புகழ்வணக்கம்

Rajasangeethan மண்டபத்துக்குள் காதுகளில் சந்தனம் பூசப்பட்ட பெண் குழந்தையை தாய் ஆற்றிக் கொண்டிருப்பாள். அந்தப் பெண்ணின் வீட்டார்கள் வருவதற்காக விசேஷ வீடு காத்திருக்கும். சவுண்ட் அமைப்பினரும் காத்துக் கொண்டிருப்பார்கள். தெரு தொடங்கும் இடத்தில் சரம் வெடிக்கும் சத்தம் பெண் வீட்டாரின் வருகையை அறிவித்துவிடும். விசேஷ வீடு பரபரப்பாகி வாசலில் குழும, தெருவுக்குள் படாடோபமாக பெண் வீட்டார் கைகளில் சீரை சுமந்து கொண்டு நுழைய, சரியாக சவுண்டுகாரர் நிறுத்தி வைத்த பாட்டை ஒலிக்க விடுவார். “தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி தங்க கொலுசு கொண்டு தாராண்டி” என சத்தம் கேட்டதும் பெண்ணின் மனம் மலர குழந்தைக்கு காது குத்த தயாராவாள். தாய்வழி சமூக உறவின் அடையாளமான தாய்மாமன் உறவை மையமாக வைத்து இயங்குவது கள்ளர் சமூக வாழ்வியல். இந்த உறவை மையமாக வைத்து மொய் பண்பாட்டின் வழியாகக் கட்டப்படும் கள்ளர் சமூகங்களின் நிலவுடமை உறவை சரியாக சித்தரித்தது எனக்கு தெரிந்து பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படம்தான். கள்ளர் சமூகத்தின் இனவரைவியல் ஆக்கங்களாகவே பெரும்பாலான படங்களை படைத்திருப்பார் பாரதிராஜா! தெற்கத்தி மக்களின் வாழ்வியலையும் அங்குள்ள சமூக சிக்கல்களையும் பிரதானப்படுத்தி பண்பாட்டு ரீதியாக தென் தமிழக மக்கள் கொண்டிருக்கும் பிற்போக்குத்தனத்தை உடைக்கும் வேலையை செய்தவர் பாரதிராஜா. அங்கிருந்து தொடங்கி, தமிழ் மக்கள், தமிழ் அரசியல் களம், பண்பாடு என ஒரு பெரும் விரிவை உருவாக்கிக் கொண்ட பெருந்திறம் பாரதிராஜா. ஸ்டுடியோக்களை விட்டு தமிழ்சினிமாவை கிராமங்களுக்கு கொண்டு சென்றவர் என பாரதிராஜாவை புகழ் பாடுகின்றனர். அது உண்மைதான் என்றாலும் அது மட்டுமே பாரதிராஜா அல்ல. புதிய வார்ப்புகள் பாடத்தில் தாலியை தூக்கி எறிந்து, அலைகள் ஓய்வதில்லை படத்தில் பூணூலையும் சிலுவைக் கயிறையும் அறுத்தெறிந்து கருத்தம்மாவில் பெண் சிசுக்கொலையை சாடி பயணித்த பாரதிராஜா தொடங்கிய காலம் பார்ப்பன மேட்டிமைத்தனம், தமிழரின் வாழ்வாக சினிமாவில் சித்தரிக்கப்பட்ட காலம். சப்பாணி, மயில், குருவம்மா, பரட்டை என அவர் தொடங்கி வைத்த புள்ளியில்தான் தெற்கிலிருந்து கரிய கால்கள் கோடம்பாக்கத்தை வந்தடையும் நம்பிக்கையை பெற்றன. நடிப்பும் இயக்கமும் இசையும் பாண்டித்யம் நிறைந்தவர்களுக்கே வசப்படும் என்கிற மூட நம்பிக்கையை உடைத்தவர் பாரதிராஜா. எவரையும் நடிக்க முடியும் என்கிற நிலையை அவர் உருவாக்கியதற்கு சுதாகர், ராஜா, பாண்டியன், தென்னவன் என ஒரு பெரும் பட்டியல் உண்டு. கிராமப் படங்களுக்கு மட்டும்தான் பாரதிராஜா லாயக்கு என ‘முத்திரை’ விமர்சகர்கள் இவரை அடக்க முயன்றபோது சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக் போன்ற படங்களை எடுத்து சினிமா கலை மீதான தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தினார். நிழல்கள் படம், இடது கண்ணோட்டத்தில் இடது அரசியலை பேசியது. என் உயிர் தோழன் திரைப்படம், அரசியலில் உழைக்கும் வர்க்கமாக இருக்கும் தொண்டர்கள் மீதான சுரண்டலை பேசியது. அந்தி மந்தாரை, அந்தியில் முதுமை கொடுக்கும் அந்நியோன்னியத்தை பேசியது. புதுமை பெண் படத்தில், பெண் விடுதலையை பேசினார். முதல் மரியாதையில் ஆணின் போலி அகங்காரத்தை பேசினார். வேதம் புதிது படத்தில் சங்கராச்சாரியர் உள்ளிட்ட சாமியார்கள் பல்லக்கில் செல்வதை விமர்சிப்பதை போன்ற வசனங்களை பார்ப்பன சிறுவன் பேசுவதாகவே காட்சி வைத்தபோதும், பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றினார்கள். படத்தை தடை செய்ய வேண்டுமென எல்லா காய்களையும் நகர்த்தினார்கள். சங்கர மடத்தில் பேசி சமரசமாகி விடலாமே என்று கூட அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. படத்தை எரித்தாலும் எரிப்பேனே தவிர, வசனங்களை நீக்க மாட்டேன் என உறுதியாக நின்றவர். முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் தலையிட்டு படம் வெளியாகி ஹிட் அடித்தது. 16 வயதினிலே படத்தில், டாக்டர் ஊரை விட்டு செல்லும்போது, மாடு ஓட்டுபவன் வீசும் சாட்டையின் சத்தத்துக்கு மயிலின் முகம் zoom cut-ல் காட்டப்பட்டது தமிழ் சினிமா கண்டிராத விந்தை. ரயில் நிலையத்தில் காத்து நின்ற மயில் பலரின் மனங்களை குலைத்துப் போட்டாள். காதலை உருவகக் காட்சிகளாக மாற்றி பாரதிராஜா, ரசனைக்கு புது பயிற்சியை வழங்கினார். மாண்டேஜ் எனப்படும் தொகுப்பு காட்சிகளை இவர் போல சிறப்பாக எவரும் கையாண்டதில்லை. மிக பிரபலமான இவரின் ‘வெள்ளை தேவதைகள்’ வானிலிருந்து முதன்முறையாக சாமானியனுக்காக பூமி வந்தனர். ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் போல, தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சிக்கான முகமாக பாரதிராஜாவை பாவிக்கலாம். முற்போக்குத்தன்மையை மக்களிடையே பரவலாக கொண்டு போய் சேர்த்த கலைஞன் அவர். பழமை மற்றும் பிற்போக்கிலிருந்து விடுபடும் முனைப்பிலேயே நவீன அடையாளங்களான ஜீன்ஸ்-டிசர்ட்டுடன் எங்கும் காட்சியளித்தவர். கரகரத்து ஒலிக்கும் ‘என் இனிய தமிழ்மக்களே’, இவர் சமூகத்தின்பால் கொண்டிருந்த அன்புக்கும் உரையாடல் விருப்பத்துக்கும் அடையாளங்கள். ஈழ விடுதலை போராட்டத்தை படமாக்கித் தரும்படி மேதகு கேட்டுக் கொண்ட ஒப்பற்ற கலைஞன் பாரதிராஜா. ஈழப் போர் சமயத்தில் இந்திய அரசுக்கு எதிராக இயக்குநர்கள் சங்கத்தை திரட்டி களமாடியவர். காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட தமிழர் நலன் மற்றும் உரிமைகளுக்காக எந்த தயக்கமும் இன்றி எப்போதும் களம் நின்றவர் அவர். திராவிடம், இடதுசாரியம், தமிழ்தேசியம் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சினிமாக்களிலும் அக்கொள்கைகளின் படிமங்களை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். ’கண்களால் கைது செய்’ படத்தில் இரு காட்சிகளுக்கு இடையில் ஒரு பாத்திரம் உரையாடுவது போன்ற ஒரு staging செய்திருப்பார் பாரதிராஜா. சினிமா மொழியில் ஆளுமை செலுத்தியதோடு மட்டுமின்றி, மக்களின் மொழியை சினிமா மற்றும் அரசியலுக்குள் கொண்டு வந்ததிலும் சேர்ந்தே பரிமளிக்கிறது பாரதிராஜாவின் சாதனை! பாரதிராஜா, தமிழ் சமூகத்தின் உள்ளொளி!

கருத்துகள்