படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ஜேம்ஸ் வசந்தன் .இசையமைப்பாளர்

ஜேம்ஸ் வசந்தன் .இசையமைப்பாளர் அறிவுக்குருடர்களுக்கு எதுவும் புரியாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் தெரிந்துகொள்ளக் கூட முயல்வதில்லை என்பதுதான் இந்த மாநிலத்துக்கு இழப்பு. தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படவில்லை என்று சொன்னவுடன், ஒன்றிய அரசு பிப்ரவரி மாதம் வெளியிட்ட அரசாணையைக் காட்டுகின்றனர் ஏதோ நமக்கெல்லாம் தெரியாதது போல. கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் காலங்காலமாக முழக்கமிடுகிறார்களே "மாநில உரிமை.. மாநில உரிமை" என்று, அதன் ஒரு பகுதிதான் இது. இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிற தேசம். அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழிக்குதான் முதலிடம் என்பதுதான் மாநில உரிமைகளுள் ஒன்று. இங்கு முதல் பாடலாக நம் மொழி வாழ்த்துதான் பாடப்பட வேண்டும். அது நமது உரிமை. இன்று ஒவ்வொன்றாக இப்படியே விட்டுவிட்டால் வருங்காலத்தில் தமிழுக்கே இடமில்லாமலே போய்விடும் என்பதால்தான் எல்லா அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் விட்டுக்கொடுப்பதில்லை. இது மொழி காக்கும் அரசியல். அதனால் அண்ணனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று அன்னைத் தமிழைக் கொன்றுவிடாதீர்கள்!

கருத்துகள்