புகழ்வணக்கம்

மகுடேஸ்வரன் நம் கவிதைக் கொடிவழியின் மூத்த பெருவேர் அறுந்துவிட்டது. இன்றைக்குள்ள புதுக்கவிதை வடிவம் மக்கள்வரைக்கும் பரவி நிலைத்துள்ளது என்றால் அதற்குக் காரணம் கோயம்புத்தூரிலிருந்து எழுபதுகளில் வெளிவந்த ‘வானம்பாடி’ என்ற சிற்றிதழ்தான். அதன் ஆசிரியராக விளங்கியவர் கவிஞர் புவியரசு. வாழும் கவிஞர்களில் மிகவும் மூத்தவர் என்று ஐயா புவியரசைச் சில நாள்களுக்கு முன்னர் நினைத்து மகிழ்ந்தேன். அகவை தொண்ணூற்றாறு. நூறாண்டு காணும் முன்னர் மறைந்துவிட்டார். ஐயா புவியரசு என்னோடு பகிர்ந்துகொண்ட வரலாறுகள் ஆயிரம். ‘வானம்பாடி’ என்னும் இதழ் இருநூறு படிகள்வரைக்கும்தான் அச்சிடப்பட்டனவாம். அவரே அதன் ஆசிரியர். (எல்லாரும் சேர்ந்து ஆரம்பிச்சதுதானுங்க. என்கிட்ட பொறுப்பைக் கொடுத்துட்டாங்க...). ஆனால், ஒவ்வோர் இதழையும் இருநூறு பேர் படித்தார்களாம். சிற்பி, அப்துல் ரகுமான், தமிழன்பன், மேத்தா, தமிழ்நாடன், புவியரசு, வைரமுத்து என்னும் வானம்பாடிப் பரம்பரைக் கவிஞர்கள்தாம் அன்றைய கவியரங்கங்களின் சுடரொளிகள். அவர்கள் பங்கேற்கும் கவியரங்கங்களுக்குப் பத்தாயிரத்தினர் வரைக்கும் கூடுவார்களாம். வானொலி ஒலிபரப்புகளில் கவியரங்கங்கள் நேயர் கூடுகையால் நெரிசலுறும். அந்தப் பெரும்போக்கு நிலைபெற்றமையால்தான் யாரும் கவிதை எழுதலாம் என்ற நிலை வந்தது. இன்றைக்கு எழுதப்படும் உரைநடைக் கவிதையால் ஒருவர் ஓர் அடையாளத்தைப் பெற்றிருப்பார் எனில் அவர் வானம்பாடிக் கவிகள் வாழ்ந்த திக்கை நோக்கி வணங்கக் கடன்பட்டவர். வானம்பாடிகள் நம் காலத்தின் பெரும்பணிப் பெற்றியவர்கள். வரலாற்றுத் தலைமக்கள். வானம்பாடி இதழில் புரட்சிக் கருத்துகள் மிக்கிருக்கும் கவிதைகளை வெளியிட்டமையால் இதழாசிரியர் என்ற முறையில் அடிக்கடி நள்ளிரவில் வந்து காவல்துறையினர் அழைத்துச் செல்வார்களாம். வெளியாகும் இதழ்தோறும் இந்நிகழ்ச்சி நடக்குமாம். வெறும் ஐம்பது இதழ்கட்குள் (அவ்வளவுகூட இருக்குமா என்பது ஐயம்) வெளியான வானம்பாடி இதழ் இந்நூற்றாண்டின் கவிதைப் போக்குகளை மாற்றியது என்றால் மிகையில்லை. அப்போது பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பெரும்பாலும் தம் சம்பளம் முழுவதும் இதழ்ச்செலவுக்கே சரியாகிவிடும் என்றார். “வைகறை விடியலுக்கு வார்த்தைத் தவமிருக்கும் வானம்பாடிகளே... ஓ வானம்பாடிகளே... ! உங்களில் யார் இந்தப் பூமி உருண்டையைப் புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை எழுதப் போகிறீர்கள் ?” - என்று அவ்விதழில் மு. மேத்தா எழுதிய கவிதையை மறக்க முடியுமா ? இனிமேல் நடக்கவிருக்கின்ற புரட்சி வானம்பாடி இதழில் கவிதை எழுதுவோரால் ஏற்படப்போகிறது என்ற உறுதியோடு கவிதை எழுதினார்கள். வானம்பாடி இதழ்கள் தொகுக்கப்பட்டனவா ? பொதுவுடைமை இயக்கங்களாவது இதழைத் தொகுக்கும் பணியைச் செய்யலாம், ஐயா புவியரசிடமோ, இன்றுள்ள மூத்த பெருங்கவி சிற்பியிடமோ அவை இருக்கக்கூடும். ஒருவேளை பறிமுதற்பட்டனவோ என்னவோ ! தொண்ணூற்றாறு, தொண்ணூற்றேழு காலகட்டத்தில் கமல்ஹாசனோடு இருந்த புவியரசு தம் உரையாடல்களில் என் கவிதைகள் எவ்வாறு கமல்ஹாசனால் மனப்பாடமாகச் சொல்லப்பட்டன என்று மகிழ்ந்து மடல் எழுதுவார். என்னைத் தம்மிடம் அழைத்துவரும் பொறுப்பினைப் புவியரசிடம்தான் ஒப்படைத்தார் கமல். அழைப்பின்பேரில் சென்னைக்குச் சென்ற நான் புவியரசு வீட்டினை அடைந்தேன். அப்போது அவருடைய பெயரன் புவி. அரவிந்த் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தார். அவரும் பிற்பாடு ஒரு படம் எடுத்தார். சென்னையில் முதன்முதலாக ஒருவர் வீட்டில் உணவு உண்டேன் என்றால் அது ஐயா புவியரசு வீட்டில்தான். மேற்கு மாம்பலத்தில் சிற்றம்பலம் அடுக்ககம். ’அவ்வை சண்முகி’ படப்பிடிப்பு முடிந்து வெளியாகவிருக்கின்ற நேரம் - கமல்ஹாசன் அலுவலகத்தில் எங்கள் உரையாடல். அவ்வமயம் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற ஆங்கிலப் படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. ‘அம்பிகாபதி அமராவதி’ காதல் கதையைக் கவிதை உரையாடல்களால் நிரம்பிய ஒரு படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். கவிதை உரையாடல்களைப் புவியரசு, மகுடேசுவரன் ஆகியோர் எழுதவேண்டும். பிறகு கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் ஆகியோரும் அழைக்கப்பட்டனர். ஏனோ தெரியவில்லை, அப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை. ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியரங்கில் கமலைக் கண்டபோதுகூட ‘அன்னிக்கு அந்தப் படத்தை நாம எடுத்திருக்கணும்ங்க... அது பெரிய மிஸ்’ என்று கமல்ஹாசன் வருத்தப்பட்டார். விருமாண்டி திரைப்படம் வரைக்கும் புவியரசு இராஜ்கமலில் இருந்தார். அப்படத்தில்கூட ஒரு சுடுவில் பள்ளித் தலைமை ஆசிரியராகத் தோன்றுவார். பார்த்திபனின் ‘ஹவுஸ்புல்’ திரைப்படத்திலும் பணியாற்றினார். பிறகு கோவை சரளாவை முதன்மைப் பாத்திரமாக வைத்து இந்தியத் தொலைக்காட்சிக்காகத் தொலைக்காட்சித் தொடரொன்றை இயக்கினார். பெயரன் அரவிந்தின் இயக்கத்தில் ஒரு கோடி உரூபாய் செலவில் (அன்றைக்கே) ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார். (தொண்ணூத்தேழு இலட்சம் செலவாயிடுச்சுங்க). படம் வெற்றி பெறவில்லை. இம்முயற்சிகட்குப் பிறகு அவர் திரையுலகிலிருந்து விலகி ஊர்ப்பக்கம் வந்துவிட்டார் என நினைவு. “நாம இருக்கிறதனால அவங்களுக்கு எல்லாம் நட்டம்தானுங்க வருது. அதான் வந்துட்டேன்...” புவியரசுடன் பேசிக்கொண்டே சென்னைத் தெருக்களில் நடந்திருக்கிறேன். நர்மதா, கண்ணதாசன் பதிப்பகம் என அழைத்துச் சென்றார். நர்மதாவில் ‘இங்க பாருங்க... உங்க புத்தகம் இங்கே இருக்கு...’ என்று ஆர்வத்தோடு காண்பித்தார். புவியரசு அறிமுகப்படுத்திய பிறகு “உங்க கவிதைத் தொகுப்பெல்லாம் இனிமேல் நாங்க போடறோம். எங்ககிட்ட கொடுத்துடுங்க...” என்று நர்மதா இராமலிங்கம் கூறினார். சுஜாதாவின் தொடக்கக்காலக் கதையான ‘கரையெல்லாம் செண்பகப்பூ’வைத் திரைப்படமாக்க முயன்றதிலிருந்து அவருடைய திரைப்பட முயற்சிகள் இருந்தன. சென்னைத் தெருக்களில் அவர் நடந்துகொண்டே இருந்தார். ”ஐயா... இந்தத் துறையை நம்பி நான் வரலாமா ? மெய்யாய்த் தங்கள் பரிந்துரையென்ன ?” என்று கேட்டிருக்கிறேன். “இந்த இருபதாண்டுகளாக நான் கண்டது ஒன்றுமில்லை... உங்களைப் போன்ற இளைஞர்கட்கு நான் பரிந்துரைக்கமாட்டேன். இது முதலில் நம்மைப் போன்றவர்கட்கான துறையாகச் சொல்ல முடியவில்லை” என்றார். நாமாக இங்கே வந்து திரியக்கூடாது, முறையான அழைப்பிருப்பின் வரலாம் என்று முடிவெடுத்தது அன்றுதான். இது நடந்தது 1997. சில ஆண்டுகட்கு முன்னர் நடந்த கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழாவில் புவியரசோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள வாய்த்தது. தம் உரை முழுவதுமாக என்னைப் பற்றிய கவிதைகளோடு எடுத்துச் சொன்னார். ஐயா புவியரசு போன்ற வெண்மனத்தாரை இனி எந்நாளும் பார்க்க இயலாது. அவருடைய இலக்கியப் பணிகட்கு முன்னர் இன்றைய இலக்கியத்து ஆளுமைகள் ஒருவரும் முன்னிற்க முடியாது. சிறிய அடையாளத்தையோ முன்னிறுத்தலையோ ஒருபோதும் எதிர்பார்க்கமாட்டார். கோவையின் மண்ணின் மைந்தர்களான கோவை ஞானியையோ, ஐயா புவியரசையோ வைத்துத்தான் கோவையில் எவ்வோர் இலக்கிய அமைப்பும், இலக்கிய நிகழ்ச்சியும் நடந்திருக்கவேண்டும். அவ்வளவு மூத்தவர்கள். நடந்ததா தெரியாது. அவர்களும் எளிதில் ஒத்துப்போய்விடமாட்டார்கள். புவியரசு மொழிபெயர்த்த புத்தகங்களின் பட்டியல்கூட முழுமையாக இல்லை. பல நூறு நூல்களை மொழிபெயர்த்திருப்பார். அவற்றில் ‘மிர்தாதின் புத்தகம்’ என்ற ஒன்றையாவது நீங்கள் படித்திருக்கவேண்டும். நான் பரிந்துரைக்கும் தலைசிறந்த பத்து நூல்களில் ஒன்றாக எப்போது அந்நூல் இருந்திருக்கிறது. புவியரசு மொழிபெயர்த்தார் என்றால் அந்நூல் இலக்கணப் பிழையற்ற மொழிபெயர்ப்பு. தமிழ் இலக்கியத்திற்கும் - முதன்மையாகப் புதுக்கவிதைக்கும், தமிழ் இதழ்த்துறைக்கும், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கும் அவராற்றிய பணிகள் தந்நேரும் நிகரும் இல்லாதவை. வாழ்க்கையில் அவரோடு நடந்த காலடிகளும், நிகழ்த்திய உரையாடல்களும், பெற்ற வழிகாட்டல்களும் என் கொடுப்பனைகள். அவருடைய மறைவிற்கு ஆழ்ந்து இரங்குகிறேன். கண்ணீர் வணக்கங்கள் !

கருத்துகள்