இனிய காலை வணக்கம் ."
பல சாம்ராஜ்யங்கள் நிதி நிர்வாகம் இல்லாததால்தான் வீழ்ச்சியடைந்தன என்பதை ஷேக்ஸ்பியர் தெளிவுபடுத்துகிறார். இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் ஆடம்பரச் செலவால் அவதிப்படுகிறான் என்கிறார். அவனுடைய வீண் பெருமையே அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. டைமன் வரவுக்கு மீறிச் செலவு செய்து மனித இனத்தையே வெறுக்கும் அளவிற்கு மாறிப்போகிறான்.
பொருளாதாரத்தில் வறுமையின் மோசமான சுழற்ச்சக்கரம் என்கிற கருத்தாக்கம் ஒன்று உண்டு. குறைந்த முதலீடு, குறைந்த உற்பத்தி, குறைந்த இலாபம், குறைந்த வருமானம் என்று தொடர்ந்து வறுமைச் சூழலில் சில நாடுகளும், நிறுவனங்களும் மாட்டிக் கொள்கின்றன. அவை இலாபகரமான முதலீடுகளைச் செய்ய முடியாததால் தொடர்ந்து குறுகிய நோக்கத்திலேயே செயல்படுகின்றன. காலத்திற்குத் தக்கவாறு விரைவாகவும், நவீனமாகவும் அவை போட்டிபோட முடிவதில்லை. அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் சில கூட்டுறவு அமைப்புகளுக்குக் கைகொடுத்து ஒரு காலத்தில் உதவின. திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளிகள் வந்த பிறகு அந்த நிறுவனங்கள் இழுத்து மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
திருவள்ளுவர் வறுமையை ஒரு போதும் வாழ்த்தியவரல்ல. வறுமையைப் பற்றி ஓர் அதிகாரத்தையே எழுதியிருக்கிறார். ஒருவன் நெருப்பிற்குள் இருந்து தூங்கவும் முடியும், ஆனால் வறுமை நிலையில் கண்மூடித்தூங்க முடியாது என்கிறார்.
'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது' (1049)".
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 528..
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக