படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி வலுவாக கலக்கிக் கொண்டிருந்த காலத்தில் வெளியான 'டூயட்' படத்தில், 'கத்திரிக்கா கத்திரிக்கா' என்றொரு பாடல். வழக்கமா, பெண்ணை வர்ணித்துதான் பாடல்கள் இருக்கும்.. அரிதாக , ஆணை பெண் வர்ணிக்கிற பாடல்கள் வரும். அப்படியான பாடல்களில் , விரிந்த மார்பு, பருத்த தோள்கள், மீசை புடிக்கும், நெஞ்சுல முகம் பொதைக்கணும் என்றுதான் வர்ணனைகள் ஒரு வட்டத்துக்குள்ளயே சுற்றும். அப்படியான வரிகள் எந்த நாயகனுக்கும் பொருந்துவது போலவும் இருக்கும். ஆனால், இந்த 'கத்திரிக்கா' பாடல் நாயகன் பிரபுக்காக மட்டுமே பிரத்யேகமாக எழுதப்பட்டது. அதுவும் , உருவ கேலி அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பாடலை முதன் முறை கேட்ட போது பிரபு எப்படி ஒத்துக் கொண்டார் என்று ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும், இந்த உருவகேலி ரசிக்கும்படியாக நேர்மறையாகவும் பேலன்ஸ் செய்தே எழுதியும் இருப்பார் வைரமுத்து. 'எந்தக் கடையில நீ அரிசி வாங்குற' என கேலி செய்துவிட்டு, அடுத்த வரியில் 'உன் அழகுல என் உசுர வாங்குற' என சமாதானம் செய்தபடி அந்த வரிகள் நகரும். இதில் வரும் வரிகளை கவனிங்க, எடைப்பார்க்கும் மிஷினைக் கண்டு எங்க ஐயா ஏறும்போது கூட்டமா ஏறாதேன்னு சீட்டு வந்துச்சாம் இங்கிலாந்து போகும் போது ஏரோப்பிளேன் ஏறும்போது டிக்கெட் ரெண்டு வாங்கச் சொல்லி நோட்டீஸ் வந்துச்சாம்.. ஆந்திராவில் நீ பொறந்தா குண்டூரு பொண்ணு வேணும் தமிழ்நாட்டில் பொறந்ததனால் வந்தலகுண்டு பெண் வேணும் என வரிக்கு வரி பிரபுவின் உருவத்தை கேலி செய்து எழுதி, இறுதியில் பஞ்சத்தில் காதல் செய்ய ஒன்னப் போல ஆள்தான் வேணும் என்று உச்சபச்சமாக குசும்பாகவும், அதே நேரத்தில் எந்த ஆம்பளையும் இப்படி ஒரு கெமண்ட் தனக்கு கிடைச்சா, உள்ளுக்குள் ரசிப்பான்.. அந்த விதத்தில் பிரபுவே கேட்டு என்ஜாய் செய்யுமாறு கொண்டு போய் முடித்திருப்பார். இந்த பஞ்சத்தில் காதல் செய்ய வரி, இணையத்தில் மஞ்சத்தில் காதல் செய்ய என்று நிறைய தளங்களில் இருக்கும், பஞ்சத்தில் என்பதே சரி. இரண்டாவது சரணத்திலும் இந்த உருவகேலி தொடரும், 'குண்டாண உடம்பிளைக்க குதிரைச் சவாரி செஞ்சா குதிரைதான் எளச்சு போச்சாம் சொன்னாங்க வீட்டில்' 'ஒத்தையில நீ நடந்தா ஊர்வலம் போகுதுன்னு ஊருக்குள் பேச்சிருக்கு போகாதே ரோட்டில்' என்று எழுதி, இறுதியில் , 'கொழு கொழு தேகத்தில் கொடி போல பின்னட்டா.. குழி விழும் கன்னத்தில் குடித்தனம் பண்ணட்டா மஞ்சத்தில் மெத்தை வேண்டாம் மார்பில் சாஞ்சு தூங்கட்டா' என அந்த குண்டு உடல்வாகை நாயகி, ரசிப்பது போல எழுதி முடித்திருப்பார். இதே , போன்று 90 களில் ரஹ்மான் - வைரமுத்து காம்பினேஷன் பாடல்களில், இப்படியாக ஒரு தீமின் அடைப்படையில் இயங்கும் பாடல்கள் நிறைய உண்டு. வரும் நாளில் ஒவ்வொன்றாய் பார்க்கலாம். அ.பாரி முகநூல் பகிர்வு

கருத்துகள்