மகாகவி
காலாண்டிதழ்
ஜனவரி - மார்ச் 2026
கவிஞர் மு மேத்தா சிறப்பிதழ்
பக்கம் எண் : 12,13,14,15,16,17
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் !
-ஒளவை அருள்
புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா அவர்களை மாணவப் பருவத்திலிருந்தே நான் நன்கறிவேன்.
யாது சொல்லிப் போற்றுவோம்!
யாண்டு பலவாய் வாழ்கவே என்றுதான் ‘மகாகவி’ இதழின் வாயிலாக அவரை வாழ்த்துவோம்!
ஆங்கில இலக்கியத்தின் நவீன வரலாற்றை எவ்வாறு வால்ட் விட்மனின் பெயரைக் குறிப்பிடாமல் எழுத இயலாதோ, அவ்வாறே தமிழின் நவீன கவிதையின் இலக்கிய வரலாற்றைக் கவிஞர் மு.மேத்தாவின் பெயரைக் குறிப்பிடாமல் எழுத இயலாது.
வானம்பாடி இலக்கிய இயக்கத்தின் தவிர்க்க இயலாத ஒரு பெயர் மு.மேத்தா.
கவிஞர் மேத்தா, கவிதை எழுத வருவதற்கு முன்பு பல கவிஞர்கள் தமிழில் புதுக்கவிதையை எழுதியுள்ளனர்.
ஆனால், மேத்தா தான் புதுக்கவிதைக்கு வெகுசன மக்களிடையே ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார்.
மு.மேத்தாவின் காலகட்டத்தில் சக்திக்கனல், புவியரசு, சேலம் தமிழ்நாடன், கோவை ஞானி, சிற்பி, ஈரோடு தமிழன்பன், நா.காமராசன், அப்துல் ரகுமான் என்று பலர் கவிதைகளை எழுதிக் குவித்தாலும், எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் தமிழ் வாசகர்களின் இதயங்களில் தனக்கென தனி ஓர் இடத்தை உருவாக்கி, அதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த ஆளுமை மு.மேத்தா என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழில் இன்று எழுதப்படும் கவிதைத் தொகுப்புகளுக்குப் போதிய வரவேற்பில்லை என்பது கசப்பான உண்மை.
52 ஆண்டுகளுக்கு முன்பு (1974)
கவி வேந்தர் மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’ 40 பதிப்புகளைக் கண்ட பெருமையுடைய தொகுப்பு என்று சொன்னால் மிகையாகாது.
கண்ணீர்ப்பூக்களில் அவர் செய்த சாதனையை மற்றவர்களால் வெல்ல முடியவில்லை. ஏன் அவராலும் கூட!
புதுக்கவிதையின் இரண்டாம் கால கட்டத்தில் ஒரு சகாப்தத்தைத் தனக்கே உரியதாகச் செதுக்கிக் கொண்டவர் கவிநாயகம் மு மேத்தா.
தெளிவில்லாத கலங்கள் நதியாகப் புதுக்கவிதை பயணமிட்ட நேரத்தில் அதற்கு ஒரு துறையும் படிக்கட்டுக்களுமாக வானம்பாடிகளின் வருகை அமைந்தது.
அதன் தொடக்க காலத்துத் துருவ நட்சத்திரம்தான் கவிஞர் மு மேத்தா ஆவார்.
“வைகறைப் பொழுதுக்கு
வார்த்தைத் தவமிருக்கும்
வானம்பாடிகளே - ஓ...
வானம்பாடிகளே!
இந்த
பூமி உருண்டையைப்
புரட்டிவிடக்கூடிய
நெம்புகோல் கவிதையை
உங்களில்
யார் பாடப் போகிறீர்கள் ?”
என்று கேள்வியைச்
சக கவிஞர்களிடம் 1971 ஆம் ஆண்டிலேயே பேராசிரியர் மேத்தா கேட்டதற்குக் காரணம், மார்க்சியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியச் சூழலில், எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்தது தான்.
மரபுக் கவிதையை எழுதியவர்கள் அன்று புதுக்கவிதையை வரவேற்கவில்லை.
ஒப்பியல் அறிஞர் க.கைலாசபதி உட்படப் பல திறனாய்வாளர்கள் அன்றைய சூழலில் புதுக்கவிதைக்கு எதிர்பார்ப்பைத் தெரிவித்தனர்.
ஆனால், புதுக்கவிதையை நிலைநிறுத்த கண்ணீர்ப் பூக்கள், நடந்த நாடகங்கள், ஊர்வலம், கனவுக் குதிரைகள், என்னுடைய போதி மரங்கள், காத்திருந்த காற்று திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், முகத்துக்கு முகம், அவர்கள் வருகிறார்கள், நந்தவன நாட்கள், தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி, ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்று பல நூல்களை வெளியிட்டு அதில் மகத்தான வெற்றியும் பெற்றார்.
‘மனச்சிறகு’ என்னும் தலைப்பில் மரபுக் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார்.
தீபம், தாமரை, ஞானரதம், கண்ண தாசன், கணையாழி, வானம்பாடி போன்ற பல சிற்றிதழ்களில் எழுதினாலும், பின்னாட்களில் வெகுசனக் கவிஞராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
வசீகரமான இளமை ததும்பத்ததும்ப அவர் எழுதிய கவிதைகளுக்குத் தமிழகத்தில் யாருக்கும் இல்லாத ஒரு வாசகர் பட்டாளம் உருவாயிற்று.
இது மறைக்க முடியாத வரலாறு.
எண்பதுகளில் மு.மேத்தா கலந்துகொள்ளாத கவியரங்கமே இல்லை என்னும் சூழல் நிலவியது.
2023 ஆம் ஆண்டில் கவிஞர் மேத்தா அவர்களின் தலைமையில் ஓர் அருமையான கவியரங்கத்தைத் தாய்மொழி திருநாளை முன்னிட்டு பஷீர் அகமது பெண்கள் கல்லூரியில் நடத்திய பெரும்பேறு
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக எனக்கு வாய்த்தது என்று எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
ஆனந்த விகடனின் பொன்விழா ஆண்டில், (1980) ‘சோழநிலா’ என்ற அவருடைய புதினத்திற்கு இருபதாயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது.
நடுவர்களாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், தீபம் நா. பார்த்தசாரதி, ஞானபீட பரிசுப் பெற்ற எழுத்தாளர் அகிலன் ஆகியோர் தேர்வு செய்தனர்.
சோழநிலாவின் வெற்றியைத் தொடர்ந்து மகுடநிலா, கோட்டையை நோக்கி (சமூக அரசியல் புதினம்) முதலிய புதினங்களை எழுதியதுடன், ‘நாயகம் ஒரு காவியம்’ என்னும் தலைப்பில் நபிகள் நாயகம் குறித்த மகத்தான காப்பியத்தையும் எழுதினார்.
நாயகம் ஒரு காவியம் என்ற கவிதையில்
முழு நிலவே! வள்ளல் முகமதே!
உங்களை நான்
பிறை நிலாச் சொற்களால்
பேசுகிறேன்...
என்று தொடங்கி
மனிதர்களில்
இவர் ஒரு
மாதிரி...
அழகிய
முன்மாதிரி !
இவர்-
இறைவனின் துறைமுகம்...
இங்கிருந்து தான்
திருமறை
இறக்குமதியானது
எல்லா நாடுகளுக்கும்
ஏற்றுமதியானது !
இலக்கணத்தை மீறுவதுதான் புதுக்கவிதை என்றாலும், மு.மேத்தா எழுதிய ஒரு கவிதை தான், தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் புதுக் கவிதைக்கான இலக்கணமாக நிலைத்தது.
“இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி -
இவையெதுவும் இல்லாது
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை”
என்னும் கவிதையைக் குறிப்பிடாமல், தமிழில் புதுக்கவிதை வரலாற்றை எவரும் எழுதிவிட இயலாது.
மேத்தாவுடைய கவிதைகளின் வெற்றிக்குக் காரணம், கவிதையின் வடிவத்தில் உள்ள எளிமை மட்டுமல்ல; அதன் ஆழமும்தான்.
சொல்லிலும் பொருளிலும் தொக்கிக் கிடக்கும் முரண்கள், பொன்மொழிப் பாவனையோடு வரும் வாக்கியப்பாங்கு, ஆங்காங்கே மென்மைக்கீற்றுகள், கொஞ்சம் அரசியல் வாசனை - இவற்றின் மேதா விலாசம்தான் கவிஞர் மேத்தா விலாசம் என்று முனைவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிர மணியன் குறிப்பிட்டது பொற்குடத்திற்கு பொட்டு வைத்தாற் போல....
1985 ஆம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவனாக சென்னை மாநிலக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்று பேராசிரியர் மேத்தா வகுப்பில் சொன்ன போது அவர் பார்வை என்மீது பட வேண்டும் என்ற பரபரப்பில் நான் உதிர்த்த சொல் அவரிடம் என் வாய்ப்பு வந்த பொழுது,
என் தந்தை இட்டப் பணியை,
தொட்ட பணியை,
விட்ட பணியை தொடர வந்துள்ளேன் என்று 41 ஆண்டுகளுக்கு முன் (1985) தமிழ்த்தாத்தா திருவுருவச் சிலைக்கு எதிரில் உள்ள பேரரங்கில் புதுக்கவிதையின் தாத்தாவிடம் அறிமுக வரிகளைச் சொன்னபோது அருகில் வந்து என்னைப் பாராட்டினார்.
பிறகு என்னிடம் சில தருணங்களில் நானும் உன் தந்தை ஔவை நடராசன் அவர்களிடம் மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்ற மாணவன்தான் என்றும் மேலும் அப்போது தேசிய மனத்தில் திளைத்ததால் உன் தந்தை என்னைக் குட்டி குட்டி வளர்த்தார்...
இந்த உயரம் அடைவதற்கு அதுவும் ஓர் சான்று என்று சொன்னார்.
அவர் சொன்ன வரிகளை அப்படியே அச்சுப் பிசகாமல் அப்பாவிடம் சொன்ன பொழுது அப்பா சொன்னார்
அப்படியா உன் பேராசிரியர் சொன்னார்... உங்கள் பேராசிரியரை என்றைக்கும் ஏன் எந்த மாணவர்களையும் நான் குட்டியதோ, தட்டியதோ, அதட்டியதோ செய்தவன் இல்லை.
பட்டுத்தெறித்தார் போல் சொற்களைச் சொல்லியிருப்பேன் அதனால்தான் என்னவோ அவரின் சந்தனக் கவிதைகளுக்குப் பட்டு மாமிகளும், இளஞ்சிட்டுகளும் அவரை எந்நேரமும் சூழ்ந்திருக்கிறார்கள் என்றதோடு அவர் போன்சாய் மரமல்ல! அரசர்கள் நிழல் தேடும் ஆலமரமாக வளர்ந்துள்ளார்.
பல ஆண்டுகளாய்ப் பாடிய பல்லவி என்றென்றும் பாடலாகியிருக்கிறது என்று மெச்சினார்.
‘செருப்புடன் ஒரு பேட்டி’ என்னும் கவிதையின் உள்ளடக்கமும் புதிது; வடிவமும் புதிது.
தமிழ்க் கவிதை வரலாற்றிலே ‘செருப்பு’ சமூகப் பிரச்சனையைப் பேசியது மேத்தாவின் கவிதையில் தான்.
தலித் இலக்கியம் என்கிற இலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு முன்பே, இவர்களுடைய பிரச்சனைகளை மறைமுகமாக இக்கவிதையில் பதிவு செய்துள்ளார்.
“ காலில் மிதிபடுவதாய்க் கண்ணீர்
விடுகிறீர்களே - உங்களைக்
கைகளில் தூக்கி நாங்கள்
கௌரவிப்ப தில்லையா ?
சில சமயங்களில்
கைகளில் தூக்கிக் காப்பாற்றி வைப்பது
மீண்டும் எங்களை
மீட்ப்பதற்காகவே”
என்று செருப்பு அந்தக் கவிதையில் பேசுகிறது.
“நாணத்தில் கவிழும்
தாமரைக் கண்கள்
உங்களைச் சந்திக்கும் முன்பாக
எங்களைத்தான் சந்திக்கின்றன”
என்ற வரி மேத்தாவின் அபாரமான கற்பனையாற்றலுக்கு உதாரணம்.
மேத்தாவின் காலகட்டத்தில் இந்தக் கற்பனை புதிது.
இன்று இவ்வளவு இளைஞர்கள் கவிதை எழுத வந்திருக்கக் காரணம் கவிஞர் மேத்தா, ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல்ரகுமான் போன்ற கவிஞர்கள் அன்று இப்படியெல்லாம் எழுதியதால் தான்.
வானம் எனக்கொரு நீதி
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்”
என்னும் கவிதை, அன்றையப் பெண்களின் மனநிலையைப் பேசியது உண்மை.
புனைவியல் சார்ந்த கவிதைகளை மட்டுமே கவிஞர் மேத்தா எழுதினார் என்ற முடிவுகளுக்கு நாம் தாவிவிடக் கூடாது.
‘கண்ணீர்ப் பூக்களை’ப் பேசிய எந்தத் திறனாய்வாளரும்,
அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘சிலி - 1973’ என்னும் கவிதையைப் பேசவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் மகத்தான புகழஞ்சலி அந்தக் கவிதை.
மு.மேத்தா, இன்குலாப்பைப் போல புரட்சிக் கவிஞர் இல்லை.
ஆனால், புரட்சியின் உள்ளடக்கம் மேத்தாவின் கவிதைகளில் இருந்ததை மறுக்க இயலாது.
“எந்த இடத்தில்
சுதந்திரம் இல்லையோ
அந்த இடத்தில்
பூமி நிர்வாணத்தால்
அவமதிக்கப்படுகிறது.
அந்த அவமதிப்பை
சகிக்க முடியாமல்தான்
பாப்லோ நெரூடாக்கள்
பலியாகிறார்கள்”
என்கிற பதிவு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
நெரூடாவைத் தமிழ்ச் சூழலில் மொழிபெயர்த்தவர்கள் ஈரோடு தமிழன்பன் (தன் மகனுக்கே பாப்லோ நெரூடா என்று பெயர் சூட்டியதே வரலாறாகும்)
சுகுமாரன், ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற கவிஞர்கள்.
சா.தேவதாஸ், நெரூடாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூலொன்றையும் எழுதியுள்ளார்.
ஆனால், எழுபதுகளின் தொடக்கத்தில், நெரூடா மறைந்த காலகட்டத்திலேயே மு.மேத்தா,
“எங்காவது
காற்றைக்
கைது செய்ய முடியுமா?
மனிதனின்
சுதந்திர நினைவுகளைச் சூறையாடிட
எந்த
ஏகாதிபத்தியத்தாலும் இயலாது”
என்று எழுதியுள்ளதைப் பாராட்டாமல் இருக்க இயலாது.
தாய் இதழில் ஒரு முறை அதன் ஆசிரியர் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் கவிஞர் மேத்தாவின் வரிகளை பளிச்சிட பரவசமாக கூட்டத்தில் சொன்னது இன்றும் நினைவில் நிழலாடுகிறது .
“காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயலென்று
புரிய வைப்போம்!”
என்றும் கண்ணீர்ப் பூக்களைக் கண்ட பிறகுதான் புதுக்கவிதைப் பூக்களைச் சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தேன்!
இலக்கணத்தை மீறிய புதுக் கவிதைக்கு இவர்தான் இலக்கணம்!
என்று மேத்தாவை பெரிதும் புகழ்ந்தவர் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் ஆவார்.
1980 ஆம் ஆண்டில் கவிஞர் மேத்தாவின் ஒரு புதுக்கவிதையான
“சின்ன நூல் கண்டா
உன்னைச்
சிறைப்படுத்தி வைப்பது?”
என்ற இந்தத் தெறிக்கும் கவிதை வரிதான் பிற்காலங்களில் எழுத்தாளர் திருமதி சிவசங்கரியின் மாபெரும் நூலுக்கு தலைப்பாகவே
‘சின்னச்சின்ன நூற்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது’ என்றே மலர்ந்தது.
மகரந்தக் கவிஞர் மேத்தா
கம்பராமாயண வரிகளை இப்படிச் சொன்னபோது தமிழ் உலகமே திரும்பிப் பார்த்து வாழ்த்தியது.
“அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்”
இது கம்பன் வரி.
இப்போது பாருங்கள் வம்பினை
இரண்டு பேரையும்
அடித்து நொறுக்குவதற்கு
அப்பன் காரனும் நோக்கினான்.”
மேத்தாவின் சில மரபுக் கவிதைகள் அனுபவங்களின் அழியாச்சுவடுகள், தத்துவம் பேசுவதில் கண்ணதாசனுக்கு நிகரான கவிஞர் மேத்தா.
“வரங்கொடுக்கும் தேவதைகள்
வந்தபோது தூங்கினேன்
வந்தபோது தூங்கிவிட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன் !
கரங்கொடுக்கும் வாய்ப்புகளைக்
கைகழுவி வீசினேன்...
கைகழுவி வீசிவிட்டுக்
காலமெல்லாம் பேசினேன்”
என்னும் கவிதை அடிகள் வெறும் கவிதைகளல்ல... அதுதான் அவருடைய வாழ்க்கை.
“முட்புதரில் நட்புமலர்
முளைக்குமென்று நம்பினேன்
முளைத்து வந்த பாம்புகளே
வளைத்தபோது வெம்பினேன்”
என்று எழுதுகின்ற பயிற்சி இருந்ததால் தான், அவர் திரைப்படப் பாடல்களிலும் வெற்றி பெற்றார்.
‘பாடு நிலாவே’, ‘பெண்மானே சங்கீதம் பாடி வா’, ‘சோத்துக்குள்ள பாத்தி கட்டி’ போன்ற பல வெற்றி பெற்ற பாடல்களை எழுதினாலும்,
‘என் மன வானில் சிறகு விரிக்கும் வண்ணப் பறவைகளே’ என்னும் பாடல் அவருடைய புகழைப்பாடிக் கொண்டே இருக்கும்.
கவிஞராக வாசகர்களின் மனதில் நிறைபெற்றிருந்த மு.மேத்தா செய்த ஒரே தவறு, ‘தென்றல் வரும் தெரு’ என்னும் திரைப்படத்தைத் தயாரிக்க முற்பட்டதுதான்.
எவருக்கும் தலைவணங்காத, தமிழுக்கு மட்டுமே தலைவணங்கத் தெரிந்த ஒரு கவிஞன், திரைப்படத்துறை என்னும் கனவுத் தொழிற்சாலைக்குள் நுழைந்திருக்க வேண்டாம் என எண்ணத் தோன்றுகிறது.
இன்றைக்கு நடக்கும் ஈரான் போர்ச் சூழல் எதற்கு என்று அனைவருக்கும் தெரியும், பாருங்கள் எப்போதோ எழுதியுள்ளார் கவிஞர் மேத்தா
“தலையில் எண்ணெய்
தடவுவார் உலகில்...
அமெரிக்காவோ
எண்ணைய்க்காக
வளைகுடா நாடுகளின்
தலையைத் தடவுகிறது....”
கவிஞர் மேத்தாவின் கலங்கரை வரிகள் இன்றும் என்றும் மின்னி மிளிர்கிறது.
பேராசிரியர் மேத்தா அவர்கள் ஆசிரியர் நாளன்று (5.9.1945) பிறந்த முத்து விழா நாயகராவார்.
இராஜராஜ சோழன் நான் என்ற பாடல் திரையில் வந்த பொழுது அனைவரும் விரும்பி கேட்டோம்.
ஆனால் அதில் ஒரு உண்மை இருந்தது அவர் வசிக்கும் தெருவின் பெயரும் இராசராசன் தெருவாகும்.
தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதும் கலைமாமணி விருதும் பெற்ற பெருந்தகை ஆவார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களிடம் முரசொலி அறக்கட்டளை வழங்கும் ‘கலைஞர் விருதும்’, ஆசிரியர் வீரமணி அவர்களிடம் பெரியார் விருதும், சாகித்ய அகாதமி விருதுகளையும் பெற்றவர்.
“புதுக்கவிதை முன்னோடி
மலர்களின் காதலன்,
நதிகளின் நண்பன்,
வானத்தின் வாசகன்,
அலைகளின் ஆசிரியன்,
ரகசியங்களின் ரசிகன்,
தென்றலின் சினேகிதன்,
பூமியின் போராளி
என்று”
அதனால்தான் இந்தக் கவிதையின் தொடக்க வரிகளைக்கொண்டே கவிஞரைப் பாராட்டலாம்
இலட்சக்கணக்கான வாசகர்களின் மனத்தில் முன்னால் நின்றவர்.
இவருடைய கவிதைகள் பலரின் மனதில் தைக்கும் மலர்க்கணைகள்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிபோல கவிஞர் மேத்தா எனும் வித்தகக் கலைஞன் தொட்டுவிட்டால் விறகுக் கட்டை கூட வீணையாகிவிடும் என்பது உண்மைதானே!
தமிழில் எத்தனையோ கவிஞர்கள் சாதித்திருக்கிறார்கள்.
தலைமுறையின் தத்துவத்தைப் புவிக்குக் காட்டும் தடயமாக இருந்தார்.
“நான்
தனி வாழை
அல்ல...
வாழையடி
வாழை!”
என்று தனக்குத்தானே தன் கவிதை வரிகளைக் கொண்டு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
சாதனைகளை மட்டும் செய்யாமல், புதுக்கவிதையில் வரலாற்றையும் படைத்த மகத்தான ஆளுமை கவிஞர் மு. மேத்தா.

கருத்துகள்
கருத்துரையிடுக