தமிழ் வானம் தீர்ந்ததோ! ​செந்தமிழ் வளர்க்கும் சீரிய பணியினைத் தம் வாழ்நாளெல்லாம் உயிர்மூச்சாய்க் கொண்டுதிகழ்ந்த பேராசிரியர், முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள், அவ்வை அருள்

தமிழ் வானம் தீர்ந்ததோ! ​செந்தமிழ் வளர்க்கும் சீரிய பணியினைத் தம் வாழ்நாளெல்லாம் உயிர்மூச்சாய்க் கொண்டுதிகழ்ந்த பேராசிரியர், முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள், அவ்வை அருள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஏழாம் துணைவேந்தராகப் (2001-2004) பொறுப்பேற்று, அரும்பணி பல ஆற்றிக் கவின்பெறச் செய்தவர். ​தமிழக அரசின் உயரிய 'திருவள்ளுவர் விருது' உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்ற இப்பெருமகனார், தம் எண்பத்து நான்காம் அகவையில் (5.2.1942- 13.05.2026), அறிவன்கிழமை காலையில் இயற்கை எய்தினார் என்பது பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. ​சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறையில் நான் முதுகலை பயின்ற காலத்தே (1988-1990), எமக்கு நல்லாசிரியராக அமைந்து, சேனாவரையரின் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தைச் செப்பமாகப் பாடம் சொன்னவர். ​"காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல்" அறிவுடையார் கண்ணதே எனும் ஆய்வு நெறியினைத் தம் உயிர்மூச்சாய்க் கொண்டவர்; திருக்குறள் களஞ்சியமாய் விளங்கியவர்; ​எத்தகைய பேரவையிலும் நுண்மாண் நுழைபுலம் மிக்க அரிய கருத்துகளைத் தம் மென்மையான குரலில், ஆணித்தரமாக எடுத்துரைக்கும் பாங்கு, சான்றோர் பலரால் போற்றப்பட்டது. என்னுடைய தந்தையார், பேராசிரியர் அவர்களை, ஆரவாரமற்ற அறிஞர் என்று போற்றுவதோடு ஓலைச்சுவடிகள் பலவற்றை ஆராய்ந்து, சிதைந்த பகுதிகளைச் சீர்செய்து, பிழையின்றிப் பதிப்பிப்பதில் சுந்தரமூர்த்தி ஒரு தேர்ந்த அறிஞர் என்று மேடைகளில் பாராட்டியதை இன்றும் நினைவு கூர்கிறேன். பல அலுவல் கூட்டங்களில் அவரோடு இணைந்து பணியாற்றும் நற்பேறு பெற்ற யாம், அவ்வுயரிய தொடர்பினை எண்ணிப் பெருமிதமடைகின்றோம். ​"தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது" என்பதற்கேற்ப, மலர்மகள், எழில்நம்பி, இளையநம்பி ஆகிய அவர்தம் மக்கள் செல்வங்கள் மூவரும் மருத்துவத் துறையில் வல்லுநர்களாய் முறையே தஞ்சையிலும், சென்னையிலும், சிங்கையிலும் புகழுடன் விளங்குவதைக் கண்டு உள்ளம் பூரித்தவர். ​தமிழ் முழுதறிந்த தகைமையாளரான இவர், தாம் தேடித்திரட்டிய பல்லாயிரக்கணக்கான உயரிய நூல்களைத் தாம் பயின்ற பள்ளிக்கும் உ.வே.சா. நூலகத்திற்கும் நன்கொடையாக அளித்துள்ள செய்தியை, அவர்தம் மகன் இறுதிவணக்க நிகழ்வில் கூறக் கேட்டபோது, அவர்தம் தமிழ்க்கொடையுள்ளம் கண்டு நெகிழ்ந்தேன். ​தமிழ் இலக்கியத்தின் ஆழ அகலங்களைத் தம் பன்னூற் பயிற்சியால் நுணுகி ஆராய்ந்து, நந்தமிழுக்கு வளம் சேர்த்த இப்பெருந்தகையின் நினைவு, நம் நெஞ்சினில் என்றும் நீங்காமல் நிலைபெற்று நிற்கும் என்பது திண்ணம்.

கருத்துகள்