Geeta Ilangovan
சிறுவயதில் ஸ்கூல் லீவுக்கு போனபோது 'உனக்கு பிடிச்ச நடிகர் யாரு?' என்று பாட்டியை வம்பிழுத்துக் கொண்டிருந்தேன்.
'போடி, உனக்கு வேற வேலை இல்ல'
'அட ரொம்பத்தான் பிகு பண்ற, சும்மா சொல்லு அம்மிணியம்மா'
கொஞ்சம் வெட்கப் பட்டவாறு 'பாக்யராஜூ' என்றார்.
இந்த பதில் நான் எதிர்பாராதது.
'முந்தான முடிச்சு நல்ல படம். ஊருவசி அத்தன குடச்சல் குடுத்தாலும் மனுசன் சமாளிக்கிறாரு பாரேன்...' சிலாகித்தவாறு எழுந்து போனார்.
கறாரான தாத்தாவிடம் கஷ்டப்பட்ட பாட்டிக்கு பாக்கியராஜ் அவர்களை பிடித்துப் போனதில் வியப்பேதும் இல்லை. அவர் உருவாக்கிய நாயக பிம்பத்தில் குறைகளுக்கும், அசட்டுத்தனமும் நீக்கமற நிறைந்திருக்கும். அதை கதாநாயகிகள் கிண்டல் அடித்தாலும், பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டு, அவர்களிடம் அன்பு காட்டுவார். மரியாதையாக நடத்துவார்.
வீர தீர சூரர்களாகவே கதாநாயகர்களைப் பார்த்து பழகிப்போன பெண்களை அந்த இயல்பான மனிதன் வசீகரித்தார். நண்பனானார். பாட்டி மட்டுமல்ல, அம்மா, என் தலைமுறை பெண்களுக்கும் பிடித்த நடிகர், இயக்குனர் திரு பாக்யராஜ் அவர்கள். அவர் படங்களில் எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், சரியோ தவறோ தனக்கென்று ஒரு கருத்து வைத்திருக்கும் பெண் பாத்திரங்கள், அவர்களை இயல்பாக பேச விட்டவிதம், சுவாரசியமான திரைக்கதை, நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்ட பல அம்சங்களை ரசித்திருக்கிறேன். சென்று வாருங்கள் இயக்குநரே ! நிறைய அன்பும் நன்றியும் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக