என்னவள்! - கவிஞர் இரா. இரவி

என்னவள்! - கவிஞர் இரா. இரவி ***** தனக்கென வாழ்க்கையை வாழாதவள் எனக்கென வாழ்க்கையை வாழ்ந்தவள்! உயிருக்குப் போராடிய போதெல்லாம் உடன் உதவி என்னைக் காப்பாற்றியவள்! பத்திய உணவை சமைத்துத் தந்தவள் பத்தரை மாற்று தங்கமாக வாழ்ந்தவள்! தியாக வாழ்க்கை வாழ்ந்து காத்தவள் தாயாக மகன்களுக்கு கடமையைச் செய்தவள்! கோலாகலமாக மகன்கள் திருமணத்தை நடத்தியவள் கொண்டாடி மகிழ்ந்து மகிழ்ச்சியில் திளைத்தவள்! சமையல் கலையில் சிறந்து விளங்கியவள் சமைத்து வழங்கி உண்ணவைத்து ரசித்தவள்! சுறுசுறுப்பின் திலகமாக வாழ்க்கை வாழ்ந்தவள் சோம்பி ஒருநாளும் படுத்து இருக்காதவள்! தினந்தோறும் பூக்கள் வாங்கிக் கட்டி தவறாமல் கடவுள்களுக்கு சூட்டி மகிழ்ந்தவள்! சித்திரை வீதியை மூன்றுமுறை தினம் வலம்வந்தவள் சித்ரா என்றதும் ஓடோடி வந்தவள்! முப்பத்தி நான்கு ஆண்டுகள் உடன் வாழ்ந்தவள் முத்திரை பதித்து வாழ்வாங்கு வாழ்ந்தவள்! சாலை விபத்தில் அகால மரணமடைந்தவள் சாலைகளைப் பார்த்தாலே நினைவில் வருபவள்! உலகை விட்டு மறைந்து விட்டவள் உள்ளத்தை விட்டு என்றுமே மறையாதவள்!

கருத்துகள்