#பாரதிதாச!#
புதுவையில் பிறந்த
எங்கள்
பூந்தமிழ்க் குயிலே!
முதிர்கனித் தமிழின்
மூத்த மகனே!
பைந்தமிழ்ப் பருகிய
புரட்சிப் புயலே!.
யாப்புத்
தோப்புக்குள் - நீ
செப்பியக் கவிகள்
காப்பு அரணென...
இறுமாப்பு உடைத்திடும்
இடியென...
இனமானங் காத்திடும்
பறையென...
கதிராய்க்...
கனலாய்க்...
காரிருள்
கலைக்கும்
செங்கதிராய்....
செந்தமிழ் வானில்
வெண்ணிலவாய்
ஒளிர்ந்ததெல்லாமுன்
ஒப்பற்ற
நற்றமிழ்ப்
பற்றினாலன்றோ!!.
மூடநம்பிக்கையை
ஒட விட்டு
நாடு நலம்பெற வேண்டுமென்றாய்!
நின்
நாடித்துடிப்பில்
களிநடம் புரிந்திட்டாள்
தமிழன்னை!!.
ரூசோ ஷெல்லி
பாப்லோ நெருடாவோடு
ஒத்த எண்ண அலைவரிசையில்
பயணித்தாய்!!
பகுத்தறிவுப்
பந்தியில்
தமிழமுதம்
ஊட்டியவன் நீ!.
"குடும்ப விளக்கு"
"அழகின் சிரிப்பு"
"பாண்டியன் பரிசு"...
அன்னைத் தமிழுக்குப்
பரிசளித்தாய்
வரிசை வரிசையாய்!!
தமிழை வளப்படுத்தித்
தமிழரை
வளர்த்திட்டாய்!!.
"கீழ் செயல் விடுங்கள்!
வீரத்தைப் போற்றி
வீரத்தில் உயருங்கள்"..
என்றாய்!.
"தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
உள்ளிருந்து நீ
உதிர்த்த
இவ்வரிகள்
வையம் உள்ளவரை
உன் பெயருரைத்திடும்
இஃது உறுதி !!.
நினைவுகள் போற்றுதும்!🌿🙏
😊வித்யா மனோகர்.

கருத்துகள்
கருத்துரையிடுக