புகழ்வணக்கம்

Abiram Arunachalam பாரதிராஜா சார் குறித்த எனது கட்டுரையில் நேற்று ஒரு நண்பர் இவ்வாறு எழுதி இருந்தார், ஆரம்பிச்சுட்டானுக இன்னும் ஒரு வாரத்துக்கு அறிவாளி ம* மாதிரி ரைட்டப்பா எழுதுவானுக என்று ஒருவர் கமெண்ட் இட்டிருந்தார், இன்னொருவர் ஏய்யா அவர் என்ன இளவயசுலயா போனாரு, எதுக்கு இப்படி எழுதுறிங்க என்று கேட்டிருந்தார். பாரதிராஜா என்பவர் சினிமா உலகில் மிகப்பெரும் ஆலமரம், பல குருவிகள், மைனாக்கள், கிளிகள் இந்த மரத்தில் இருந்து சென்றது போல இந்த ஆலமரத்தில் இருந்துதான் பல பறவைகள் நடிகர் நடிகைகளாக சினிமா உலகில் இன்றளவும் இருந்து வருகின்றனர். இவர் அறிமுகப்படுத்திய நடிகர் மற்றும் நடிகைகள், இயக்குனர்கள், கதாசிரியர்கள் என டெக்னீஷியன்கள் மிக மிக அதிகம். இவருக்கு பின் வந்த சினிமா ஜாம்பவான்கள் இவர் அளவுக்கு நடிகர் நடிகைகள் மற்ற டெக்னீஷியன்களை அறிமுகப்படுத்தி இருப்பார்களா என்று கேட்டால் உறுதியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஊரில் கிராமத்தில் நீண்ட நாள் சிறப்பான முறையில் வாழ்ந்து அனுபவித்து, பேரன் பேத்தி எடுத்து, தான் சார்ந்த துறையில் மிகப்பெரும் பல்கலைக்கழகமாய் வாழ்ந்தவர்கள் மறைந்தால் கிராமத்தில் அதை பெரிய சாவு என மரியாதை கொடுப்பார்கள். அதே போலத்தான் பாரதிராஜா குறித்து பலரும் பலவித அனுபவங்களை எழுதுகிறார்கள் பகிர்கிறார்கள். ரெண்டு நாளைக்கு பேசுவாங்களா? பேசிட்டு போகட்டுமே என விடாமல் ஏன் இந்த வேலை? அவரின் படங்கள் நல்ல படங்கள் என்பது சராசரியா பலருக்கும் தெரிந்த விசயம், அதுமட்டுமல்லாமல் எப்பவாவது சினிமா உலகில் இது போல மிகப்பெரிய மனிதர்கள் மர***ணி**க்**கு***ம்**போது அது பேசுபொருளாகிறது. இவரின் படத்தில் வரும் பாடல்போல பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறது மாதிரி இவர் பற்றி போஸ்ட் போடும்போது சிலர் போஸ்ட்க்கு எசக்கருத்து தெரிவிக்கிறார்கள். அது எசக்கருத்தா இருந்தா ஏத்துக்கலாம், அத்தனையும் விஷக்கருத்தா இருக்கே என்ன செய்யலாம். எல்லாருமே சினிமா பார்க்க கூடியவர்கள்தான், பாடல் கேட்க கூடியவர்கள்தான், பாரதிராஜாவையோ அல்லது சினிமாவில் வேறு விசயங்கள் எழுதும்போதோ தன்னை மட்டும் வித்யாசமாய் காட்டி தான் ஏதோ இந்த நாட்டுக்காக பாடுபட்டு வருவது போலவும், தனக்கு சினிமாவே பிடிக்காது என்ற வகையில் பீட்டர் விட்டு களமாடி வருகின்றனர், அதனுடைய நீட்சிதான் இது போன்ற கருத்துக்கள். 60, 70, 80, 90களில் ஒரு சிறப்பான வாழ்வியல் முறை இருந்தது அந்த சிறப்பான நாட்களில் வாழ்ந்தவர்கள் மறையும்போது இயல்பாக எல்லாருக்கும் ஒரு சிறு கவலை இருக்கத்தான் செய்யும் காலம் காலமாய் நாம் பார்த்து ரசித்தவைகள் அதை உருவாக்கியவர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருகிறார்களே என்ற கவலைதான் அது. 60, 70களில் ரசித்த எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன் மறைந்தபோதும் மக்கள் இவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள், இது போல காலம் காலமாய் நம்முடன் வாழ்ந்துவிட்டு வேரோடு சாயும் ஆலமரங்கள் பற்றி எல்லாரும் எழுதத்தான்யா செய்வாங்க அது மக்களின் இயல்பு உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்க யாருமே சினிமாவோ ட்ராமாவோ பார்க்குறதே இல்லையா? உங்களை முற்போக்கு சிந்தனையாளர்களாக காட்டிக்கொள்ள ஏன் இந்த பொய் வேஷம். பாரதிராஜா சிறந்த படம் எடுத்தார் என்றுதான் எழுதி வருகிறோம் அதற்காகத்தான் அவரை கொண்டாடுகிறோம், அவரின் தனிப்பட்ட குணம் எல்லாம் நமக்கு தெரியாது அது நமக்கு தேவையும் இல்லை. சிலர் அதுபோல தனிப்பட்ட குணம் அணுகுமுறை போன்றவற்றை வைத்தும் விமர்சனம் செய்கின்றனர். நம்ம ஒரு ஹோட்டல் வச்சிருந்தா வந்து சாப்பிட்டு நல்லா இருக்குன்னு சொல்லலாம் ,அதை விட்டு என்ன நல்லா இருக்கு, அவனோட தனிப்பட்ட கேரக்டர் குடும்ப விசயங்களை பேசுவது தவறு. அதுபோலத்தான் சினிமாவில் பல காலம் தலை வாழை போட்டுஅறுசுவை உணவு படைத்தார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியது நம் கடமை. அவரின் சினிமாவை மட்டுமே நாம் பார்க்கிறோம் வேறு எதையும் நாம் பார்க்கவில்லை. முதல் மரியாதை படத்தில் வெட்டி வேரு வாசம் பாடலில் சிவாஜி வீட்டில் இருந்து வரும்போது வீராசாமி அவரை வணங்குவார், அவரின் மகளை தன் மருமகனுக்கு காதல் பண்ணியதால் கல்யாணம் செய்து வைத்திருப்பார் சிவாஜி, அடுத்த காட்சியில் அதற்கு நன்றி தெரிவிப்பது போல வீராசாமி சிவாஜியை வணங்கும்போது, அதற்கு கண்களை மட்டும் அசைத்து ஒண்ணும் கவலைப்படாத நான் பார்த்துக்குறேன் என்பது போல் இருக்கும் அந்த பதில். வெறும் கண் ஜாடை மட்டும்தான் அந்த கண் ஜாடை மட்டுமே ஆயிரம் பதில்களை பாஸிட்டிவாக சொல்லி விடும். இப்படி கடுமையா டயலாக் பேசித்தான் ஒரு காட்சிக்கு உயிரூட்ட வேண்டும் என்றல்லாமல் இப்படி எளிய முறையில் ஆழமான பதிலை சொல்ல வைத்து அந்த காட்சியை படமாக்கி இருப்பார் பாரதிராஜா. மிகப்பெரிய மாமேதை அவர் மறைவுக்கு ஓரிரு நாள் ரைட்டப் எழுதுவதால் பலருக்கு என்ன பிரச்சினை?

கருத்துகள்