ஒரு புன்னகை போதுமே.*
இது
எந்திர மனசைத்
திறக்கும்
மந்திரச் சாவி.
ஆறாம் அறிவின்
மிச்ச மீதி.
கண்களில்
நம்பிக்கை
மின்னலடிக்க,
இதயத்துக்குள்
இனிப்பு மழை பெய்ய,
உதடுகள் விரிக்கும்
உற்சாகக் குடை.
அன்பின்
அடையாளமாகவும்,
கருணையின்
மொழியாகவும்,
குழந்தைகளின்
முகமாகவும்.
மாறுவேடமிட்ட மனிதம்.
எதிரிகளையும்
நட்பாக்கும்.
ஏவுகணை.
எவரையும்
வீழ்த்திவிடும்
பாசவலை.
அணுகுண்டுகளுக்கெதிரே
அன்பு ஏந்தும்
பேராயுதம்.
இது
ஹிட்லரின் பார்வையில்
யுத்தமாகவும்,
தெரசாவின் சேவையில்
கருணையாகவுமே
காட்சி தந்தது.
கண்களுக்கும்
இதயத்துக்குமிடையே
காதல் பயணிக்கும்
உதட்டு வழிச்சாலை.
மழலையப்பருவத்தில்
அட்சய பாத்திரமாகவும்,
வளர வளரத்
திருவோடாயும்
தேய்ந்து போவது.
கவலைகளுக்கு
கல்லறை.
கனவுகளுக்குக்
கருவறை.
அன்பின்
முகவரியும் இது தான்!
வெற்றியின்
மூலதனமும் இதுதான்!
இது
தோல்விகளே இல்லாத
புதிய யுத்தம்.
பகைவனுமே தருகின்ற
பாச முத்தம்.
இது
மருந்தில்லாத
மருத்துவம்.
மகான்கள் சொன்ன
தத்துவம்.
புன்னகை!
தன்னைக் கொல்லவரும்
"சத்ரு "வையும்
சரணாகதியாக்கி
முத்தமிட்டு மகிழவைக்கும்
அற்பும்.
புன்னகை!......,
தன்னைக் கொல்லவரும்
"சத்ரு "வையும்,
"சத்குரு"வாய் மாற்றும்
அற்புதம்.
உங்கள்
உதடுகளில்
இந்த
ஒற்றை மொழியை மட்டும்
உச்சரியுங்கள்.
உலகமே
இனி
யாதும் ஊரே , யாவரும் கேளீர்.
பூமியை
வெல்லவேண்டுமா!
போரிட வேண்டாம்.
ஒரே ஒரு
புன்னகை போதும்.
*நறுமுகை.*

கருத்துகள்
கருத்துரையிடுக