புகழ்வணக்கம்

மனதில்நிற்கும்காட்சி-11 ---------------------------- "இது நம்ம ஆளு"- 1988ஆம் ஆண்டு பாக்யராஜ்- ஷோபனா நடிப்பில் எழுத்தாளர் பாலகுமாரனின் இயக்கத்தில், பாக்யராஜின் கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு மற்றும் டைரக்ஷன் மேற்பார்வையில் வெளியான சமூக நீதி திரைப்படம். வெளியான காலகட்டத்திலும் ஒவ்வொரு முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதும் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பதிவு செய்தது. பாக்யராஜ் என்றால் முதலில் முந்தானை முடிச்சு ஞாபகம் வருவது போல், இந்தத் திரைப்படமும் ஞாபகத்தில் வரவேண்டும். கதாநாயகன் பாக்யராஜ் ஒடுக்கப்பட்ட குலத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞன். தன் தாயின் கண் ஆபரேஷனுக்காக பட்டணத்திற்கு வருபவருக்கு சரியான வேலை கிடைக்காத காரணத்தினால், பிராமணனாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பிழைப்புக்காக தொடர்ந்து அதனையே செய்து வரும் அவருக்கு அந்த ஊரின் பெரிய சாஸ்திரிகளான சீனிவாச ஐயரிடம் பழக்கம் ஏற்படுகிறது. அனைவருக்கும் உதவி செய்யும் குணம் படைத்த சாஸ்திரிகள், ஆச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பவர். அவருடைய மகளான ஷோபனாவிற்கு பாக்யராஜ் மீது காதல் வர, முதலில் அதனை மறுத்து பின்னர் ஏற்றுக்கொள்கிறார். சாஸ்திரிகளுக்கும் பாக்யராஜை பிடித்து விட திருமண ஏற்பாடு செய்கிறார். தன் தாய் தந்தையாக நடிப்பதற்கு போலியான பிராமண தம்பதிகளை இன்னொரு நண்பரின் உதவியுடன் பாக்யராஜ் ஏற்பாடு செய்ய, தாலி கட்டி முடிந்ததும் நிஜப் பெற்றோர்கள் மூலம், பாக்யராஜ் பிராமணன் இல்லை என்பது வெளிப்படுகிறது. கடும் கோபம் கொள்ளும் சாஸ்திரிகள், தன் மகளை தொடக்கூடாது இல்லையென்றால் நான் இறந்து விடுவேன் என சத்தியம் வாங்கிக் கொள்கிறார். முதல் பாதி இந்த இடத்தில் முடிவடைய, இரண்டாம் பாதி முழுக்க நாயகனும் நாயகியும் சேர்ந்தார்களா?? சாஸ்திரிகளின் மனம் மாறியதா?? என்பதுதான் திரைப்படம். இந்த திரைக்கதையின் ஓட்டத்தில் மெயின் கதையின் ஊடே நிகழும் சின்ன சின்ன நிகழ்வில் கூட சமூக நீதியை அற்புதமாக தூவியிருப்பார் பாக்யராஜ். கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் இன்றைக்கு, இப்படி ஒரு திரைப்படம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஊர்ப் பஞ்சாயத்தில் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நீதி கிடைக்க போராடுவதாகட்டும், ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த பெண், ஐயர் வீட்டுக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததையும் ஞானசம்பந்தர் சரிதத்தையும் ஒப்பிடுவதாகட்டும் என அடுக்கிக் கொண்டே போகலாம். இப்போது குறிப்பிட்ட காட்சிக்கு வருவோம். சாஸ்திரிகளுக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு பாக்யராஜ், தன் பெற்றோர்களுடன் (குமரிமுத்து- மனோரமா) அதே ஊரில் வாழ்ந்து கொண்டிருப்பார். தன்னுடைய தாய் வீட்டில் இருக்கும் ஷோபனா, பாக்யராஜ் தான் தன் கணவன் என இங்கே கிளம்பி வந்து விடுவார். சத்தியத்தை காப்பாற்றுவதன் பொருட்டு பாக்யராஜ் அவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். வீட்டிற்குள்ளும் சேர்க்க மாட்டார். ஷோபனா எதிரில் ஒரு வீடு எடுத்து தங்குவார். கட்டிய புடவையோடு வந்த தன் மருமகளுக்கு புடவை எடுப்பதற்காக ஜவுளிக்கடைக்கு அழைத்துச் செல்வார் மனோரமா. விலை குறைவான புடவைகளை எடுத்துப் போடுமாறு இவர் சொல்ல கடைக்காரன் சலித்துக் கொள்வான். அப்போது அங்கே ஷோபனாவின் தாயாரும் வருவார். இவர்கள் இருவரும் தரையில் அமர்ந்திருக்க அவருக்கு நாற்காலி எடுத்துப் போட்டு ஜூஸ் தருவான் கடைக்காரன். இதைப் பார்த்த மனோரமா கடைக்காரனிடம் சண்டை பிடித்து, முதல்ல எங்க வியாபாரத்தை முடிச்சிட்டு போங்க இல்லாதவங்கன்னா உங்களுக்கு இளக்காரமா? சண்டை பிடித்து விலை உயர்ந்த புடவைகளை எடுத்து மருமகளுக்கு தருவார். 150 ரூபாய் புடவை காட்டுமாறு சொன்னவர் 2400 ரூபாய்க்கு புடவை எடுத்துவிட்டு, ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன் என வெளியே சென்று அடகு கடைக்காரரிடம் தன் வளையல்களை அடமானம் வைக்க முயல்வார். அந்த நேரத்தில் அங்கு வரும் ஷோபனாவின் தாயார், தான் வேண்டுமென்றே மகளை வெறுப்பதாக நடித்து வீட்டை விட்டு வெளியேற்றினேன், நீங்கள் அவளை மருமகளாக பார்க்கவில்லை மகளாக பார்க்கிறீர்கள், நான் கடைக்கு வந்தது என் மகளுக்கு புடவை எடுக்க, நீங்கள் எடுத்த புடவைகளுக்கும் பணம் கொடுத்து விட்டேன் என்பார். இந்த காட்சி வரை அனைத்து திரைப்படங்களிலும் வரும். மருமகளை மகளாக பாவிக்கும் மாமியார், அதை மெச்சிக் கொள்ளும் பெண்ணின் அம்மா என உணர்ச்சிப் பிழம்புடன் இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு தொடர்வது தான் ஸ்பெஷலான பாக்யராஜ் டச். இதை அவரது திரைப்படங்களில் தொடர்ந்து பயன்படுத்தியதால் தான் பெண்களிடத்தில் அவரிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பெரியவர்கள் கொஞ்சம் பேசிக் கொள்ள வேண்டி இருக்கிறது ஒரு பத்தடி முன்னே போ என மருமகளிடம் சொல்லிவிட்டு இருவரும் உரையாடத் தொடங்குவார்கள். "அவளை ஏன் தனியாக குடி வைத்திருக்கிறீர்கள்?? வீட்டுக்குள்ள இருந்தா போக, வர, பார்க்க புடிக்க ஏதாவது நடந்திருக்கும் இல்ல??" என அம்மா கேட்க, "அட நீங்க வேற, எதிர்ல குடி வச்சதுக்கே என் பையன் எகிறி எகிறி குதிக்கிறான்... எங்கிருந்து உள்ள தங்க வைக்கிறது, அது என்னமோ தெரியலங்க ... இந்த ஒரு விஷயத்துல மட்டும் என் பையன் என்னமோ அவங்க அப்பன் மாதிரி இல்லைங்க" என்பார் மாமியார். தொடர்ந்து நிகழும் அவர்களின் உரையாடல்களும், வசனங்களைக் கேட்டு பெண்களை புன்முறுவல் பூக்க செய்யும் பாக்யராஜின் நகாசுகளும் அதுவரை இத்தனை எதார்த்தமாக யாரும் முயலவில்லை, அதற்குப் பிறகும் யாராலும் கச்சிதமாக காட்சிப்படுத்தப்பட இயலவில்லை. மனதை உருக்கும் சென்டிமென்ட் காட்சியை தொடர்ந்து இப்படி ஒரு காட்சியை பாக்கியராஜால் மட்டுமே வைக்க முடியும், இந்த ஒரு திரைப்படம் மட்டுமல்லாமல் அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் இப்படிப்பட்ட சாதாரண நிகழ்வுகளால் நிரப்பப்பட்டிருந்தது தான் தனித்துவம் நிறைந்த திரைக்கதை ஆசிரியராக இன்றுவரை அவர் புகழப்படுவதற்கு காரணம். சாதியக் கட்டுமானங்களும், ஆச்சாரக் கட்டுப்பாடுகளும் மனிதர்களைப் பிரித்து வைத்திருந்த காலத்தில், ஒரு தாயின் பேரன்பையும், பெண்களுக்கே உரிய எதார்த்தமான குறும்புப் பேச்சையும் கொண்டு அந்தப் பாகுபாட்டுச் சுவர்களைத் தகர்த்தெறிந்த 'மேஜிக்' இந்தக் காட்சி. திரையில் கண்ணீரை வரவழைக்கும் அதே கணத்தில், உதட்டில் புன்னகையையும் பூக்க வைக்கும் அந்தப் 'பாக்யராஜ் டச்'... காலம் கடந்து இன்றும் நம் நெஞ்சைத் தொட்டுச் செல்லும் ஆகச்சிறந்த கலை நேர்த்தி. #பிரபுசங்கர்_க

கருத்துகள்