படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

மனதில் இருக்கும் காட்சி-5 --------------------------------------------------- சில திரைப்படங்கள் திரையரங்குகளில் தோற்கலாம், ஆனால் காலத்தின் மடியில் காவியங்களாக உருவெடுக்கும். அதற்கு 'அன்பே சிவம்' ஒரு ஆகச்சிறந்த உதாரணம். மதங்களைக் கடந்து, மனிதத்தை வழிபடச் சொன்ன இந்த திரைப்படம் இன்றும் நம் இதயங்களில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. கம்யூனிஸ சிந்தனை கொண்ட நாத்திகர் ஒருவரும், மேல்தட்டு வாழ்க்கை முறையில் ஊறிப்போய் சுயநலமாக வாழ்கிறோம் என்பதை கூட உணராமல் வாழும் நவீன இளைஞர் ஒருவரும் சேர்ந்து பயணிக்க நேர்கிறது. அந்தப் பயணம் முடிவுக்கு வருகையில் அவர்களிருவரின் எண்ணங்களும் என்னவானது?? அதன்மூலம் பார்வையாளர்களுக்கு விளங்கும் செய்தி என்ன?? என்பதுதான் இதன் சாராம்சம். இந்தப் படத்தை பார்த்த பலரும் சிலாகித்து சொல்லும் காட்சி க்ளைமாக்ஸ். கமலை கொலை செய்வதற்காக வரும் சந்தான பாரதி, மனம் மாறி அவரை தப்பிக்க விடுவார். நிச்சயம் இது அற்புதமான காட்சிதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை இதைவிட ஒரு சிறிய காட்சி எப்போதும் என் மனதில் முதன்மையாக நிற்கும். கமலும் மாதவனும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பார்கள், அப்போது இன்னொரு ரயில் விபத்துக்குள்ளாகி நின்றிருக்கும். அதில் சிக்கிய சிறுவன் ஒருவனுக்கு அரிய வகை ரத்தம் தேவைப்படும். ரத்தம் தருவதற்கு முதலில் தயங்கி, பயப்படும் மாதவனை ஒரு வழியாக கொடுக்க வைத்து விடுவார் கமல். அந்த சிறுவன் பிழைத்துக் கொள்ள, அவனுடன் கமல், மாதவன் மற்றும் மருத்துவ குழுவினர் ஒரே ஆம்புலன்சில் சென்னை நோக்கி பயணிப்பார்கள். கமலும் மாதவனும் சேர்ந்து தொடங்கிய பயணம் கிட்டத்தட்ட 75 சதவிதம் முடிந்திருக்கும். இந்த பயணத்தின் வழியே ஏற்பட்ட அனுபவங்கள், தன் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை கமல் பகிர்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என மாதவனும், அவருடைய எண்ணங்களும் நல்மாற்றத்தை அடைந்திருக்கும். தொடர்ந்து பயணிப்பவர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஓரிடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்துவார்கள். அங்கு அந்த சிறுவனுக்கு பரிசளிப்பதற்காக ஒரு பந்தை வாங்கி கையில் வைத்திருப்பார் மாதவன். அப்போது திடீரென உள்ளே இருக்கும் சிறுவனுக்கு உடல்நிலை மோசமாகும், உடனடியாக மருத்துவர்களும் செவிலியரும் அவனுடைய உயிரை காப்பாற்றுவதற்காக போராடுவார்கள். CPR செய்வதை முதல்முறையாக பார்க்கும் மாதவன், மெதுவா மெதுவா என்பார். அவரை அழைத்துக்கொண்டு கமல், சாலையோரம் அமர வைப்பார். காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தோற்றுப் போய் அந்த சிறுவன் இறந்து விடுவான். அதைக் கண்டு அழுதபடியே மாதவன், பந்தை தூக்கி எறிந்து விட்டு, "எதுக்கு இதெல்லாம்? எனக்கு புரியவே இல்லை, என்ன மாதிரி டிசைன் இது. ஒரு ட்ரெய்ன கவுக்க வச்சு, அதுல ஒரு சின்ன பையனை சிக்க வச்சி, ஈஸியா கிடைக்காத ஒரு பிளட் குரூப் அதிசயமா கிடைக்க வச்சு, அவனப் பொழக்க வச்சு, இப்ப வழியில திடீர்னு அவன சாகடிச்சா? என்ன கொடுமை இது?? ச்சே... இந்த மாதிரி சமயத்துல தான் கடவுள் இருக்காரா இல்லையான்னு நம்பிக்கையே போச்சு" என்று அழுதபடி கமலை பார்ப்பார். கமல் புன்னகையுடன் அவரைப் பார்ப்பார், உடனே சுதாரித்துக் கொண்டவர் " இல்ல.. ஐ அம் சாரி. நான் உங்கள மாதிரி இல்ல... எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு" என்பார். கமல்- "எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னு உங்களுக்கு யார் சொன்னது" மாதவன்- "ஓ உங்களுக்கு இப்ப திடீர்னு கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா" கமல்- "ரொம்ப நாளாவே இருக்கு" மாதவன்- "யார் அந்த கடவுள்?" அதே புன்னகையுடன் மாதவனை பார்த்து விரலை நீட்டுவார். இதை புரியாமல் மாதவன் கமல் காட்டிய திசையில் பார்ப்பார், அப்போது கமல் அவரைத் தட்டி நீதான் என சொல்வார். எப்போதும் குதர்க்கமாக பேசுவதைப் போல கமல் பேசியிருக்கிறார் என புரிந்து கொள்ளும் மாதவன் "I cannot understand your jokes man" என சொல்ல "because it is not a joke, முன்ன பின்ன தெரியாத அந்த பையனுக்காக கண்ணீர் விடுற மனசு இருக்கே‌..... அதான் கடவுள்" என்பார். சோகத்திலிருந்து மனிதத்திற்கு பெருமிதத்துடன் மாறும் மாதவனின் முகம் கனிவுடன் "Thank you " சொல்லிவிட்டு " என்ன திடீர்னு இந்த பணிவு??" என கேட்பார். உடனே கமல் "ஏன்னா நானும் கடவுள்!!" என்பார். " ஹா... நெனச்சேன்... ஏதாவது ஹூக் இருக்கணுமே.... உங்களை கடவுள்னு யார் சொன்னது?" "ஒரு மலை மேல பொட்டி கடை வெச்சிருக்கிற ஒரு அம்மா சொன்னாங்க.. அன்னிலிருந்து நம்பிட்டேன்".... இந்த இடத்தில் ஒரு கேப் விட்டு "புரியல இல்ல?" மாதவன் தலையாட்டுவார்..."புரியக்கூடாது.. அதான் கடவுள்" எனக் கூறிவிட்டு "A...Ars you are a good man" என முடிக்கும் இடத்தில் இருவரின் புன்னகை சிறகுகள் அந்த சிறுவனின் ஆத்மாவை பத்திரமாக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல, "யார் யார் சிவம்??" பாடலின் பேக்ரவுண்ட் மியூசிக்கை ஒலிக்கவிட்டு இருப்பார் வித்யாசாகர். கமல் என்ற மகா கலைஞனின் நடிப்பை பற்றி நமக்கு தெரியும், ஆனால் அவருக்கு இணையான நடிப்பை, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் வழங்கியிருப்பார் மாதவன். அன்பே சிவம் திரைப்படத்தின் வசனங்களை எழுதிய கார்ட்டூனிஸ்ட் மதனுக்கும் பாராட்டுக்கள். ​கடவுளைக் கல்லிலும் மண்ணிலும் தேடுபவர்களுக்கு மத்தியில், சக மனிதனுக்கு காட்டப்படும் பேரன்பில் தேடச் சொன்னதுதான் இந்த 'அன்பே சிவம். நதி மூழ்கினாலும் அதன் பிரவாகம் அடங்காது... அதுபோலத்தான் இந்தத் திரைப்படமும், காலங்கள் கடந்தாலும் மனிதநேயம் பேசும் ஒவ்வொரு இதயத்திலும் வழிந்துக்கொண்டே இருக்கும்!" "கடவுள் என்பது வேறொன்றும் இல்லை... அது பிறரிடம் காட்டும் அன்பு தான்" #பிரபுசங்கர்_க முகநூல் பதிவு

கருத்துகள்