Jayabalan Kannan
·
பௌத்தப்பார்வையில் இயக்குநர் பாரதிராஜா
முனைவர் க. ஜெயபாலன்
பௌத்தப் பார்வையில் இயக்குநர் பாரதிராஜா அவர்களை மதிப்பிட வேண்டும். காரணம் தனது ஓய்வறியா உழைப்பின் மூலம் தன்னை ஒரு மாமனிதனாக உருவாக்கிக் கொண்ட கலைஞர் பாரதிராஜா. அவரது மொழியிலேயே சொல்ல வேண்டுமென்றால் காவிரியும் தாமிரபரணியும் ஓடும் வளமையான நஞ்சை மண்ணில் இருந்து வந்தவர் அல்ல.கல்லும் மண்ணும் கலந்த கட்டாந்தரை தேசத்திலிருந்து எழுந்து வந்த கலைஞன் அவர். அவர் பிறந்த அவர் வளர்ந்த அதே மண்ணில் இருந்து தோன்றித்தான் இசைமேதை இளையராஜாவின் உலகளாவிய கலைஞராக இன்று போற்றப்படுகின்றார். இந்த இருவரும் இணைந்து திரை உலகை செய்த மாற்றங்கள், ஏற்றங்கள் இவை யாவும் இவர்களின் மேம்பாட்டை மட்டும் மையப்படுத்தாமல் இன்னும் ஏராளமான கலைஞர்களும் தோன்றுவதற்கு வித்திட்டனர். அவ்வகையில் எவ்வளவு இருள் சூழ்ந்து இருந்தாலும் ஒளியை நேசிப்பது புத்தரின் கண்ணோட்டம். எவ்வளவு வீழ்ச்சிகள் இருந்தாலும் புத்துயிர்ப்புக்கான வளர்ச்சியை நோக்குவது பௌத்தப்பார்வை. அவ்வகையான கண்ணோட்டத்தில் தனது பல்வேறு படங்களையும் உருவாக்கிய பாரதிராஜா வளரும் எவருக்கும்; வளர்ந்த எவருக்கும் மாபெரும் உத்வேகம் தருகின்ற ஒரு கலைஞர். அவரது பல படங்களில் பௌத்தத்தின் சில முக்கிய மதிப்புகள் வெளிப்படுகின்றன. அந்த மதிப்பீடுகள் அந்தப் பார்வைகள் அவரது இயல்பான வாழ்க்கையினால் இயற்கையை சார்ந்து வாழ்ந்த தன்மையினால் உருவானவை என்றால் மிகை இல்லை.
இயற்கை மீதான நேசம்.
அரங்குகளுக்குள் இருந்த திரைக்கலையை வெட்ட வெளிகளுக்கு ஏன் அழைத்து வந்தார்?
கட்டுக்கடங்காத இயற்கைப்பேரழகை அதன் வனப்பு குன்றாமல் அப்படியே காட்சிப்படுத்த அவர் எண்ணினார். இத்தகு எண்ணமே அதாவது இயற்கையை இயற்கையோடு படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்ற உணர்வு ஒரு பௌத்த கண்ணோட்டம் என்றால் மிகை இல்லை.
பௌத்தக் கண்ணோட்டத்தில் பாரதிராஜாவின் பலம்:
மனித துயரத்தின் சித்தரிப்பு:
பௌத்தம் வாழ்க்கையின் துக்கத்தை (Dukkha) உணர்வதில் தொடங்குகிறது. பாரதிராஜாவின் படங்கள் கிராமப்புற வறுமை, காதல் தோல்வி, சாதி ஒடுக்குமுறை, பெண்களின் வேதனை போன்ற மனித துயரங்களை நேரடியாகக் காட்டுகின்றன. தேவராஜ் மோகன், பசி துரை, சிறை ஆர்சி சக்தி, ஊமை ஜனங்கள் ஜெயபாரதி உள்ளிட்ட இன்னும் பல்வேறு கலைஞர்கள் பொதுவுடமை கண்ணோட்டங்களில் நின்று ஏழை எளியோரின் துயரங்களை விவரித்த அந்த காலகட்டத்தில் எளியோரின் துயரங்களை விவரித்தாலும் அது அனைவரும் ரசிக்கும் வண்ணம் கலை அழகியல் குறையாமல் திரைப்படமாக உருவாக்குவதில் மிகுந்த கவனம் வேண்டும் என்பதை பாரதிராஜாவின் திரைப்பட அழகியல் உணர்த்தியது. ஜப்பான் நாட்டின் அக்கிரா குரோசோவா இந்தியாவின் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் உள்ளிட்ட பலரின் கண்ணோட்டங்களோடு ஒப்பிடும் வண்ணம் பல புதுமைகளை தமது திரைமொழியில் எழுதினார்.
கருணை மற்றும் ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நிற்றல்:
வேதம் புதிது, கருத்தம்மா போன்ற படங்கள் சமூக அநீதிகளை கேள்வி கேட்கின்றன. இது பௌத்தத்தின் கருணை (Karuna) மற்றும் சமத்துவ உணர்வுடன் ஒத்துப்போகிறது. அரசியல் அதிகாரத்தால் எவ்வாறு எளிய மனிதர்களின் வாழ்க்கை பலியாகிறது என்பதையும் என்னுயிர் தோழன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலமாக அவர் காட்சிப்படுத்தினார்.
பெண்களின் பால் பரிவு:
மேலோட்டமாக பார்த்தால் பாரதிராஜா பெண்களை அழகாக படம் பிடித்து காட்டுவதிலும் இசையோடும் கவிதையோடும் அவர்களை வர்ணிப்பதிலும் அவரது திரைப்படங்களில் கவனம் செலுத்தினாரோ என்று சில பாடல்களை வைத்து முடிவு எடுத்து விடக்கூடாது. நாயகியாக இருந்தாலும் தாய் கதாபாத்திரமாக இருந்தாலும் அல்லது சிறிய சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் பெண்களின் கதாபாத்திரங்கள் மிக வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் கவிஞர்களும் தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்களும் தமிழ் புதின ஆசிரியர்களும் தமிழ் மரபில் பெண்களை மிக வலிமையான கதாபாத்திரங்களாக படைத்துள்ளனர்.மாயூரம் வேதநாயகர் தொடங்கி ஜெயகாந்தன் வரை விரியும் படைப்புகளில் பெண்கள் மிகப் பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளனர். இது அவர்கள் இயல்பான கொடுக்கப்பட்டுள்ள நிலைமைக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட புனைவு என்று கருதி விட முடியாது. பெண்களின் ஆளுமைப் பண்பினை எடுத்து தருகின்ற வண்ணம் பல கதாபாத்திரங்களை பாரதிராஜாவும் உருவாக்க முயன்றார். அப்படிப்பட்ட பல பாத்திரங்களையும் வடித்து தந்தார். இயல்பிலேயே பெண்கள் எல்லா இன்ப துன்பங்களையும் தாங்கும் பேராற்றல் மிக்கவர்களாக உள்ளனர்.அதனால்தான் அவரது படங்களில் ஆண்களை விடவும் பெண்கள் வலிமை மிக்கவர்களாக உள்ளனர்.
சாதி எதிர்ப்பு:
புத்தர் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று வலியுறுத்தினார். பாரதிராஜாவும் தனது பல படங்களில் சாதி அமைப்பின் கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பகுதி மிக விரிவாக ஒரு நூலாகவே எழுதலாம். அவரது ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எவ்வாறு செதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து சிலர் எழுதி உள்ளனர். இன்னும் விரிவாக எழுத இடம் உண்டு. நாவிதர் சமுதாயத்தில் பிறந்து கவிஞனாக உருவாகும் கதை நாயகன் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் நாயகன். இவரது தந்தை எவ்வளவு மான உணர்வோடு இருந்தார் என்பதற்கு ஒரு காட்சியில் ஆற்றில் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு வீழ்வதைப் போல் படைக்கப்பட்டுள்ளது. புதிய வார்ப்புகள் படத்திலும் நாதஸ்வர கலைஞர் தனது மகளின் நிலையை எண்ணி மாண்டு போகின்ற வண்ணம் உருவாக்கப்பட்டது.தன் உயிரைத் தான் அழித்துக் கொள்ள எந்த இடத்திலும் பௌத்தம் அனுமதிக்கவில்லை. இயற்கையின் போக்கோடு இணைந்து தான் வாழ வேண்டும் என்று கூறுகிறது. ஆனாலும் இங்கே ஏழை எளியோர் வாழ்க்கையோடும் எந்த அளவுக்கு மான உணர்வு பின்னிப்பிணைந்து நிற்கிறது என்பதை இவ்வாறான பல கதாபாத்திரங்கள் நன்கு பாரதிராஜா படங்களில் உள்ளன.
நிகழ்காலத்தில் நில்
சென் பௌத்தத்தின் முக்கியமான தன்மை அந்தந்த கணங்களில் வாழ்வது என்பதாகும். இதை கலைஞர்கள் அனைவருமே பெற்றுள்ளனது என்றால் மிகை இல்லை. கூடுதலாக நுண்கலைஞர்களாக உள்ள பாரதிராஜா போன்றவர்கள் இந்த பண்பினை மிக சிறப்பாகப் பெற்றுள்ளனர். அதனால்தான் அவர் படைப்புகள் கடந்த காலத்தின் பெருமை சொல்வதாக அல்லாமல் நிகழ்காலத்தில் சமகாலத்தின் பதிவுகளாக விளங்குகின்றன. சமகால மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் தொட்டுச் செல்லவே உயர் கலைஞர்கள் எண்ணுகின்றனர். அவ்வகையில் அவரது படைப்புகள் இயங்கி உள்ளன.
திரையிலும் வாழ்விலும் ஒளிந்த சாமுராய்
ஜப்பானிய சமூகத்தில் சாமுராய் போர் வீரர்கள் ஆவர். அவ்வாறு உரிமைகளுக்காக எப்பொழுதும் போராடத் தயங்காதவராய் தனது உரிமைகள் மட்டுமின்றி பாதிக்கப்படும் பலரின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர் ஒரு சாமுராயாக அவர் விளங்கினார் என்பதை அவரது வாழ்வின் பல்வேறு கட்டங்களும் காட்டுகின்றன. தனது உரிமைக்கு மட்டுமல்ல பிறரின் உரிமைக்காகவும் குரல் கொடுப்பது நவீன காலத்தில் உயர்ந்த ஒரு ஜனநாயக கண்ணோட்டமாகும் இத்தகு கண்ணோட்டத்தை பழைய காலத்தில் இருந்து எடுத்துரைத்த மரபுகள் பௌத்த மரபும் தமிழ் மரமும் என்றால் மிகை இல்லை. கிரேக்க மரபிலும் இவ்வாறான கூறுகள் நிறைய உண்டு . அவ்வகையில் இயக்குநர் பாரதிராஜா ஆளுமையும் அவரது படைப்புகளும் விளங்குகின்றன.
மாற்றி எழுதப்பட்ட திரை மொழி.
ஆதிக்கக் கட்டமைப்புகளை கேள்வி கேட்டு மாற்றுக் கட்டமைப்புகளை உருவாக்குதல் என்பது பௌத்தத்தில் இயல்பாக அமைந்துள்ள ஓர் கண்ணோட்டம் ஆகும். வேதங்களை யாரும் படிக்கக் கூடாது என்ற ஒரு கண்ணோட்டம் பரவிய காலத்தில் அனைவரும் படிக்க தகுந்தது தம்மநீதிகள் என்று அனைவருக்கும் அவரவர் மொழிகளில் அறிய வேண்டும் என்று போதித்தது பௌத்தம். அனைவருக்கும் போதித்தது என்பதைப் போலவே அவரவர் மொழியில் என்பது எவ்வளவு ஜனநாயகம் என்பதை 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் நின்று கவனிக்கும் பொழுது அதன் ஆழத்தை உணரலாம். அந்தக் கண்ணோட்ட அடிப்படையில் திரைமொழியில் இவர்தான் கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டங்களை எல்லாம் முதல் திரைப்படத்திலிருந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் மாற்றிக் காட்டினார். எவரும் அவரவர் கலைகளில் அவரவர் எல்லைகளுக்குள் செய்ய வேண்டிய மாற்றங்களை உணர்ந்து இவரும் தனது நிலையில் நின்று அதில் வெற்றியும் பெற்றார். இப்படித்தான் பாடல்கள் அமைய வேண்டும் இப்படித்தான் உணர்ச்சிகள் சித்தரிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் மாற்றினார்.
அவரது மரபை இன்னும் ஆழப்படுத்தி பல்வேறு நிலைகளில் பல இயக்குநர்கள் கொண்டு சென்றார்கள். அவரின் சாதிய சித்தரிப்புகளை சொந்த சாதி பெருமையாக காட்ட வேண்டும் என்று சிலர் தவறாக புரிந்து கொண்டு நில உடமை மதிப்பீடுகளில் சாதிய மதிப்பீடுகளில் சென்று சேர்ந்தார்கள். அதனால் சாதிப் பெருமித நெடி மட்டும் தான் விளைந்தது. அனைவரும் சரிநிகர் சமானம் என்ற ஜனநாயக கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பதற்கு பாரதிராஜா அவர்களிடம் இருந்து சில இயக்குனர்கள் நன்கு பெற்றுக் கொண்டனர். அதனுடைய நீட்சியை இன்றைய பல திரைப்பட மறுமலர்ச்சி கண்ணோட்டங்களில் காண்கிறோம்.
மக்கள் மொழி.
பாரதிராஜா உள்ளிட்ட பல எதார்த்தவாத இயக்குனர்கள் வருவதற்கு முன்னர் திரைப்பட கலைஞர்கள் அல்லது எந்த பாத்திரத்தை எடுத்து நடித்தவர்களும் பொதுவான ஒரு மொழியிலேயே பேசினார். அந்தந்த மண்ணுக்குரிய அந்தந்த சமூக கட்டமைப்பு கூறிய மொழியை வெளிப்படுத்தவில்லை. இதை மிகச் சரியாக அந்தந்த மண்ணின் அந்தந்த கலாச்சாரத்தின் மொழியை கொண்டு வருவதில் அதாவது தமிழ் இலக்கியத்தில் வட்டார இலக்கியங்கள் அல்லது வட்டார வழக்கார்கள் என்று கூறுவது போல திரைப்படத்தில் அந்தந்த மொழியை அவர் பயன்படுத்தினார். இதுதான் ஒவ்வொரு உயிரும் தனித்துவமானவை என்று புத்தர் கூறியதைப் போல ஒவ்வொரு பண்பாடும் ஒவ்வொரு கலாச்சாரமும் போற்றுதலுக்குரியவை என்ற அடிப்படையில் அமைந்த கண்ணோட்டமாகும்.
பௌத்தக் கண்ணோட்டத்தில் விமர்சனம்:
அவரது படங்களில் உணர்ச்சிகள், காதல், பழிவாங்குதல், கோபம் போன்றவை பல நேரங்களில் தீவிரமாக வெளிப்படுகின்றன. பௌத்தம் ஆசை, பற்றுதல், வெறுப்பு ஆகியவற்றைக் கடக்க வேண்டும் எனக் கூறுகிறது. அந்த அளவில் சில கதாபாத்திரங்கள் பௌத்த இலட்சியத்திலிருந்து விலகியவையாகத் தோன்றலாம்.
சுருக்கமாக:
பாரதிராஜா திரைப்படங்களில் காணப்படும் மனிதநேயம், கருணை, சாதி எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோரின் துயரத்தின் மீதான அக்கறை ஆகியவை பௌத்தத்தின் சமூக நெறிகளோடு நெருக்கமாக ஒலிக்கின்றன. பௌத்த பார்வையில் அவர் ஒரு "கருணைமிக்க சமூக யதார்த்தவாத கலைஞர்" என்று கூறலாம்

கருத்துகள்
கருத்துரையிடுக