Navin Mozart
கல் நெஞ்சம் படைத்தவரா இளையராஜா?.
"இவ்வளவு பணமும், புகழும் இருந்தும் மகளைக் காப்பாற்ற முடியவில்லையே... அப்படியிருக்க இன்னும் எப்படி இசையமைத்துக் கொண்டிருக்கிறார்? எப்படி சிம்பொனி எழுத முடிகிறது? அவருக்கு பாசமே இல்லையா?கல்நெஞ்சம் படைத்தவரா இளையராஜா?
சமூக வலைதளங்களில் அடிக்கடி நான் பார்க்கும் கேள்வி இது.
இந்தக் கேள்வி இளையராஜாவைப் பற்றி அதிகம் சொல்லவில்லை.
நாம் துக்கத்தை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதைத்தான் அதிகம் வெளிப்படுத்துகிறது.நம் சமூகம் துக்கத்திற்கு ஒரு மேடை அமைத்து விட்டது.
அழ வேண்டும்.கதற வேண்டும்.
பொதுவெளியில் உடைந்து போக வேண்டும்.வேலையை நிறுத்த வேண்டும்.அப்படிச் செய்தால்தான் அவர் உண்மையாக நேசித்தார் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால்...
உணர்ச்சிக்கும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நேற்று , தனது வாழ்நாள் நண்பரான பாரதிராஜா மறைந்தபோது, இளையராஜா அஞ்சலி செலுத்த வந்தார்.
அவரிடம் ஊடகங்கள்,
"பாரதிராஜாவுடன் உங்களுடைய அனுபவங்களைப் பற்றி சொல்லுங்கள்..."
என்று கேட்டபோது, அவர் அமைதியாக,"இதைப் பற்றி பேசவா வந்திருக்கிறோம்.இது என்ன இடம்..
என்று மட்டும் கூறிவிட்டு,
"அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்."என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.அவர் அந்தக் கணத்தை தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மேடையாக மாற்றவில்லை.அவர் தனது நட்பை ஊடகங்களின் முன் நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் உணரவில்லை.
அதனால்...
அவருக்கு துயரமே இல்லை என்று சொல்ல முடியுமா?
ஒரு மனிதனின் அமைதியை, அவனுடைய அன்பின்மையாக எப்படி அளக்க முடியும்?
பலவிதத்தில் இதை நான் இளையராஜாவிடமுள்ள உயரிய குணமாக மிகவும் வியக்கிறேன்.
அவர் ஒருபோதும் உலகத்தின் அங்கீகாரத்திற்காக வாழ்ந்ததில்லை.தன்னை விளக்கிக் கொள்வதற்காக வாழ்ந்ததில்லை.
தன்னுடைய உணர்ச்சிகளைக்கூட உலகத்தின் அங்கீகாரத்திற்கு ஒப்படைத்ததில்லை.
பலசமயங்களில், அவரது வாழ்க்கை எனக்கு ஃப்ரிட்ரிக் நீட்ச்சேயின் சிந்தனைகளை நினைவூட்டுகிறது.
நீட்ச்சே மனிதனை இரண்டு வகையாகப் பார்க்கிறார்.
ஒருவன் வாழ்க்கையிடம் பரிதாபத்தை நாடுகிறான்.
மற்றொருவன் வாழ்க்கையை நேராக எதிர்கொள்கிறான்.
துன்பம் வந்தாலும்...இழப்பு வந்தாலும்...மரணமே வந்தாலும்...
தன் நோக்கத்தை விட்டுவிடாமல் முன்னேறுகிறான்.
இளையராஜா நீட்ச்சேயைப் படித்தாரா என்று எனக்குத் தெரியாது.
ஆனால், நீட்ச்சே கூறிய பல வாழ்வியல் உண்மைகளை அவர் தனது வாழ்க்கையில் இயல்பாகவே வாழ்ந்து காட்டியவர் போலத் தோன்றுகிறார்.
தனது மகளை இழந்த பிறகும்...
அவர் இசையை நிறுத்தவில்லை.
சிம்பொனியை நிறுத்தவில்லை.
திரைப்பட இசையையும் நிறுத்தவில்லை.
இதைக் கண்டு சிலர்,
"பணமெல்லாம் இருந்தும் மகளைக் காப்பாற்ற முடியவில்லையே... இன்னும் எப்படி வேலை செய்கிறார்?"
என்று கேட்கிறார்கள்.இந்தக் கேள்வியே ஒரு தவறான முன்னறிவிப்பில் இருந்து வருகிறது.
இசை என்பது அவருக்கு பணம் சம்பாதிக்கும் தொழில் என்று.
இல்லை.
இசை அவருக்கு ஒரு தொழில் அல்ல.
அது அவரது இயல்பு.
அது அவரது சுவாசம்.அது அவரது பிரார்த்தனை.அது அவரது வாழ்க்கையின் அர்த்தம்.
ஒரு மருத்துவர் தனது குழந்தையை இழந்தாலும் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்கிறார்.
ஒரு ஆசிரியர் தனது துயரத்திற்குப் பிறகும் மீண்டும் வகுப்பறைக்குச் செல்கிறார்.ஒரு விவசாயி தனது இழப்புகளுக்குப் பிறகும் மீண்டும் வயலுக்குச் செல்கிறார்.
அப்படியானால்...
ஒரு இசையமைப்பாளர் மீண்டும் இசையிடம் திரும்புவது ஏன் தவறாகத் தெரிகிறது?பணம் அவரது மகளைக் காப்பாற்றவில்லை.
அது உண்மை.
ஆனால் இசைதான் அந்த இழப்பின் பாரத்தைச் சுமக்க அவருக்கு வலிமையாக இருந்திருக்கிறது.
நாம் அடிக்கடி ஒரு தவறு செய்கிறோம்.
அழாதவன் துக்கப்படவில்லை என்று நினைக்கிறோம்.பேசாதவன் நேசிக்கவில்லை என்று நினைக்கிறோம்.வேலையைத் தொடர்கிறவன் உடைந்து போகவில்லை என்று நினைக்கிறோம்.
ஆனால் வாழ்க்கை அவ்வளவு எளிமையானதல்ல.சில மனிதர்கள் தங்களுடைய துயரத்தை கண்ணீராக வெளிப்படுத்துகிறார்கள்.சிலர் அதை வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறார்கள்.
இன்னும் சிலர்...
அதை படைப்பாக மாற்றுகிறார்கள்.
எனக்கு இளையராஜா அந்த மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்.
அவரது வாழ்க்கை பல விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கின்றது.அதில் முக்கியமான ஒன்று.
'துக்கத்தை உலகத்திற்குக் காட்ட வேண்டிய அவசியமில்லை.
துக்கத்தைச் சுமந்தபடியே தனது வாழ்க்கையின் நோக்கத்தைத் தொடர்வதே சிலரின் அஞ்சலி'.
அதுதான் மன உறுதி.
அதுதான் படைப்பாளியின் இயல்பு.
அதுதான், எனக்குப் இளையராஜாவை பார்க்கும்போது தோன்றுகிறது.
நீட்ஷே சிந்தனையின் முழு மனிஉருவம் இளையராஜா.
நீட்ஷே சொல்லுகின்ற அதிமானுடன் என்கிற Ubermansch சாட்சாத் இளையராஜாவே தான். கு

கருத்துகள்
கருத்துரையிடுக