புகழ்வணக்கம்

இயக்குனர் ஒருவருடையதாக இல்லாமல், மனதிற்கு நெருக்கமான ஒருவரின் இழப்பாக உணர்கிறேன். தமிழ்சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட எண்பதுகளில், கொடிகட்டிப்பறந்த 'பா' வரிசை இயக்குனர்களின் யுகம் இவரது இழப்போடு முடிவுக்கு வந்துவிட்டது. காதலுக்கும், காமத்திற்குமான இடைவெளியை மிகச்சரியாகப் புரிந்து கொண்டு அதை தனது திரைப்படங்களில் நகைச்சுவையோடு அணுகியவர். 'எங்க சின்ன ராசா' திரைப்படத்தில் ஆணுறையைக் கையில் வைத்துக்கொண்டு நாயகனும், நாயகியும் உரையாடுவதைப் போன்ற நகைச்சுவைக் காட்சி ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக வரும். ஆனால் அதில் ஆபாசம் துளிகூட எட்டிப்பார்க்காது. பெண்களும் இரசிக்கும்படியான காட்சியாக அது இருந்தது. சென்சாரில் வெட்டு விழாதபடிக்கு இதுமாதிரியான காட்சிகளை கவனத்துடன் கையாண்டவர். 'முந்தானை முடிச்சு' பெண்களை உடல்ரீதியாக அணுகிய படம் என்ற விமர்சனம் வந்தபோது, 'சின்னவீடு' படத்தின் மூலமாக பதில் சொன்னார். அதில் நாயகி பேசுகிற வசனங்கள், பெண்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தின. 'அந்த ஏழு நாட்கள்' அருமையான திரைக்கதைக்கு ஆகச்சிறந்த உதாரணம். 'இது நம்ம ஆளு' இனி நிகழ்த்தவே முடியாத அதிசயம். வாசிப்பை மிகவும் நேசித்தவர். அவர் நடத்திய 'பாக்யா' வார இதழில் வந்த கேள்வி-பதில் பகுதி மிகவும் பிரபலம். அது தனித்தொகுப்பாக வெளிவந்தது. அதில் அவர் சொல்கிற குட்டிக்கதைகள் சுவாரஸ்யமாக இருக்கும். நக்கலுக்கும் குறைவிருக்காது. 'பிட்டு படம்' பார்க்க இளவட்டங்கள் நாங்க தியேட்டருக்கு போறோம். வயசான பெருசுக எதுக்கு அங்க வர்றாங்க? என்று ஒரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார். கவாஸ்கர் பெரிய கிரிக்கெட் வீரர். பல மைதானங்களில் பலமாதிரியான விளையாட்டுகளை விளையாடியவர். அவருக்கு வயசாயிடுச்சு. ரிட்டையர்ட் ஆகிவிட்டார். அதுக்காக இப்போ எங்கேயாவது கிரிக்கெட் நடந்தா பாக்கமாட்டாரா, என்ன? - என்று பதிலளித்திருந்தார். அவரது நகைச்சுவை அலாதியானது. பாரதிராஜாவைப் போலவே, மகனுடைய எதிர்காலம் குறித்த கவலை அவருக்கு இருந்தது. எத்தனையோ படைப்புகளின் வாயிலாக நம்மைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் விடை பெற்றிருக்கிறார். மரணம் அவருக்கான அமைதியைத் தரட்டும். ஆழ்ந்த அஞ்சலிகள் -இரா.குண அமுதன்.

கருத்துகள்