புகழ்வணக்கம்

ஈஸ்வர் ஒளிப்படக் காதலன் இன்றும் நன்றாக என் நினைவில் இருக்கிறது. ஆம், ஒரு மாலை வேளையில், குறைந்த வெளிச்சத்தில் அவரை(பாரதிராஜா) நான் கண்டது. பாரதிராஜா அவர்களை நான் பல நிகழ்ச்சிகளில் நேரில் பார்த்திருக்கிறேன், புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால் அவரிடம் அருகில் சென்று பேசியதில்லை. கடந்த ஆண்டுதான், அவருடன் அருகில் நின்று பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜே.பி. சார்.அவர் இயக்கிய 'உலகம்மை' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தத் திரைப்படத்தை பாரதிராஜா அவர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்க, அவரது டி.நகர் அலுவலகத்திற்கு ஒரு மாலைப் பொழுதில் சென்றிருந்தோம். அப்போது, "டேய், மனசு சரியில்ல. நாளைக்கு வீட்டுக்கு வாங்க" என்றார். "சரி" என்று நாங்கள் திரும்பிவிட்டோம். மறுநாள் மாலை அவரைக் காண, அவரது நீலாங்கரை இல்லத்திற்குச் சென்றோம். சென்றபோது, "சார் நடைப்பயிற்சி சென்றிருக்கிறார்" என்று கூறினார்கள். நாங்கள் சிறிது நேரம் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் கார் வந்தது, கேட் திறக்கப்பட்டு உள்ளே வந்தது. நானும் ஜே.பி. சாரும் கார் அருகில் சென்றோம். பின்புற இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். கதவைத் திறந்தார், காரில் இருந்து இறங்க சிரமப்பட்டார். நான் எனது வலது கையை நீட்டினேன். அவர் எனது கையைப் பிடித்துக்கொண்டு ஊன்றி நின்றார். இறங்கியதும், நானும் ஜே.பி. சாரும் "வணக்கம் சார்" என்றோம். பாரதிராஜா அவர்கள் ஜே.பி. சாரிடம், "யாருடா இவன்?" என்று மெல்லிய கரகரப்பான குரலில் கேட்டார். அதற்கு ஜே.பி. சார், "பாலு மகேந்திரா அவர்களின் சிஷ்யன், மணி அண்ணாவின் அசிஸ்டன்ட்" என்றார். நான் உடனே பாரதிராஜா அவர்களின் காலைத் தொட்டு வணங்கினேன். "நல்லா இருடா" என்றார், எனது தோளில் கை போட்டுக்கொண்டு. சிறிது நேரம் ஜே.பி. சாருடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு, "உள்ளே வா" என்றார். நான் ஜே.பி. சாரிடம், "நீங்க போயிட்டு வாங்க, நான் வெளியே காத்திருக்கிறேன்" என்றேன். நான் வீட்டிற்குள் செல்லாததற்குக் காரணம், மணி அண்ணா அவர்கள் என்னிடம் பேசும்போதெல்லாம் டைரக்டர் பாரதிராஜா அவர்களைப் பற்றிப் பேசுவார். "ஷூட்டிங் ஸ்பாட்டில் சிங்கம் மாதிரி இருப்பார், அவ்வளவு சுறுசுறுப்புடன் வேலை செய்வார்" என்று சொல்லுவார். அப்படி இருந்த டைரக்டரை இப்படி மிகச் சோர்வாகப் பார்த்தது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் நான் உள்ளே செல்ல மனமில்லாமல் ஒரு முக்கால் மணி நேரம் காத்திருந்தேன். பிறகு ஜே.பி. சார் வந்ததும், நாங்கள் இருவரும் கிளம்பிவிட்டோம். அன்று இரவு முழுவதும், சாரைப் பற்றிய நினைவுகள் தான் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன. அவர் இயக்கிய திரைப்படங்களில் ஜெனிஃபர் டீச்சரும் தாசும், பாலு தேவரும், சப்பானியும் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் உடல் தான் பிரிந்திருக்கிறது. இன்னும் இந்த சினிமா உள்ளளவும், இந்த இயற்கை உள்ளளவும், அவரின் படைப்புகளோடு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். தங்களுக்கு என்னுடைய கலை அஞ்சலி, சார்.

கருத்துகள்