அ. பாரி
இயக்குநர் பாக்யராஜ் அவர்களைப் பற்றி , அவ்வப்போது சின்ன சின்னதாக நான்கைந்து பதிவுகள் எழுதியிருக்கிறேன்.. அவரின் திரைப்படங்கள் பற்றி எழுதிய வகைக்கு 'மல்லிகை மகள்' மாத இதழுக்கு எழுதிய 'முத்திரை பதித்த திரைப்படங்கள்' தொடருக்காக எழுதிய இந்தக் கட்டுரை இப்போது ரொம்ப ஸ்பெஷலாகத் தெரிகிறது. பாக்யராஜ் அவர்களின் திரைக்கதை நுட்பம் குறுத்து இதில் ஓரளவு பேசியிருக்கிறேன் என்கிற நிறைவு வருகிறது.
முந்தானை முடிச்சு
1983 ல் பாக்யராஜ் அவர்கள் எழுதி இயக்கி மாபெரும் வெற்றியடைந்த இந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தினை, சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்த போதுதான், என்ன மாதிரி ஒரு திரைக்கதை இது என்று வியந்து பார்க்கும் அனுபவப் பார்வை கூடி வந்திருப்பதை உணர முடிந்தது.
இந்தப் படம் பேச இருக்கிற விஷயத்தைப் பற்றி முன்னோட்டம் போல, ஒரு வயதான தம்பதியின் அன்பு பரிமாறலைக் காட்டி தொடங்குகிற போதே, தேர்ந்த எழுத்தாளனின் சிறுகதையை வாசிப்பது போல ஓர் அனுபவத்தைத் தந்து எடுத்த எடுப்பிலேயே உள்ளிழுத்துக் கொள்கிறது பாக்யராஜின் திரைக்கதை.
பஞ்சாயத்துக் காட்சி ஒன்றின் வழி, எடுத்த எடுப்பிலேயே கதையின் களம் மற்றும் அதில் உலவ இருக்கும் மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்துவிடுகிறார் பாக்யராஜ். பஞ்சாயத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்கும் பெண்களை விலக்கிக் கொண்டு, நாயகி ஊர்வசி அறிமுகமாகிற காட்சியிலேயே துடுக்குத்தனம் நிறைந்த நாயகியின் குணவார்ப்பு எப்படியானது என்பதற்கு தூபம் காட்டுபவர், அடுத்த காட்சியிலேயே, தன் அப்பாவிடம் அடி வாங்கி வலிப்பது போல நடித்து, பிறகு ஒன்றுக்குள் ஒன்றாக அணிந்திருக்கும் பாவாடைகளை கழட்டுகிற இடத்திலேயே அவளைக் குறித்து முழு சித்திரத்தையும் நமக்குக் கொடுத்து விடுகிறார்.
அடுத்து நாயகனின் அறிமுகம். நாயகி தனக்கு வர இருக்கும் கணவன் குறித்த எதிர்பார்ப்பை ‘நாம்புடிக்கும் மாப்பிள்ளைதான் நாடறிஞ்ச மன்மதன்தான்’ என்று பாடலாகப் பாடிக்கொண்டு வருகிறாள். பாடல் முடிகையில்,பேருந்தில் இருந்து கக்கா போன கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு நாயகனான பாக்யராஜ் இறங்குகிறார். மன்மதனை எதிர்பார்க்கும் நாயகி, கைக்குழந்தையோடு அறிமுகமாகும் நாயகன் என வித்தியாசமான இரு குண வார்ப்புகள் எப்படி ஒன்று சேர்வார்கள் என்கிற சுவாரஸ்ய எதிர்பார்ப்பை அங்கேயே தொடக்கி வைத்துவிடுகிறார் இயக்குநர்.
தொடக்கத்தில் நாயகனிடம் விளையாட்டுத்தனமாக குறும்புகளைச் செய்து கொண்டிருக்கும் நாயகி, நாயகனின் குண வார்ப்பையும் தொடர்ந்து ரசித்துக் கொண்டும் வந்திருப்பாள். அப்படியொரு நிலையில் நாயகனின் ஃபிளாஷ்பேக் உடைபடுகிற போது, அவன் மேல் அவள் கொள்ளும் காதல் லாஜிக்காகவும் ஏற்கும்படி இருக்கும்.
நாயகிக்கு காதல் வருகிற நேரத்தில், “உங்களுக்கு ஒரு பொண்டாட்டி தேவையில்லாம இருக்கலாம், ஆனால் இந்தக் குழந்தைக்கு ஒரு அம்மா தேவை” என்று தன் இரண்டாவது மகளையும் நாயகனுக்கே மணம் முடிக்கும் விருப்பத்தோடு, முதல் மனைவியின் அம்மா வந்து பேசுவார். இப்போது நாயகி ஊர்வசியின் காதல் என்னாகும், மறுமணமே வேண்டாம் என்றிருக்கும் நாயகன் என்ன முடிவை எடுப்பார் என்று திரைக்கதையில் அடுத்த சுவாரஸ்யத்தை சேர்க்கிறார்.
இந்தச் சூழலில், ஊரே நம்பும்படி பொய்யொன்றைச் சொல்லி, நாயகனிடம் கட்டாயத் தாலி வாங்கிக் கொள்கிறாள் நாயகி . இப்படி பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டவளை நாயகன் எப்படி மனதளவில் ஏற்பான் என எதிர்பாரா திருப்பத்தில் படத்தின் இடவேளை வருகிற போது அடுத்து என்னவாகும் என்கிற பரபரப்பு நம்மை ஆட்கொள்கிறது.
கதையின் போக்கு ’சித்தி கொடுமை’ என்பதை நோக்கி மெல்ல நகர்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்தே சித்தி கொடுமைக்கு ஆளாகும் சிறுவன் ஒருவன் வந்து கொண்டிருப்பான். நாயகன் ஆசிரியராக வேலை பார்க்கும் பள்ளியில் ஒரு மாணவனாக அதுவரை வருகிற அந்தக் கதாபாத்திரம், இடைவேளைக்குப் பின் திரைக்கதையின் போக்கை மாற்ற பயன்படுத்துகிற போது, அந்தச் சிறுவனுக்கு வைக்கப்பட்ட முந்தைய காட்சிகளும் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.
நாயகன், தன்னுடைய பிள்ளையும் சித்தி கொடுமைக்கு ஆளாக நேரிடுமோ என பயப்பட ஆரம்பிக்கிறான். அவன் நினைத்தது போலவே குழந்தைக்கு ஒரு பிரச்சனை நிகழ்கிறது. ‘பொய் சத்தியம்’ செய்து தன்னை கட்டாயத் திருமணம் செய்தவள், தன் பிள்ளையை இன்று என்ன செய்தாளோ என்று அரற்றும் போது, ஊருக்கு உண்மை தெரிய வருகிறது. அதைக் காரணம் காட்டி நாயகியை ஒதுக்கி வைத்துவிடுகிறான் நாயகன்.
குழந்தை விஷயத்தில் நாயகி தவறு செய்யவில்லை என்பதை உணர்ந்திருக்கிற பார்வையாளர்களான நமக்கு, நாயகனுக்கு இந்த உண்மை தெரிய வேண்டுமே என்கிற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதுவரை கலகலப்பாகச் சென்று கொண்டிருந்த கதையில் சோகம் நுழைகிறது. மிகச் சரியாக இந்த இடத்தில் தீபாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கிறார். வணிக ரீதியிலான காரணங்களுக்காக தீபா ஒரு இடைச்செறுகல் என்றாலும், நாயகனுக்கு அறிவுரை சொல்லி நாயகியோடு சேர்த்து வைக்கிற வேலையை அந்தக் கதாபாத்திரம்தான் செய்கிறது எனும் போது அந்த இடைச்செறுகலும் வலுவான காதாபாத்திரமாக மாறிவிடுகிறது.
படத்தில் மூன்று சண்டைக் காட்சிகள் வருகின்றன. அவற்றை எப்படி தன்னுடைய திரைக்கதையில் பொருத்துகிறார் என்று பார்த்தால், அங்கேயும் சுவாரஸ்யம். நாயகனின் மென் பக்கங்களையே
தொடர்சியாகப் பார்த்து வருகிற நாயகிக்கு, அவன் தைரியசாலியும்கூட என்பதை அடையாளம் காட்டுவதற்காக அமைகிறது முதல் சண்டை. அந்தச் சண்டையின் காரணம் எதுவென்று பார்த்தால், சித்தி கொடுமைக்கு ஆளாகும் சிறுவன் ,பசி தாளாமல் மாங்காய் திருடி மாட்டிக் கொள்கிறான். அந்தச் சிறுவனை தோட்டகாரர் எறும்பு புற்றில் கட்டி வைத்து விடுகிறார். அவனை காப்பாற்றப் போகும் இடத்தில், அந்தச் சண்டை நிகழும். இடைவேளைக்குப் பிறகு, சித்தி கொடுமையைப் பற்றி திரைக்கதை நகர்கிற போது, இதே காட்சி ஃப்ளாஷ்பேக்கில் வேறுவிதமாக வலு சேர்க்கிறது. அடுத்த மோதல், பள்ளிக்கூட மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவில் ஏமாற்றும் நளினிகாந்துடனானது. எதற்கு இப்போது வலிய திணிப்பது போன்ற ஒரு சண்டை என்று தோன்றும் போது, அந்த சண்டையில்தான், நாயகன் மீது நாயகி கொண்டிருக்கும் பாசத்தை அவன் உணர ஆரம்பிக்கிறான். பிறகு, நாயகி தனக்கென ஒரு குழந்தை வேண்டாம் என்கிற பெரிய முடிவை எடுத்து குடும்பக் கட்டுப்பாடு செய்ய புறப்படுகையில், நாயகன் அவளைத் தேடிப் போகும் க்ளைமாக்ஸில், இதே நளினிகாந்த் குறுக்கிட்டு பழிக்கு பழி வாங்க நிற்பார். இந்தத் தடையை மீறி, சரியான நேரத்திற்குள் நாயகியை சந்தித்துவிட வேண்டுமே என்கிற பரபரப்பிற்கு நளினிகாந்த் கதாபாத்திர வடிவமைப்பை சரியாக பயன்படுத்துகிறார்.
தெளிந்த நீரோட்டம் போல செல்லும் எளிமையான திரைக்கதை. ஆனால் மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிப்பே தட்டாத சுவாரஸ்ய காட்சிகளும், அவை ஒன்றோடொன்று லாஜிக்கலாக பொருந்தியிருக்க விஷயங்களும், கதாபாத்திரங்களுக்கு எப்படி முழுமையான வடிவம் கொடுத்திருக்கிறார் என்கிற கோணத்திற்கும் ’முந்தானை முடிச்சின்’ மூலம் திரைக்கதை எழுதுவோருக்கு பெரிய பாடமே நடத்தியிருக்கிறார் பாக்யராஜ்.
ஹீரோக்களுக்கு என்று அன்றைய நாளில் இருந்த வரையறைகளை எல்லாம் அடித்து நொறுக்கியவர் பாக்யராஜ். தன்னுடைய உருவத்தைத் தாண்டி தனது புத்திசாலித்தனத்தால் ஹீரோவாக ஜெயித்தவர் அவர். தனது இயக்கத்தில், தானே ஹீரோவாக நடித்த அநேக படங்களிலும் நாயகனின் குண வார்ப்பில் ஓர் ஒற்றுமை இருக்கும். அந்த அந்த படங்களில் வரும் அநேக கதாபாத்திரங்களும் ஹீரோவை கலாய்த்துவிட்டு செல்வார்கள் என்பதே அது. ‘தூறல் நின்னுப் போச்சு’ படத்தில் பாக்யராஜிற்கு மாப்பிள்ளைத் தோழனாகப் போகும் துணை கதாபாத்திரமான சிவராமனை, அங்குள்ள பாட்டிகள் மாப்பிள்ளை என நினைத்துக் கொள்கிற போது, சிவராமன் குசும்பாக பாக்யராஜைப் பார்த்து சிரிக்கும் காட்சி, ‘எங்க சின்ன ராசா’வில் ராதா தன்னைப் பார்த்து சிரிப்பதாகச் சொல்லும் மண்ணாங்கட்டியிடம், “ஒன்னையப் பார்த்தா சிரிக்கிது?” என்பார் பாக்யராஜ். “பின்ன, உங்களைப் பார்த்துன்னு நெனச்சீங்களா?” என்று மண்ணாங்கட்டி பாக்யராஜை வாரிவிடுகிற காட்சி என இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். இப்படியாக படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் என்றில்லாமல் ஒரே ஒரு காட்சியில் எட்டிப்பார்க்கும் கதாபாத்திரங்கள்கூட பாக்யராஜைக் கலாய்த்துவிட்டு போவார்கள்.
முந்தானை முடிச்சில் கூட அப்படி நிறைய காட்சிகள் உண்டு. படத்தின் தொடக்கத்திலேயே ”என்னைய யாரும் ஏமாற்ற முடியாது” என்று சீரியஸாக நாயகி ஊர்வசியிடம் சொல்லிக் கொண்டு வருவார். ஆனால் ஏமாற்ற முடியாது என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ஊர்வசி கூட்டணியிடம் ஏமார்ந்து போய் விழிப்பார். பிரேயரில் கடவுள் வாழ்த்து பாடத் தெரியாத மாணவர்களை கடிந்து கொண்டு, தானே பாட ஆரம்பித்து, நான்கு வரிக்கு மேலே மறந்து தடுமாறி ஊர் மக்கள் முன் அசிங்கப்படும் காட்சி, வழியில் எதிர்படும் ஒருவர், “வாத்தியாரே வணக்கம்” என்று கைக்கூப்பிச் சொல்லும் போது, பதிலுக்கு மெலிதாய் தலையாட்டி, ஒரு கையால் வணக்கம் வைக்கும் பாக்யராஜை, “என்னத்த படிச்ச நீ, ஒரு மரியாதை தெரிய வேணாம், ரெண்டு கையால் வணக்கம் வைக்கணும்ங்கிற பண்பாடு தெரிய வேணாம்” என்றுவிட்டு போவார். இன்னொரு இடத்தில் எதிர்படும் மற்றொருவர் வணக்கம் வைக்கும் போது,எதற்கு வம்பு என பயந்து இருகரம் கூப்பி ‘வணக்க்க்க்க்கம்’ என்பார் பாக்யராஜ். “படிச்ச ஆளா டீஸண்டா வணக்கம் வைக்காம, இப்படி வச்சிக்கிட்டு இருக்க , என்னைத்த படிச்சியோ போ” என்றுவிட்டு போவார். இது போல தன்னுடைய திரைக்கதையில் தனக்குத் தானே அவர் வைத்துக் கொள்ளும் சுயபகடி காட்சிகளே, தோற்றம் குறித்த சிந்தனைகளைத் தாண்டி, நம்மில் ஒருவராக பாக்யராஜை ஏற்றுக் கொள்கிற ரசவாதத்தை நிகழ்த்துகிறது. இதன் வழி, ஒரு ஹீராவாகவும் பாக்யராஜ் ஜெயித்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஊர்வசிக்கு இது முதல் படம். ஆனால், அதற்கான எந்த ஒரு சின்ன தடயத்தையும் நம்மால் உணரவே முடியாது. கேமரா குறித்த பயம் கிஞ்சித்தும் இல்லாமல் அத்தனைப் பெரிய கதாபாத்திரத்தை அநாயசமாகக் கையாண்டிருப்பார். அன்றைய அவரின் வயதின் பின்னணியில் நோக்க எப்படி இந்த வயதில் இந்தப் பெண்ணிற்கு இது சாத்தியமாயிற்று என்று வியந்துதான் போக வேண்டியிருக்கிறது. “குழந்தை அவங்க அம்மா மாதிரி போல, நல்ல அழகா இருக்கு” என்று நாயகனிடம் செய்யும் குறும்புத்தனம், நாயகனின் பின்னணி அறிந்து அதிர்ச்சியாகி எழுந்து நிற்கிற போது காட்டும் முகபாவம், தன்னை பெரிய மனுஷியாகக் காட்டிக் கொள்ள புடவைக் கட்டிக்கொண்டு வந்து நாயகனிடம் ‘என்னைய கட்டிக்கிறியா?’ என்று நிற்கும் வெள்ளந்தித்தனம், பொய் சாட்சி சொல்லும் போது காட்டும் கள்ளத்தனம், கணவனை காப்பாற்ற வில்லனிடம் இருக்கும் அரிவாளில் கைகளை இறுக்கிப் பிடித்து போராடும் போதான உறுதி, முருங்கைகாயை வைத்து நாயகனிடம் செய்யும் சில்மிஷம் என முதல் படத்திலேயே தனது அட்டகாசமான நடிப்பால் பெரிதாகக் கவனிக்க வைத்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் 'வெளக்கு வச்ச நேரத்துல’, 'அந்தி வரும் நேரம்’, ‘சின்னஞ்சிறு கிளியே’ ,’கண்ண தொறக்கணும் சாமி’ என்று அட்டகாசமான பாடல்கள் ஒரு பக்கம் என்றாலும், பாக்யராஜின் கற்பனையில் உதித்த காட்சிகளுக்கு , தன்னுடைய பின்னணி இசை கோர்ப்பின் மூலம் உயிரூட்டியிருப்பதை ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க முடியும். உணர்ச்சிப் பூர்வமான சில இடங்களில் அவர் காக்கும் மௌனம் கூட பெரிய பாதிப்பைக் கொடுத்திருக்கும். இளையராஜாவைப் பற்றிய இந்த வரிகளை அவரின் அநேக படங்களுக்குமே பொருத்த முடியும். இந்தப் படத்திற்கு கங்கை அமரனை இசையமைப்பாளராக பயன்படுத்த வேண்டும் என்பது பாக்யராஜின் விருப்பமாக இருந்து, பிறகு ராஜாவிடம் வந்ததைப் பற்றி தனது நேர்காணல் ஒன்றில் பாக்யராஜ் பகிர்ந்திருந்தார். கிராமத்தை களமாகக் கொண்டிருந்த போதும், அத்தனை கிராமியத்தனத்துடன் இயங்காமல், வசனங்களை பெரிதாக நம்பி பயணிக்கும் இந்தத் திரைக்கதைக்கு, தன் இசையின் மூலம் ராஜா பூசியிருக்கும் கிராமியச் சாயம் போல இன்னொருவர் செய்திருக்க இயலுமா என்பது சந்தேகம்தான். ஒளிப்பதிவாளர் அஷோக் குமாரின் பங்களிப்பும் வலுவாக இருக்கும். படத்தின் தொடக்கத்தில் வரும் பரிசல் துறையின் இயற்கை வனப்பு தொடங்கி பாக்யராஜ் தங்கியிருக்கும் அந்த சிறிய வீட்டில் பாக்யராஜிற்கும், ஊர்வசிக்கும் நடக்கும் உரையாடல்கள் வரை அஷோக் குமாரின் கேமராவும் நம்மோடு நிறைய உரையாடிக்கொண்டே இருக்கும்.
இத்தனை அழகியல் விஷயங்களைக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில், ”நான் என் வேலையப் பார்க்கிறேன், நீங்க போய் உங்க வேலைய பாருங்க” என்று பெண்களும் ரசிக்கும்படி இரட்டை அர்த்த வசனங்களை, படத்தின் கடைசி நொடி வரை திரைக்கதைக்குள் சாமர்த்தியமாக நுழைக்கத் தெரிந்தவர் , என்னதான் வணிக காரணமாக இருந்தாலும் ‘வா வா வாத்தியாரே வா’ பாடலுக்கு விரசம் தொனிக்க சிறுவர்களை ஆட வைத்திருப்பதும், முதியவர்களுக்கு தீபா பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். இந்தப் படத்தினை காலம் கடந்து பார்க்கும் போது, படத்தின் கருவிலேயே பிற்போக்குத்தனங்கள் நிறைய இருப்பதையும் கவனிக்க முடிகிறது. வாத்தியார் தன்னைக் கெடுத்துவிட்டார் என்று சொல்லும் போது, அவருக்கே நாயகியை திருமணம் செய்து வைப்பதெல்லாம், இன்றைய தலைமுறையின் பார்வைக்கு எத்தனை பெரிய அபத்தம் என்று தோன்றும். எனினும், அன்றைய திரைப்படங்களில், நாயகர்களே தங்களது தங்கைகளை இதே காரணத்திற்காக வில்லன்களுக்கு கட்டி வைத்ததை பார்த்து வளர்ந்த, எண்பதுகளின் காலகட்டத்து ஆட்களின் பார்வைக்கு யதார்த்தமாகத்தான் தெரியும். அன்றைய யதார்த்தத்திலும் கூட இப்படியான நிகழ்வுகள் இருந்தன என்பதும் கசப்பான உண்மைதானே. ஒரு வகையில் எத்தனை தூரம் நம்முடைய சமூகம் முன்னேறி வந்திருக்கிறது என்பதற்கு அந்தக் காலகட்டத்தின் திரைப்படங்களைக்கூட நாம் ஆவணங்களாக அணுக முடியும்.
மொத்தத்தில் அன்றைய காலகட்டத்தை மனத்தில் இருத்திக்கொண்டு பார்த்தோமேயானால் இந்த ‘முத்தானை முடிச்சு’ நமக்கு அட்டகாசமான ஓர் அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கருத்துகள்
கருத்துரையிடுக