புகழ்வணக்கம்

இயக்குநர் இமயத்தின் நினைவாக மீண்டும் இப்பதிவு! தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த துணைக் கதாபாத்திரங்களின் வரிசையில், 'குருவம்மா!' அக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து உயிரூட்டி இன்று வரையில் நம் நினைவில் நிற்கும்படி செய்து விட்டார் நடிகை காந்திமதி அவர்கள். கிராமங்களில் அப்பொழுதெல்லாம் பெண்கள் தெருச்சண்டை போட்டால், 'வாயைப் பாரு நல்லா 16 வயதினிலே குருவம்மா மாதிரி',என்றே சொல்வார்கள். ஊருக்கு இவள் வாயாடியாய் இருந்தாலும் சப்பாணிக்கு இவள் பெற்றெடுக்காத தாய்தான். ஊரெல்லாம் அவனை சப்பாணி என்று அழைத்தாலும், இவள் மட்டும் அவனை, 'வாடா என் மருமகனே',என்றே அழைப்பாள். மயிலு ஆசையோடு ஓடி வந்து, 'ஆத்தா நான் பாஸாயிட்டேன்',என்று சொன்னாலும்,'அதுக்கு ஏண்டி இப்ப நீ கத்துறே இவ',என அலட்சியமாக கடந்து போவாள்.படிப்பறிவு இல்லாத அவள் அப்படித்தானே அலட்சியப்படுத்துவாள். இதற்கு முன்பே இவர் சிவாஜி,எம்ஜிஆர் படங்கள் என நடித்தாலும் 16 வயதினிலே திரைப்படம்தான் இவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது. கதாபாத்திரம் வலுவாக அமைந்தால்தானே,நடிப்பை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும். இவர் நடிக்கும் படங்களில் இவருக்கு அதிகமான Closeup shots வைப்பார்கள்.காரணம் இவர் காட்டும் முக பாவங்கள்தான். விலைமாது கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருப்பார்.மூடு பனி படத்தில் வரும் மிகச்சிறிய கதாபாத்திரத்திலும் கோல் அடிப்பார். 'சிதம்பர ரகசியம்',எனும் நகைச்சுவைப் படத்தில் மருமகனை(எஸ்.வி.சேகர்) ஏமாற்றும் மாமியாரா கலக்கியிருப்பார். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் எழுதி இயக்கி தயாரித்த 'உன்னைப் போல் ஒருவன் 'திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்து இருப்பார். கடைசியாக,'தேவர் மகன் ',படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போனாலும் ',தான் ஒரு நடிப்பு ராட்சசிடா ',என்று சொல்லாமல் சொல்லி விட்டு இறந்து போவார்.கண்களை குளமாக்கும் காட்சியது.காரணம்,அதற்கு முன்புதான் சக்திவேலு(கமல்)வை கட்டித்தழுவி ,தான் எப்பாடியாப்பட்ட சொந்தம் என வாய்வலிக்க சொல்லி நமை திக்குமுக்காடச் செய்வார். மண்வாசனை திரைப்படத்தில் வரும் ஒச்சாயி கிழவியையும் மறக்கவே முடியாது.படத்தில் இவர் பேசும் ஒவ்வொரு பழமொழிக்கும் நமக்கு சிரிப்பு அள்ளும்.சைடு கேப்புல மருமகனையே கிண்டலடிக்கும் குறும்புக்கார கிழவி இவள். அப்படியே கிராமத்து கிழவிகளை நம் கண் முன்னே நிறுத்தி விடுவார். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிகர் சண்முகசுந்தரத்திற்கு அக்காவாக நடித்திருப்பார்.இவர்கள் இருவரும் வரும் காட்சிகளில் வசனங்கள் வெகு சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். இவர் நடிக்கும் காட்சிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம், இன்னமும் இவருக்கு நல்ல பல கதாபாத்திரங்கள் கிடைத்திருக்கலாமே என்றே எண்ணத் தோன்றும். எது எப்படியோ,தமிழ்சினிமா குருவம்மாளை என்றைக்குமே மறக்காது. 16 வயதினிலே கதாபாத்திரங்கள் நிலைத்து நிற்கும் என இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நம்பிக்கை வைத்திருந்ததன் விளைவாகத்தான் டைட்டில் கார்டில் கதாபாத்திரங்களின் பெயரையே போட்டிருப்பார்.இந்தப் படத்திற்கு முன்பும் எவரும் செய்தததில்லை.இந்தப் படத்திற்கு பின்பும் எவரும் செய்தததில்லை. நடிகை காந்திமதி அவர்கள் எவரின் சாயலும் இல்லாமல் தனித்து நின்ற ஒப்பற்ற நடிகை. இந்தப் படம் 4K Resolution செய்யப்பட்டு You tube-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அவசியம் பாருங்கள். நன்றி,வணக்கம். சே மணிசேகரன் மீள்பதிவு

கருத்துகள்