படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய முக்கியமான, ஆழமான படைப்பு! எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநருமான “கீதா இளங்கோவன்” இயக்கத்தில், தமிழில் புதிதாக அறிமுகமாகியுள்ள 'கதை ஷார்ட்ஸ்' (Kadhai Shorts) செயலியில் வெளியாகியுள்ள மைக்ரோ சீரிஸ் (Vertical short-drama format) தான் "கூரைப்பல்லியும் கவிதாவும்" (Kavithavum Kooraippalliyum). பெண்களின் மன உலகையும், இல்லத்தரசிகளின் எதார்த்த வாழ்க்கையையும் வெறும் 2 நிமிட அத்தியாயங்களுக்குள் மிக ஆழமாகப் படைத்து உள்ளார். கதை நாயகி கவிதா, ஒரு நடுத்தரக் குடும்பத்து இல்லத்தரசி. கணவர், பிள்ளைகள், மாமனார், படுத்த படுக்கையாக இருக்கும் மாமியார் என வீட்டின் ஒட்டுமொத்தப் பொறுப்புகளையும் தன் தோளில் சுமப்பவர். "நான் இல்லனா இந்த குடும்பமே ஓடாது, ஸ்தம்பிச்சு போயிடும்" என்ற தீவிரமான நம்பிக்கையோடு ஓடி ஓடி உழைக்கிறார். தன்னை முற்றிலும் மறந்து, குடும்பத்துக்காகவே வாழ்கிறார். ஒரு கட்டத்தில், ஒரு விபத்து காரணமாக கவிதா சில காலம் கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார். அவர் இல்லாத அந்த நாட்களில், குடும்பம் என்ன ஆனது? ஸ்தம்பித்து நின்றதா? இல்லை, கவிதா இல்லாத வாழ்க்கைக்குக் குடும்பத்தினர் பழகிக் கொள்கிறார்கள்; புதிய வழக்கங்களை உருவாக்கிக் கொண்டு நகர்கிறார்கள். கோமாவில் இருந்து மீண்டு வரும் கவிதாவுக்கு இந்த எதார்த்தம் ஒரு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. தான் இல்லாமலும் இந்த உலகம் இயங்கும் என்பதை உணரும் கவிதா, அதன் பிறகு தன் சுய அடையாளத்தை, கல்லூரி காலத்தில் தான் நேசித்த இசையை எப்படிக் கண்டடைகிறார் என்பதுதான் கதை. இந்தத் தொடரின் மாபெரும் பலமே அதன் தலைப்புதான். "கூரைப்பல்லி விழுந்தால் கூரை விழுந்துவிடுமா?" என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டது. "தான் தான் இந்த ஒட்டுமொத்தக் கூரையையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்" என்று ஒரு பல்லி நினைக்குமாம். ஆனால், அது கீழே விழுந்த பிறகும் கூரை அப்படியேதான் இருக்கும். இதே 'மாயை'யில் வாழும் கவிதா போன்ற இல்லத்தரசிகளின் நிலையைத் தான் இந்தத் தலைப்பு மிகத் துல்லியமாகக் குறிக்கிறது. யதார்த்தமான அணுகுமுறை: வழக்கமான மெகா சீரியல்கள் போல வில்லத்தனம், பழிவாங்குதல், குடும்பச் சதி போன்ற நாடகத்தனம் இதில் இல்லை. நம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. சுய அன்பின் அவசியம் : "பெண்கள் தியாக உருவங்கள்" என்ற சமூகப் பிம்பத்தை உடைத்து, பெண்கள் தங்களை நேசிப்பதும், தங்களுக்கான தனித்துவத்தை வளர்த்துக் கொள்வதும் தவறு அல்ல என்பதைப் போதிக்காமல் அழகாகக் கடத்துகிறது. கவிதா மீண்டும் இசை உலகிற்குள் நுழைந்து மேடையில் பாடும்போது, அவர் போட்டியில் வென்று 'சூப்பர் சிங்கர்' ஆவது போலக் காட்டவில்லை. அவர் தடுமாறி, கற்றுக்கொண்டு, மேடையில் நிற்பதே ஒரு மாபெரும் வெற்றியாகக் காட்டப்பட்டுள்ளது. இதுவே கதையை மிக எதார்த்தமாக்குகிறது. இசை மற்றும் வசனங்கள்: எழுத்தாளர் கமலி பன்னீர்செல்வம் மற்றும் இயக்குனர் கீதா இளங்கோவனின் வசனங்கள் கூர்மை. உமாதேவியின் வரிகளில் அனிவீ (AniVee) இசையமைப்பில் உருவாகியுள்ள 'நான்தானே நான்தானே', 'மேலே வா' ஆகிய பாடல்கள் கவிதாவின் அக மாற்றத்தை அழகாகப் பிரதிபலிக்கின்றன. பொதுவாக ரீல்ஸ், மைக்ரோ சீரிஸ் என்றாலே வெறும் பொழுதுபோக்கு, காதல், பழிவாங்குதல் என்றிருக்கும் சூழலில், "கூரைப்பல்லியும் கவிதாவும்" ஒரு மிக முக்கியத் தடம் பதிப்பு. தங்களை இழந்து குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு பெண்ணும், பெண்களை வெறும் இயந்திரமாகப் பார்க்கும் ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான, ஆழமான படைப்பு இது! அனைவருக்கும் பேரன்பு வாழ்த்துக்கள். MJ. பிரபாகர் கு

கருத்துகள்