என் மீது தவெகவினர் செருப்பு வீச்சு! "பெண்கள் வொர்த்துனு விஜய் சொல்லித் தரமாட்டாரா? திவ்யா சத்யராஜ்
திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த போது தன் மீது தவெகவினர் செருப்பு வீசியதாக திவ்யா சத்யராஜ் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் பெண்களை மதிக்குமாறு தனது தொண்டர்களுக்கு விஜய் கற்றுத் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுகவின் ஐடி விங் மாநில துணைச் செயலாளர் என்ற முறையில் நான் எனது கட்சியின் வெற்றிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறேன். அந்த வகையில் நேற்று மாலை ஒரு தெருவில் நான் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது தவெக நிர்வாகிகள் சிலர் என் மீது செருப்புகளை வீசினர். இதனால் அச்சமடைந்த போதிலும் நான் எனது பிரச்சார பேச்சை நிறுத்தவில்லை. என்னை தைரியத்துடன் எனது பெற்றோர் வளர்த்துள்ளனர்.
அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருப்பது என்பது அவரவர் உரிமை. அதற்காக இப்படி தாக்குதல் நடத்தக் கூடாது. வீட்டில் எனக்கும் எனது சகோதரர் சிபிக்கும் இடையே சித்தாந்த ரீதியாக நிறை வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒருபோதும் சண்டை இட்டு கொண்டதில்லை.
நாங்கள் சகோதர பாசத்துடன் நெருக்கமாக இருக்கிறது. நாங்கள் முற்போக்கு சிந்தனை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். திமுகவுக்காக பிரச்சாரம் செய்கிறேன் என்பதற்காக ஒரு பெண்ணாகிய என் மீது செருப்பு வீசலாமா?
தவெக தலைவர் விஜய், தனது கட்சி தொண்டர்களுக்கு பெண்களை மதிக்க சொல்லி தர வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு முழு தகுதி உண்டு. விஜய் மனைவி சங்கீதா போன்று ஒரு அற்புதமான பெண்ணை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அவரும் மதிப்புக்குரியவர்தான். இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திவ்யா ஒரு புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் (Nutritionist) ஆவார். ஏழை எளிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக 'மகிழ்மதி' (Magizhmadhi) என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.
மருந்து நிறுவனங்களின் முறைகேடுகள் மற்றும் போலி மருந்துகள் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி, மருத்துவத் துறையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்.
தன் தந்தை சத்யராஜைப் போலவே பெரியாரியக் கொள்கைகளிலும், சமூக நீதியிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். "அரசியல் என்பது அதிகாரம் அல்ல, அது சேவை செய்வதற்கான ஒரு தளம்" என்ற கருத்தை முன்வைத்து அவர் செயல்பட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், கல்வி மற்றும் பெண்களுக்கான ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவர் திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். திமுக ஐடி விங் துணைச் செயலாளராக இருக்கிறார். இவர் வரும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. எனினும் திமுகவின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக