பாவேந்தர் படைப்புகளில் சாதி எதிர்ப்பும் பகுத்தறிவுச் சிந்தனைகளும்!
முனைவர் க. ஜெயபாலன்.
தனது சாதி நலன்களோ தனது குடும்ப நலன்களோ தனது கட்சி நலன்களோ என்று சிறு சிறு வட்டங்கள் சார்ந்து அதற்கு ஏற்ப பொதுநலம் பேசும் சிறிய பார்வை கொண்டவராக இல்லாமல் உலகப் பார்வை கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
அதனால்தான் அவரது கவிதைகள் விசாலப் பார்வையால் மக்களை விழுங்கும் தன்மை கொண்டவையாய் உள்ளன. கால வெள்ளத்தைக் கடந்து நிற்கின்றன. கவிதை நயங்கள் ஞாலம் முழுமைக்கும் பொருந்தும் தன்மையில் உள்ளன.
தமிழ் இனத்துக்கானதாக அவர் மிக ஆழமாக எழுதி இருப்பின் கூட நேர்மையானதாக அதே நேரத்தில் உயர் பண்புகளை அனைவருக்கும் உரைக்கும் விதமாக அவரது கவிதைகள் இயங்குகின்றன.
நேர்மை என்பது படைப்பாளிக்கு மிக முக்கியமான ஒரு பண்பாகும்.
நூல் விற்பனை, வியாபாரம் புகழ், விருது என்பதெல்லாம் இன்றைக்கு முதன்மையானதாக மாறி கருத்து, சமூக மாற்றம் என்பதெல்லாம் பின் தள்ளப்பட்டுள்ள சூழலில், கடந்த நூற்றாண்டில் எவ்வகையான வியாபார கலைஞனாக மாறிவிடாமல் முழுமையாக சமுதாய மாற்றம் மொழி இன வளர்ச்சி சமூக மறுமலர்ச்சி என்று ஆழமாக சிந்தித்த பாவேந்தர் பாரதிதாசன்.
பலரும் தொடத் தயங்கும் விடயங்களை மிக எளிமையாக தொட்டுப் பாடினார். பாரதியின் வழியை ஆழப்படுத்தி இன்னும் ஆழமாக விடுதலையைத் தூண்டினார்.
வள்ளலார், பண்டித அயோத்திதாசர், திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன், டி.எம்.நாயர், தந்தை பெரியார் உள்ளிட்ட ஏராளமான நவீன தமிழ்ச் சமூக முன்னோடிகளின் கருத்துகளையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு மகத்தான ஒரு படைப்பாளியாக பாவேந்தர் பாரதிதாசன் விளங்கினார்.
இவரது கவிதைகள் மற்றும் குறும் காவியங்கள் மற்றும் நாடகங்கள் உள்ளிட்ட அனைத்து படைப்புகளிலும் சாதி ஒழிப்பும் தமிழ் வளர்ச்சியும் பகுத்தறிவும் மறுமலர்ச்சியும் பின்னிப் பிணைந்து நிற்கும் என்றால் மிகை இல்லை.
இந்த மூன்று தன்மைகளில் சாதி ஒழிப்பு மற்றும் பகுத்தறிவு பார்வை கொண்ட பகுதிகளை இங்கு ஆராய்ந்து காண்போம்.

கருத்துகள்
கருத்துரையிடுக