நூல் : இறையன்பு கருவூலம் பகுதி 2 நூலாசிரியர்: கவிஞர் இரா. இரவி மதிப்புரை: ப.மகேஸ்வரி, பிரிவு அலுவலர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

நூல் : இறையன்பு கருவூலம் பகுதி 2 நூலாசிரியர்: கவிஞர் இரா. இரவி மதிப்புரை: ப.மகேஸ்வரி, பிரிவு அலுவலர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை 600 017. தொலைபேசி 044 24342810/24310769 பக்கம்102 விலை ரூபாய் 100 இறையன்பு கருவூலம் பகுதி 2 -இன் ஆசிரியர் திரு கவிஞர் இரா. இரவி அவர்களின் நூல்களில் பெரும்பகுதியை வாசித்துள்ளேன். பெரும்பாலும் ஹைக்கூ கவிதை நூல்கள் மற்றும் நூல் விமர்சனங்கள் மதிப்புரைகள். நிறைய புத்தகங்களையும் அதன் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தி, நூலின் கருத்துகளை பகிர்வதில் ஆர்வம் உள்ளவர். இவரது ஹைக்கூ கவிதைகளில் பொதுவுடமை கருத்துக்கள், ஒழுக்கம் சார்ந்து சமூக சமநிலை, சிறுமை கண்டு பொங்கி எழும் எழுத்துக்கள், கருத்துக்கள், அதிகமாக திருக்குறளை முன்வைத்து கவிதைகள், இயற்கை சார்ந்து, இயற்கையை அழிப்பதற்கு எதிராகவும், அரசியல் நிலைகள், விவசாயத்தை ஊக்குவித்தல், கல்வி, நட்பு என தளங்கள் விரிந்து சீர்மிகுந்து அமைந்திருக்கும். இவரது படைப்புகள் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா கருத்துக்களை ஓங்கி ஒலிப்பதாக இருக்கும். தமிழ்நாடு மேனாள் தலைமை செயலாளர் திருமிகு இறையன்பு அவர்களின்பால் மிகுந்த மரியாதையும் அன்பும் பற்றும் கொண்டவர் மட்டுமல்லாது ஐயா அவர்களின் அற்புத நூல்களை வாசித்தவுடன் அதற்கான மதிப்புடைய மிக அழகாக கொடுப்பார். உடனே தனது இணையதளங்களில் பதிவிட்டும் விடுவார். இவ்வகையில் திறமையுது இறையன்பு அவர்களின் படைப்புக்கள் குறித்து இரண்டு கருவூலம் எனும் தலைப்பில் நான்கு வருடங்களுக்கு முன் ஒரு நூலை வெளியிட்டார் கவிஞர் ரவி தற்போது ஐயா அவர்களின் சமீப வெளியீடுகள் மீதான மதிப்புரைகளை தொடுத்து தொகுத்து சிறப்பான நூலாக்கி கொடுத்துள்ளார் கவிஞர் ரவி அவர்கள். திருமிகு இறையன்பு அவர்களின் 19 நூல்களுக்கான மதிப்புரையையும் முனைவர் இறையன்பு அவர்கள் உதிரா பூக்கள் நூலுக்கு கொடுத்துள்ள வாழ்த்துரையையும் மதிப்புரையையும் எடுத்துக்கொண்டு "இறையன்பு கருவூலம் பகுதி 2" என்கிற நூலை வடிவமைத்து உள்ளார் "திருக்குறள் நூறு" நூலில் மற்ற திருக்குறள் விளக்கவுரையிலிருந்து மாறுபட்டு திருக்குறளின் கருத்துக்களை சேக்ஸ்பியர் படைப்புகளோடும் மற்ற படைப்பாளிகளின் படைப்புக்களோடும் ஒப்பிட்டு காட்டி 100 கேள்வி பதில்களாக அமைத்து திருக்குறளையும் திருவள்ளுவரையும் மற்றுமொரு பரிமாணத்தில் பார்க்கச் செய்துள்ளதை கவிஞர் ரவி அவர்கள் தனது மதிப்புரையில் கூறி சிறப்பித்துள்ளார். "இறையன்பு புத்தகத் திருவிழா பேருரைகள்" நூலின் தனிச்சிறப்பாக முனைவர் இறையன்பு அவர்கள் புத்தகத் திருவிழாவில் தான் ஆற்றிய உரைகளை தொகுத்த நூலினை தனது தந்தையாருக்கு காணிக்கை ஆக்கி இருந்ததை குறிப்பிடுகிறார் ரவி அவர்கள். சிறுவயதில் தான் மேடைகளில் பேச தன் தந்தை மிக அழகாக எழுதிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து அழைத்துச் சென்று நிகழ்ச்சிகளில் பேச ஊக்கப்படுத்தியதை இறையன்பு அவர்கள் குறிப்பிட்டிருப்பதைச் சொல்லி, இந்த நூல் நடமாடும் என்சைக்ளோபீடியா என்றும் மிகத் தரமாக ஆவணமாக்கப்பட்டு உள்ளது என்றும் அழகாக பாராட்டியுள்ளார். முனைவர் இறையன்பு அவர்கள் எந்த குறிப்பும் இல்லாது அழைப்பிதழை கூட கையில் வைத்துக் கொள்ளாமல் விழா சம்பந்தப்பட்ட அனைவரின் பெயரை குறிப்பிட்டு பேசுவதையும் அவரது முழு உரையும் ஒரு எழுத்து விடாமல் அச்சுக்கு செல்ல உகந்த பிசிறில்லாத உரையாக இருப்பதையும் மிகவும் மனம் திறந்து பாராட்டி தனது ஆச்சரியங்களையும் கருத்துகளையும் வாசிப்போர் புரியும் வண்ணம் வெளிப்படுத்தி உள்ளார் கவிஞர் அவர்கள். "இறையன்பு ஓராண்டு உரைகள்" 4 தொகுதிகளையும் குறிப்பிடும்போது ஒவ்வொரு உரையும் வேறு வேறாக இருப்பதையும் எடுத்துக்கொண்ட தலைப்பை ஒற்றியும் மடைதிறந்த வெள்ளம் எனவும், தெளிந்த நீரோடை போல தெளிவாகவும் எல்லோருக்கும் புரியும்படியான இரைச்சல் இல்லாத பேச்சாகவும் திகழ்ந்துள்ளதை ஆழமாக வாசித்து நேசித்து வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் அவர்கள். உன்னையறிந்தால், நமக்குள் சில கேள்விகள், வியர்வைக்கு வெகுமதி, தவம், நட்பெனும் நந்தவனம், நாமார்க்கும் குடியல்லோம், மண்ணும் மக்களும், இனிய இறையன்பு, தென் கிழக்கு தென்றல், என் பல்வண்ண காட்சிக்கருவி, சத்சங்கம், அச்சம் தவிர், இல்லறம் இனிக்க, என இறையன்பு அவர்களின் முத்தான சத்தான அறிவுப்பூர்வமான நூல்களை ஆழமாக அகலமாக வாசித்து ஒவ்வொன்றின் சிறப்பையும் தனது மதிப்புரைகளில் முத்திரை பதித்துள்ளார் கவிஞர் இரவி அவர்கள். இதில் நான் பலமுறை வாசித்த நூல் சத்சங்கம், நட்பெனும் நந்தவனம், தென்கிழக்கு தென்றல் ஆகியவை. நான் கவிஞர் ரவி அவர்கள் குறிப்பிட்ட நூல்களை வாசித்திருந்தாலும் இரவி அவர்கள் முனைவர் இறையன்பு அவர்களின் எழுத்துக்களின் பேச்சுக்களின் சிறப்பை குறிப்பிட்டுப் பாராட்டி பகிர்ந்துள்ளதை வாசித்த பிறகு இறையன்பு அவர்களின் படைப்புக்களின் அளப்பரிய பரிமாணங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக ரசிக்க முடிகிறது. இறையன்பு அவர்களின் உதிரா பூக்கள் மதிப்புரையும் வாழ்த்துரையும் கவிஞர் இரவி அவர்களின் சிறப்பு இயல்புகளை எடுத்து இயம்புவதாக அமைந்துள்ளது. முனைவர் இறையன்பு அவர்கள் கவிஞரை புலிப்பால் இரவி என்று கவிஞரின் துரிதத்தையும், அரிதான சிறப்பான செயல்பாடுகளையும் குறிக்கும் வகையில் அழைப்பதை இறையன்பு அவர்கள் குறிப்பிட்டுள்ளதை காண முடிகிறது மகிழ்ச்சி. இறையன்பு அவர்களின் ஒவ்வொரு நூலுக்கும் மிகவும் சிறப்பாகவும் முத்தாய்ப்பாகவும் மதிப்புரை வழங்கியதோடு நூலாக்கி வெளியிட்டுள்ளது பெருவாரியான மக்களுக்கு சென்றடையும் என்பது சிறப்பினும் சிறப்பு. இறையன்பு கருவூலம் என்ற நூலின் பெயரில், கருவூலம் எனும் சொல் நிதி மற்றும் நிதி சார்ந்த, அதற்குரிய மதிப்புள்ளவற்றை தேக்கி வைத்திருக்கும் இடத்திற்கு வழங்கப்படுவது போல, இறையன்பு அவர்கள் பல ஆயிரகணக்கான நூல்களை வாசித்து, பல துறைகளில் பணியாற்றி, பல்வேறுபட்ட மனிதர்களுடன் பழக்கத்தில் இருந்து கொண்டு அவர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு, பன்மடங்கு அனுபவங்கள் பெற்றுப் படைத்த பல படைப்புகளின், ஆழ்ந்த அறிவின் தொகுப்பாக இருப்பதால் கவிஞர் இரவி அவர்கள் கருவூலம் எனும் சொல்லை நூலின் தலைப்பாக ஐயாவின் பெயருடன் இணைத்திருப்பது சாலப் பொருத்தம்.

கருத்துகள்