புகழ்வணக்கம்

பாரதிராஜா - தமிழ் சினிமாவுக்கு மண் மணத்தைத் தந்த மகாக் கலைஞன்! இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு எளிய அஞ்சலி!. *** ‘இயக்குநர் இமயம்’ என்று அழைக்கப்பட்ட பாரதிராஜாவின் அறிமுகப்படமான ‘16 வயதினிலே’ அமர்க்களமான வெற்றிப் படமானது. அதைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்பு, சிகப்பு ரோஜாக்கள், நிறமாறாத பூக்கள், கருத்தம்மா, மண் வாசனை, கிழக்குச் சீமையிலே, முதல் மரியாதை உட்பட எத்தனை எத்தனை படங்கள், அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு திரைக்குள் நுழைந்த திரைக்கலைஞர்கள்தான் எத்தனை பேர். அறிமுகமான முதல் பட வெற்றி விழாவின்போது இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்பட்டவரான கே.பாலசந்தர், “பாரதிராஜாவின் காலைத் தொட்டு வணங்குவேன்” என்கிற அளவுக்கு பேசியது அப்போது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியது. பலதரப்பட்ட தேசிய விருதுகள் அங்கீகாரத்தை அவர் பெற்றிருந்தாலும், அவரை நேரடியாக பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். தெக்கத்தி கிராமத்துக்கே உரித்தான வெள்ளந்தியான மனம் அவருக்குள் அடிநாதமாய் எப்போதும் இருந்துகொண்டிருந்ததை அவரைச் சந்திக்கும் யாரும் உணர முடியும். அப்படித்தான் அவரைச் சந்தித்த சில சந்தர்ப்பங்களின்போது உணர்ந்திருக்கிறேன். மிக அன்பாகவும் பாசத்தோடும் பேசியிருக்கிறார். மிகவும் உரிமையுடன் திட்டவும் செய்திருக்கிறார். அவரைப் பற்றிய நதிமூலம் தொடருக்காக தேனி அல்லிநகரத்திற்குப் போய்விட்டு வந்து, அங்குள்ள ஓடு வேய்ந்த எளிய வீடு, அவரது தாயார், அவருடைய தங்கை என்று பார்த்துவிட்டு வந்து சென்னையில் அவரிடம் நான் விவரித்துக் கொண்டிருந்தபோது, முகத்தில் ஆர்வம் கொப்பளிக்க ஒரு குறும்புத்தனமாக சிரிப்புடன் அதை ரசித்துக் கொண்டிருந்தார். பிறகு அவருக்கும் அந்த ஊருக்குமான நெருக்கத்தையும், நாடகம் போட்ட அனுபவம், மலேரியா இன்ஸ்பெக்டராக ஊர் ஊராக அலைந்த அனுபவத்தையும் சொல்லிக் கொண்டு போனது ரசமான அனுபவம். அவரை நேர்காணல் செய்தபோது, எடுத்த விரிவான பேட்டியிலிருந்து ஒரு பகுதி மட்டும் உங்கள் பார்வைக்கு... *********** பாரதிராஜா. சின்னசாமி. இதுதான் பாரதிராஜாவுக்குப் பள்ளி ரிக்கார்டுகளில் இருக்கும் பெயர். அப்பா பெரிய மாயத்தேவர்; அந்தக் காலக் காங்கிரஸ்காரர். அவருக்கு பொன்னாத்தா, மீனாட்சி என்று இரண்டு மனைவிகள். இதில் பொன்னாத்தாவுக்கு ஐந்து பிள்ளைகள். மீனாட்சி என்கிற கருத்தம்மாவுக்கு மூத்ததாகப் பிறந்த பிள்ளைதான் சின்னசாமி. அப்போது குடும்பம் இருந்தது தேனியில் – பெரிய மாயத்தேவர் தெருவில். “சின்னசாமின்னு பெயரிருந்தாலும் நாங்க வீட்டிலே பால்பாண்டின்னுதான் கூப்பிடுவோம். பக்கத்திலே ஸ்கூலுக்குப் போனாலும் அவர் படிப்பிலே சுமார் ரகம். அப்பவே படங்கள் வரைவதில் ஒரு ஆர்வம். நிறையப் படங்கள் வரைவார். ஸ்கூல்லே மாறுவேடப் போட்டியில் பெண் வேடம் போட்டிருக்கிறார். அப்போ சின்ன வயசிலே ஒல்லியா இருப்பாரு... ஸ்கூல்லே படிக்கிறப்போ நாடகங்கள் போடுறதிலே ஆர்வம் வந்திருச்சு. நாடகம் போட்டு நடிக்கவும் செஞ்சிருக்கார். அப்போ இன்டர்மீடியட் வகுப்போட படிப்பு நின்னு போச்சு. சுருட்டைத் தலையும் துடுக்குத்தனமுமாக இருந்த சின்னசாமியை ஆதரிச்சு, இந்த நிலைமைக்குக் கொண்டு வந்ததிலே முக்கியப் பங்கு அவரோட அப்பாவுடையதுதான்” என்கிறார் பாரதிராஜாவின் நெருங்கிய உறவினரும் அக்கா கணவருமான எம்.முத்தையா. காங்கிரஸில் ஈடுபாட்டுடன் அல்லிநகர காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெரிய மாயத்தேவருக்குத் தனது மகனின் மீது அப்போதே ஒரு நம்பிக்கை. தாயார் தரப்பிலும் ஒரு கரிசனை. சின்னசாமிக்கு சினிமா மீது சிறு வயதிலிருந்தே ஒரு மோகம். தேனியில் உள்ள தியேட்டருக்குப் புதுப் படங்கள் வரத் தாமதமாகும் என்பதால், தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்குச் சைக்கிளிலேயே போய்ப் படம் பார்த்துவிட்டுத் திரும்புகிற அளவுக்கு சினிமா பிடித்தமான விஷயம். அந்த நாளில் அவர் மிகவும் நேசித்த நபர் சிவாஜி கணேசன். அவரது முகபாவங்கள், வசனத்தை உச்சரிக்கிற விதம், அதற்கேற்ற அங்க அசைவுகள் - இவையெல்லாம் அவர் மீது ஒரு பிரேமையை ஏற்படுத்திவிட்டன. “ஸ்கூல் படிப்பை முடிச்சப்போ, எங்க வீட்டிலேயே சிலர் ராணுவத்திலே வேலையிலே இருந்தாங்க. இவருக்கு அப்போ மலேரியா இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது; அதுவும் பண்ணைபுரம் பகுதியில். பாவலர் வரதராசன், இளையராஜா எல்லாம் குடும்பத்தோடு அங்கே இருந்த நேரம். அங்கே இவர் போனதும் அவங்களோட பழக்கம். சினிமா பத்திப் பேச அவங்க நல்ல துணையா கிடைச்சாங்க. எல்லாரும் சேர்ந்து அப்பவே நாடகமெல்லாம் போட்டிருக்காங்க. ஊர் ஊராப் போய் மலேரியா இருக்கான்னு விசாரிக்கிற வேலை சின்னசாமி அண்ணனுக்குப் பிடிக்காமப் போய், திடீரென்று சொல்லாமல் எங்கோ கிளம்பிட்டார். பிறகு செகந்திராபாத்திலே இருந்து ராணுவத்தில் சேர்ந்துட்டதா இவருகிட்டே இருந்து கடிதம் வந்தது. மூனு மாசம் இருந்திருப்பாரு... மேற்கொண்டு ராணுவத்திலே தொடர்ந்து இருக்க முடியலைன்னு அவர் கடிதம் எழுதினதும், பிறகு மலேரியா இன்ஸ்பெக்டர் வேலையைக் காரணங்காட்டி இவரைக் கூட்டியாந்தாங்க... அப்பவே சட்டுன்னு கோபம் வந்துடும் அண்ணனுக்கு...” - என்கிறார் பாரதிராஜாவின் தங்கையான பாரதி. இவரது பெயரையும், ஜெயராஜ் என்கிற தனது தம்பி பெயரையும் இணைத்தே பாரதிராஜாவாகியிருக்கிறார் சின்னசாமி. நாடக ஆசை சும்மா இருக்கவிடுமா? ‘அல்லி கலா மன்றம்’ என்று நாடகம் போடுவதற்காகவே தனது பகுதியில் உள்ள டெய்லர் ராஜாராமன், சலூன் கடை வைத்திருந்த பழ.ராசப்பன் போன்றவர்களுடன் இணைந்து சின்னசாமி அப்போது போட்ட நாடகங்கள் ‘ஊர் சிரிக்கிறது’, ‘பூட்மேக்கர் பி.ஏ.’ இதில் ‘ஊர் சிரிக்கிறது’ நாடகம் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்குப் பிடித்துப் போனதால் பல கிராமங்களில் அந்த நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். தேனியில் இருந்த நூலகமும் இவருக்குத் தீனி போட்டது. தமிழ்வாணன் எழுதின ‘மர்ம மனிதன்’ என்கிற நாவலைப் படித்து, அதை முகமெல்லாம் ஒரு ஆக்ஷனுடன் பலர் திகிலுடன் பார்த்திருக்கக் கதை சொல்லியிருக்கிறார். ஜெயகாந்தனின் ‘அக்னிப் பிரவேசம்’ கதை பிடித்துப்போக, அதை அப்படியே சினிமா தன்மையுடன் நண்பர்களிடம் விவரித்திருக்கிறார். மு.வ.வின் நாவல்களில் பிடிப்பு இருந்தாலும், பாவலர் வரதராசனுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு கம்யூனிஸப் புத்தகங்களுடனும் பரிச்சயம். “இவரோட நடிப்பையும் ஈடுபாட்டையும் பார்த்துட்டுப் பல பேர் இவரை மெட்ராஸுக்குப் போகச் சொன்னாங்க. எங்க அப்பாவுக்கும் அதில் இஷ்டம். கிளம்பினார். போனதும் அவருக்குப் பணமில்லாமல் கஷ்டமா இருக்கிறப்போ அப்பாதான் பணம் அனுப்பி வைப்பார். அப்போதே கே.ஆர்.விஜயாவிலிருந்து பல பேர் இவர்கிட்டே இருக்கிற திறமையை உணர்ந்து மதிப்புக் கொடுத்திருக்காங்க. ‘பதினாறு வயதினிலே’ கதையை ‘மயிலு’ என்கிற பெயரில் கதையாக்கி முன்பே வைச்சிருந்தார். மொட்டை மாடியில் மடக்குக் கட்டிலில் படுத்துக்கிட்டு அந்தக் கதை, ‘சிவப்பு ரோஜாக்கள்’ கதையெல்லாம் ரொம்பத் தத்ரூபமாகச் சொல்வார். சிவாஜி கணேசன், கண்ணாம்பாவின் நடிப்பு ரொம்பப் பிடிச்சு சினிமா லைனுக்குள்ளே போனவர், பிறகு அசிஸ்டண்ட் டைரக்டராகி, பதினாறு வயதினிலே படத்திலிருந்து டைரக்டராயிட்டார்...” - என்கிறார் ஆசிரியையாகப் பணிபுரியும் பாரதிராஜாவின் மூத்த சகோதரியான பாலம்மாள். டைரக்டர் அவினாசி மணி, ஏ.ஜெகந்நாதன் போன்றவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய பாரதிராஜா - அப்போதே ‘பதினாறு வயதினிலே’ படத்திற்கான மூலக்கதையைத் தயார் பண்ணி, திரைக்கதை வசனத்துடன் தேசியத் திரைப்பட நிதி உதவி நிறுவனத்திடம் கடன் கேட்டிருந்தார். அந்தக் கதையைப் பரிசீலித்த அந்த நிறுவனம் கதையைக் காரணங்காட்டிக் கடன் தரவில்லை. அதே கதைதான் சில திருத்தங்களுடன் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவிடம் சொல்லப்பட, கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் என்று பலரது தனித்துவமான நடிப்புடன் உருவான ‘பதினாறு வயதினிலே’ 77ல் வெளிவந்தபோது, தமிழ்த் திரையுலகமே அதை வியப்புடன் பார்த்தது. டைரக்டர் பாலசந்தர் போன்றவர்கள் நெகிழ்வுடன் பாராட்டினார்கள். தமிழ்நாட்டு ரசிகர்கள் - அசலான கிராமத்துச் சாயலைச் சினிமா வழியாகப் பார்த்தார்கள். முப்பது வாரங்களுக்கு மேல் ஓடிப் புதுச் சாதனை புரிந்தது அந்தப் படம். பாரதிராஜாவின் முதல் படத்திற்கே தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருது. தனது திறமையை மிகுந்த காத்திருத்தலுக்குப் பிறகு பாரதிராஜா நிரூபித்தபோது அவருக்கு வயது முப்பத்து மூன்று. “சின்ன வயசிலேயிருந்து இவன் சுறுசுறுப்பா இருப்பான். இளையராஜா, இவனெல்லாம் அப்போ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க! எல்லாரும் சேர்ந்து எங்க வீட்டிலே கிடப்பாங்க.... இப்ப இவங்க முன்னேறி இருக்காங்க... இன்னைக்குப் பாரதிராஜா குடும்பம்னு சொந்தக்காரங்க மத்தியிலே ஒரு மதிப்பு வந்ததுக்குக் காரணமே அவன்தான். அம்மா... அம்மான்னு என்னை எந்தக் குறையுமில்லாம வைச்சிருக்கான். ‘கருத்தம்மா’ படத்திற்குப் பரிசு கொடுத்தப்போ, அதை என் கையாலே வாங்க வைச்சான். பால்பாண்டி, சின்னசாமின்னு பல பெயர்களை அவனுக்கு வைச்சோம்... இன்னைக்குப் பாருங்க, அவனா வைச்சுக்கிட்ட பாரதிராசாங்கிற பெயரைத்தான் - பெத்தவ முதற்கொண்டு கூப்பிடுறோம்” - என்று தளர்ந்த குரலில் சொல்கிறார் எண்பத்தியேழு வயதான, பாரதிராஜாவின் தாயாரான கருத்தம்மா என்கிற மீனாட்சியம்மாள். தேனியை அடுத்துள்ள அல்லிநகரத்தில் கீரைக்கல் தெருவில் முன்னால் கூரைபோட்ட முகப்புடனிருக்கிறது பாரதிராஜா வளர்ந்த வீடு. அந்த வீட்டில் இன்று வசிப்பவர்கள் அவரது உறவினர்கள். சினிமாவில் பிரபலமாகும் முன்பே தேனியில் உள்ள ஜின்னிங் மில்லில் நடந்திருக்கிறது பாரதிராஜாவின் திருமணம். ‘பதினாறு வயதினிலே’யில் ஆரம்பித்து ‘அந்தி மந்தாரை’ வரை ஐம்பதுக்கும் அதிகமாக இவர் இயக்கிய தமிழ், ஹிந்தி, தெலுங்குப் படங்கள், நூறு நாள்களைத் தாண்டி ஓடிப் புதுச்சாதனையை ஏற்படுத்தியிருக்கின்றன; பல விருதுகளை வாங்கித் தந்திருக்கின்றன. இவர் அறிமுகப்படுத்தி இருக்கிற நடிகர் - நடிகைகள், இணை இயக்குநராக அறிமுகப்படுத்தின பல டைரக்டர்கள், மாநிலம் தாண்டிய திரைப்பட விழாக்கள் என்று பல சிறப்புகள் பாரதிராஜா என்கிற மனிதருக்குப் பின்னிருந்தாலும் டெக்னிக்கல் முன்னேற்றங்களை மீறி இவருக்குள்ளிருப்பது தமிழகக் கிராமத்திற்கே உரித்தான இயல்பு. “நான் கிராமத்தான். ஆங்கில வாடை வீசாத இடத்தில் பிறந்தவன். ஆங்கிலக் கல்வியறிவில் நான் கடைசியானவன். மற்றவர்கள் கூறும் அந்த ஆங்கிலப் படங்களைப் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்ததே இல்லை. நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில். என்னைச் சுற்றி நடப்பதையும், நான் கண்டதையும்தான் என்னால் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்ட முடியும். எதிலும் ஒரு நேசிப்பு இருக்கும்வரையில் சலிப்பு ஏற்படாது. தூக்கம் வராது. சினிமாவை நான் அதிகம் நேசிக்கின்றேன். அதனால் படம் எடுக்கும்போது எனக்கு வரும் சிரமங்களை, கஷ்டங்களைத் தாங்கிக்கொள்கிறேன். தொழிலை முழு மனதுடன் நேசித்தால் கட்டாயம் பலன் கிடைக்கும்.” பத்திரிகையாளர் ஒருவரிடம் பாரதிராஜா சொன்னவைதான் மேலே உள்ள விஷயங்கள். இந்த ஒளிவுமறைவற்ற தன்மைகூட ஒரு கிராமப்புறத்திலிருந்துதான் விளைய முடியுமோ என்னவோ? மணா மணாவின் ‘நதிமூலம்’ நூலிலிருந்து... (பென் பேர்டு பதிப்பகம்) 📖 Price: ₹ 245

கருத்துகள்