Ravi Swaminathan
1977ம் ஆண்டு பதினாறு வயதினிலே படம் வந்தபோது அது தமிழ் சினிமா பரம்பரியத்தையே புரட்டிப் போட்டது. அதுவரை தமிழ் சினிமா கண்ட ஹீரோயிசம், பழமைவாத கதாநாயகி, வழக்கமான சினிமா வசனங்கள், பழி வாங்கல்கள் எதுவுமே இல்லை, முக்கியமாக ஸ்டூடியோ படப்பிடிப்பு இல்லை. இந்த மாதிரி யதார்த்தமாக கிராமீய வாழ்வியலை இதுவரை திரையில் பார்க்காத தமிழ் ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடினார்கள். தேனீ மாவட்டத்தின் ஒரு வறிய குடும்பத்திலிருந்து தன் மண் வாசத்தோடும் செல்லுலாய்டு கனவவோடும் வந்த இளைஞன் பாரதிராஜாவை அள்ளி அணைத்துக் கொண்டது தமிழ் சினிமா.
தமிழக கிராமத்து பரப்பையும் கிராமீய வாழ்க்கையையும் சுருக்கி வெள்ளித்திரையில் உலவ விட்டவர் பாரதிராஜா. ஸ்டுடியோக்களில் நட்டுவைத்த கேமிராக்களை பெயர்த்து எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாக அலைந்தவர். அவர் வசனங்களில் வட்டார வழக்கு தெறித்தது. பாடல்கள் நாட்டுப்புற வாழ்வியலோடு இயைந்து இருந்தது. இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் கிராமீய களம் அமைத்துக் கொடுத்து 'இது உங்கள் இடம், இஷ்டம் போல புகுந்து விளையாடுங்கள்' என்றவர். சில சமயம் அதீதமான கிராமியம், வழக்கத்தில் இல்லாத சடங்குகள் எல்லாம் திரையில் திணிக்கப்பட்டாலும், ஜீன்ஸ் அணிந்த கிராமத்து நாயகனையோ, லிப்ஸ்டிக் போட்ட கிராமத்து நாயகியையோ பாரதிராஜா காண்பிக்கவில்லை.
கல்லைக்கூட நடிக்க வைப்பவர் என்ற பெயர் பாரதிராஜாவுக்கு உண்டு. ஏனென்றால் பாரதிராஜா தன் ஹீரோக்களை மேக்கப் ரூமில் தேடவில்லை. நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களையே ஹீரோ ஆக்கினார். ஹீரோ என்றால் அழகான முகம், சிவப்பான முகம், போட்டோஜெனிக் முகம் என்றெல்லாம் இருந்த ஹீரோ இலக்கணத்தை போட்டு உடைத்தவர். கமல், ரஜினியை வைத்து படம் எடுத்துவிட்டு அடுத்த படத்துக்கு ஹீரோவை தேடிக்கொண்டிருந்த போது தன் பக்கத்திலேயே கண்ணாடி அணிந்து நின்றுகொண்டிருந்த தன் உதவி இயக்குனர் பாக்யராஜை ஹீரோ ஆக்கினார். மதுரை கோவிலுக்கு சென்றுவிட்டு கார் ஏறும்போது குனிந்து குட் மார்னிங் சார் என்று சொன்ன ஊர் பேர் தெரியாத பாண்டியன் தான் இன்னொரு படத்தில் ஹீரோ. காதல் ஓவியம், என் உயிர்த் தோழன் நாயகர்களை எப்படி தேர்தெடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். வில்லன் சத்யராஜை காதலில் உருகச் செய்வார். நடிகர் திலகத்தின் ஆளுமையையே பொருந்தாக் காதலில் பொருத்திப் பார்ப்பார். அவர் ஹீரோக்களை நம்பவில்லை, தன்னை மட்டுமே நம்பும் தைரியம் அவருக்கு இருந்தது.
பாரதிராஜாவின் நாயகிகளும் அதே மாதிரிதான், பெரிய பின்புலம் தேவையில்லை. ஆனால் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வந்தாலும் பாரதிராஜாவின் நாயகிகள் தமிழக கிராமத்துப் பெண்களாகவே மாறிப் போனார்கள். மெழுகை உருக்கி தனக்கேற்ற பொம்மையாக மாற்றும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால் அந்த நாயகிகள் வெறும் ஹீரோவுடன் டூயட் பாடுபவர்கள் இல்லை, ஹீரோவுக்கு இணையாக வலிமையானவர்கள், சுயமாக முடிவெடுக்கக்கூடிய பாத்திரங்கள். திரையில் சில சமயம் அது குருவி தலையில் பனங்காய் வைத்தது போல இருக்கும். ஆனால், கிழக்கே போகும் ரயில் ராதிகாவும், மண் வாசனை ரேவதியும் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அவரால் உருவாக்கப்பட்ட நாயகர்கள் ஏராளம், 'ர' வரிசை நாயகிகள் ஏராளம். அதே அளவுக்கு இயக்குனர்களும் ஏராளம். அவரால் உருவாக்கப்பட்ட இயக்குநர்கள்தான் 80கள், 90களின் தமிழ் சினிமாவில் நிறைந்திருந்தார்கள்.
தமிழ் சினிமாவுக்கு கொடை கொடுத்த மிகப்பெரிய ஆலமரம் இன்று வீழ்ந்துவிட்டது. ஆனால் தான் வாழும் காலத்திலேயே பல விழுதுகளை தந்துவிட்டுதான் விழுந்திருக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக