படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஆனந்தூர் செ. அபுதாகிர் 15 ஜூன், 2020 · தமிழர் பூமி! +++++++ # செ. அபுதாகிர் # கச்சத்தீவு தமிழர் நிலம்தான் என்பதற்கான ஆதாரங்கள் பழைய வரலாற்று ஆவணங்களில் பொதிந்து கிடக்கின்றன. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியை கி.பி. 1480களில் புயல் மற்றும் ஆழிப்பேரலை புரட்டிப்போட்டது. ராமேசுவரம், குந்துகால், புனவாசல், முயல்தீவு, பூமரிச்சான் தீவு, முல்லைத் தீவு, மணல் தீவு, அப்பா தீவு, நல்ல தண்ணீர் தீவு, உப்புத் தண்ணீர் தீவு, குடுசடை தீவு, வாலித்தீவு உள்ளிட்ட கச்சத்தீவு என நிலப்பரப்பிலிருந்து துண்டுபட்டு ஒரு டஜன் தீவுகள் உருவாகின. இது குறித்த தகவல்கள் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுகிறது. இத்தீவுகள் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாயிருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னை கவர்னர் ராபர்ட் கிளைவ் ராமநாதபுரம் ராணி மங்களேசுவரிக்கு கிபி1803ல் செய்திட்ட ஜமீன்பட்டா (இஸ்திமிரார்) கச்சத்தீவை ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குரியது என்கிறது. கிபி 1857ல் இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியாரும் இதைப் பிரகடனப்படுத்தியுள்ளார். இதற்கான ஆவணம் இன்றும் புதுச்சேரி ஆவணக்காப்பகத்தில் இருக்கிறது. இத்தீவு சேதுபதிகளுக்கு வருவாய் தருவதாக, 1947ல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது வரை முத்துக்குளிக்கும் இடமாயிருந்தது. ‘உமிரி’ எனும் நோய்கள் போக்கும் செடிகளும், ‘சாய’ வேர்களும் வளர்ந்தன. குத்தகைக்குப் பெற்ற சோழ மண்டல மரைக்காயர்கள் இதைச் சேகரித்து வந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனி 1822ல் ‘இஸ்திமரர் சனாட்’ எனும் ஒப்பந்தத்தால் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தும் இசைவு பெற்றது. ராமேசுவரத்திலிருந்து 12 மைல், இலங்கையிலிருந்து 13 மைல் தூரங்களில் நடுக்கடலில் முட்டை வடிவில் கிழக்கு மேற்காக ஒரு மைல், வடக்கு தெற்காக அரை மைல் பரப்பை கச்சத்தீவு கொண்டிருக்கிறது. ஆழமான கரைகளுடன், கிழக்கு, வடக்குக் கரைகளில் பாறைகள், மேற்கு, கிழக்கு ஓரங்களில் மணல் திட்டுகளுடன் தென்னை, புளியமரங்களும் வளர்ந்திருக்கின்றன. இத்தீவில் எண்ணெய் வளமிருப்பதை தேசிய எண்ணெய் ஆய்வுக் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. தீவைச் சுற்றிலும் வெள்ளை, பிரவுன் இறால்கள், சீலா, வாவல், காரல் மீன்கள் வளம் குன்றாமல் கிடைக்கின்றன. தமிழக மீனவர்களின் ஓய்விடமாக இருந்த இத்தீவில், தொண்டி சீனிக்கருப்பன் 1905ல் கட்டியதே புனித அந்தோணியார் கோயில். தற்போது பழைய சர்ச்சை அப்படியே விட்டு விட்டு, புதிய சர்ச் கட்டிடத்தை இலங்கை அரசு கட்டியுள்ளது. ஆண்டுதோறும் மார்ச்சில் 4 நாட்கள் நடக்கும் திருவிழாவில் இரு நாட்டு தமிழ் உறவுகள் கூடிக் கூலாவுகின்றன. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலத்து எல்லை அறிவிப்பிலோ, இலங்கையின் பழமை, வரலாற்று ஆணவங்களிலோ, டச்சு, போர்ச்சுக்கீசியர் இலங்கை வரைபடங்களிலோ கச்சத்தீவு இல்லை. ஆர்.எஸ் பிராகிரின் தொகுத்த இலங்கை தேசப்படங்களில் பிரிட்டிஷாரின் ஒற்றைப் படம் (எண்52, 1800&1802) யாழ்ப்பாணப்பட்டினத்தின் ஆட்சிக்குள் கச்சத்தீவு உட்பட்டதாக காட்டுகிறது. இதைக் கொண்டே நம் கச்சத்தீவை கைப்பற்றும் காரியத்தில் இலங்கை இறங்கியது. இதுவும் சரியான சான்றல்ல. 1796&97ல் டச்சுக்காரர்களிடம் பிரிட்டிஷார் இலங்கையைக் கைப்பற்றியதில் யாழ்ப்பாணத் தீபகற்பம் இருந்ததும், இந்தியப் பகுதியாகக்கருதி இதை பிரிட்டிஷ் அரசு சென்னையிலிருந்தே ஆண்டதும் வரலாறு. 17ம் நூற்றாண்டில் தங்கி இலங்கையை ஆய்ந்த ‘பர்னோப்’ தேசப்படம், வணிகத்திற்கு வந்த அரேபியர்கள், ஐரோப்பியர்கள், 2ம் நூற்றாண்டில் வந்த தாலமி, பிளினி, 1685 முதல் போர்த்துக்கீசியர்கள், இலங்கையை ஆண்ட ஹாலந்துக்காரர்கள்(1650&1800) என எவரது இலங்கை வரலாற்றுப் படங்களிலும் கச்சத்தீவு பற்றிய தகவல் ஏதுமில்லை. வரலாற்று அறிஞர் சர்ஜேம்ஸ் டென்னன்ட்(1859) தனது நில நூலிலும் இத்தீவைப் பற்றி குறிப்பிடவே இல்லை. எனினும் 1920 முதல் கச்சத்தீவை தனக்கான நிலம் எனக் கூறி வந்த இலங்கை அரசு, 1921 அக்.24ல் கொழும்பில் மீன்பிடி எல்லை வகுப்பிற்கான மாநாட்டில் கச்சத்தீவை கடந்து 3 மைல் தூரம் வரை எல்லை வகுக்க பிரிட்டிஷ் இந்தியக் குழுவிடம் வலியுறுத்தியது. 1956க்குப்பிறகு இந்தியா தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை அதிகரித்து அறிவித்தபோது, போட்டியாக இலங்கையும் தன் எல்லையில் கச்சத்தீவைச் சேர்த்து அறிவித்தது. இப்போட்டி அறிவிப்புகள் 1970களிலும் வெளியிடப்பட்டன. பிரதமர் இந்திரா காந்தி 1973ல் இலங்கை சென்றதும், இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுகளும், 1974ல் சிரிமாவோ பண்டாரநாயக்கா இந்தியா வந்ததும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. முடிவில், கச்சத்தீவு நமக்கானது என்ற ஆதாரங்கள் தமிழர்களிடம் ஏராளமாக இருந்தும் ‘அண்டை நாடுகளுடன் சமாதான சக வாழ்வு’ என்ற இந்தியக் கொள்கை ஜெயித்து, ஆனால் தமிழன் தோற்றுப் போனான். ஆம் 1974ம் ஆண்டில் ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவை இலங்கையிடம் இழந்தோம். இன்றைக்கு தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும், மீன்பிடிப் படகுகள் அடித்து நொறுக்கப்படுவதும் என துயரத்தின் உச்சத்தில் தமிழக மீனவர்கள் தவிக்கின்றனர். கச்சத்தீவு கிடைக்கும் வரை தமிழக மீனவர்களின் அவலம் அகலப்போவதில்லை

கருத்துகள்