும் போது வாசகர்களுக்கு வேறு கோணத்திலும் கருத்துக்களை விதைக்கின்றன கவிதைகள். கவனத்தோடு கடந்துபோக வேண்டி வாழ்வின் தடங்களைக் காட்டி சிரிக்கிறார் தியானத்தில் இருக்கும் புத்தர்? உண்மைதான் வாழ்க்கையை மிகவும் கவனத்தோடுத்தான் கடக்க வேண்டி உள்ளது. வாழ்க்கையை மட்டுமல்ல நடக்கும்போது சாலையையும் மிகவும் கவனத்தோடுதான் கடக்க வேண்டும். ‘கவனம் தவறினால் மரணம்’ என்ற நிலையில்தான் சாலைகள் போக்குவரத்து உள்ளன. வாழ்க்கையும் அப்படித்தான். அதனை புத்தர் அறிவுறுத்துவது போல எழுதியது சிறப்பு. புயல் காற்று / மழை சுனாமி கொரானா / விஷக் காய்ச்சல் கத்தி கடப்பாறை / வீச்சரிவாள் சாதி மத இன மொழி அரசியல் வன்மக் கொலைகள் தாண்டி கால காலமாய் / ஜெயித்து நின்று வாழ்ந்து மௌனமாய்ப் பேசுகிறது! / தலைமுறைகளைத் தாண்டியும் / வாழையடி வாழையான காதல்! ஆதாம் ஏவாள் காலம் முதல் ஏ.ஐ.காலம் ரை காதல் மட்டும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனை இன்னல்கள் இடைஞ்சல்கள் வந்தும் சில உண்மைக் காதல் காலம் கடந்து வென்று நிற்கிறது என்பதை குறைந்த சொற்கள் கொண்டு காதலின் மென்மையை நன்கு உணர்த்தி உள்ளார். உண்மையான காதல் தற்போது அதிகம் இல்லை. சில காதல் மட்டுமே உண்மையாக இருந்து, கடைசிவரை நிலைத்து நிற்கின்றன. ரணமாகி போயிருந்த என் மௌனத்தை பிராண்டிக் கொண்டிருக்கிறது இரவு. சோகத்தில் கவலையில் மூழ்கி இருப்பவனுக்கு இரவில் தூக்கம் வராமல் தவித்து வருவான். அவனுக்கு இரவு மிக நீளமானதாக இருக்கும். இரவு விரைவாக முடிந்து பகல் வராத வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பிறக்காதா என இக்கவிதை உணர்த்திடும் வரிகள் நன்று. சமாதியில் இருக்கும் அணையாவிளக்கின் ஒளியில் எப்போதும் முனகிக் கொண்டிருக்கிறது மூச்சற்றவனின் கவிதை! இறந்து சமாதியானவர்கள் யாரும் மனநிறைவோடு மன சம்மதத்தோடு இறந்திருக்க மாட்டார்கள், அவர்களின் மனதில் ஏக்கம், குறைபா,டு கவலை எல்லாம் இருந்திருக்கும். அதனை உணர்த்தும் வண்ணம் முனகிக் கொண்டிருக்கிறது மூச்சற்றவனின் கவிதை என்கிறார். புல்லாங்குழலாகாமல் இருக்கும் மூங்கில் காடுகளைப் பார்த்த கானம் இசைத்துப் பேசுகிறது காற்று! புல்லாங்குழல் ஆகிவிட்டால் அவைகள் இசைக்கும், ஆனால் ஆவதற்கு முன் உள்ள மூங்கில் காட்டில் காற்று கானம் இசைத்து கற்பிக்கின்றது. பயிற்சி தருகின்றது. புல்லாங்குழல் ஆனதும் இசைக்க வேண்டுமென காற்று சொல்லித்தருவது போல எண்ணத் தோன்றுகின்றது. நூலாசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்களின் படைப்பில் நட்சத்திரங்களையும் கவிதையில் விதைத்து வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகள்!!!

கருத்துகள்