மனு தர்மத்தை போதிக்கும், தூக்கி பிடிக்கும் பிராமணீயத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை அலசி ஆராயும் Brahminism என்ற புத்தகத்தை சிலகாலம் முன் படித்தேன்.
இந்த பதிவை எழுதுவதன் மூலம் பிராமணர்களை எதிர்க்க வேண்டும் என்று நான் இங்கு சொல்லவில்லை. பல பிராமண நண்பர்களை கொண்ட நான் எந்த தனிப்பட்ட பிராமணருக்கும் எதிரி அல்ல என்பதை பணிவுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். மற்றவர்களை தன்னை விட சிறுமைப்படுத்தி தன் காலின் கீழ் வைத்து இருக்க நினைக்கும் பிராமணீய உணர்வுகளையே கடுமையாக எதிர்க்கிறேன்.
பிராமணர் வேறு , பிராமணீயம் என்பது வேறு என்பதை இந்த புத்தகத்தை படித்த பிறகு மிக தெளிவாக நான் புரிந்து கொண்டேன். பெரும்பான்மையான பிராமணர்களே இந்த பிராமணீயத்தின் வெறிக்கு இறையானவர்கள்தான் என்பதையும் இந்த புத்தகம் தோலுரித்து காட்டி இருக்கிறது. நான் இந்த புத்தகத்தில் இருந்து கற்று அறிந்து கொண்ட உண்மைகளை மட்டுமே இங்கு பகிர்கிறேன்.
பிராமணீயம் என்றால் என்ன ???
இந்துக்களில் உயர்சாதி இந்துக்கள் என்று வரையறுக்கப்பட்ட பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பிராமணர்களை விட தாழ்ந்தவர்கள், மதிக்க தகாத இழி பிறவிகள், பிராமணர்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவர்கள். அதே போல பிராமணர்கள் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம், சமுதாயம், கோவில் இவை அனைத்தையும் தங்கள் கையில் வைத்து இருக்க உரிமையானவர்கள் மற்றவர்கள் அவர்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவர்கள், பெண்கள் அடக்கி ஆளப்பட வேண்டிய பிறவிகள், ஆண்களின் அடிமைகள் என்று கட்டமைக்கப்பட்ட ஒரு கொடுமையான சர்வாதிகார மனப்பாங்கே " பிராமணீயம் " என்று வரையறுக்கப்படுகிறது.
நாசியிசம், பாசிசம், சியோனிஸம் போன்ற உலகை ஆட்டுவித்த அதிகார வர்க்கங்களின் ஆரம்ப புள்ளியே பிராமணீயம்தான் என்பதை ஆதாரங்களுடன் இந்த புத்தகம் விளக்குகிறது . ஹிட்லரின் நாஜி படையினர் பயன்படுத்திய ஸ்வஸ்திக் சின்னம் பிராமணீயத்தின் ஒரு குறியீடு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தங்களை எல்லோருக்கும் மேலான உயர்வகுப்பாக காட்ட பிராமணீயம் எடுத்த முயற்சிதான் அந்த காலத்தில் அவர்களாகவே தங்களை போற்றி பாடி எழுதி வைத்துக்கொண்ட மநுஸ்மிருதி, உபநிஷத்துக்கள், கீதை போன்ற புராண கட்டுக்கதைகள் எல்லாமே. இப்படி எழுதி வைக்கப்பட்ட எல்லா உளுத்துப்போன புராண கட்டுக்கதைகளிலும் சூத்திரர்களை சிறுமைப்படுத்தி அடக்கி வைக்கவே பிராமணீயம் விரும்பி இருக்கிறது.
Source:
Chapter 18, Verse 44 – Bhagavad Gita, The Song of God
அதைத்தான் இன்று சமூக வலைதளங்களில் துவைத்து காயப்போட்டு கொண்டு இருக்கின்றனர்😎😎😎.
ஆனால் அதே சமயம் பல உபநிஷத்துக்களில் எங்கே பார்த்தாலும் பிராமணீய புராணம்தான். குறிப்பாக பல்வேறு உபநிஷத்துக்கள் பிராமணர்களை எல்லையற்ற, எங்கும் நிறைந்த, பிரபஞ்சத்தின் எல்லைகளை கடந்த ஆன்மீக சக்தியாக, கடவுளுக்கு நிகரானவர்களாக வரையறுக்கின்றன.
Source :
Brahma vidyopanishad 81 -111
Tejo Binupanishad 111- 1-43
Anna Punopanishad 11 -3-6
Darshano upanishad X -1-5
Aitareya Upanishad 3.3
Brihadaranyaka Upanishad 4.4.17
Brihadaranyaka Upanishad 1.4.10
Brihadaranyaka Upanishad 4.4.5
Chandogya Upanishad 3.14.1
Chandogya Upanishad 6.2.1
Chandogya Upanishad 6.8.7
Aitareya Upanishad 3.3.7
சதுர்வர்ணத்தின் அடிப்படையில் இந்தியாவை இன்று துண்டாடிக்கொண்டு இருக்கும், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓட்டுக்களை பொறுக்க வசதியாக கையிலெடுத்து கொண்டு இருக்கும் வலுவான சாதிய கட்டமைப்பை உருவாக்கி வைத்ததும் பிராமணீயம்தான். அதனால்தான் OBC வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தரும் மண்டல் கமிஷன் அறிக்கையை மூர்க்கத்தனமாக எதிர்த்தது பிராமணீயம்.
கிட்டத்தட்ட உலகை தங்கள் காலடியில் மண்டியிட வைத்து கொண்டு இருக்கும் இஸ்ரேலிய யூதர்களின் அறிவுக்கூர்மைக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த பிராமணீய மூளைகள் (திரை பட நடிகர் Y G மகேந்திரனின் மகள் மதுவந்தி ஒரு டீவி பேட்டியில் சொன்னது போல). ஆனால் அப்படிப்பட்ட வலிமையான மூளைகள் இந்தியா போன்ற அனைத்து மதத்தினரும் கலந்து பழகி வாழும் மதசார்பற்ற நாட்டை ஒரு இந்து மத வெறி பிடித்த, மனிதாபிமானத்தை கொன்று ஒழித்த ஒரு முழு இந்து ராஷ்டிரமாக மாற்றுவதிலேதான் பயன்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மையான வேதனை.மேற்கத்திய நாடுகளை சேர்ந்த மாக்ஸ் முல்லர் போன்ற பேரறிஞர்களையும் கூட கவர்ந்து பிராமணீயத்தின் அடிநாதமாக இருந்த ஆரியத்தை தூக்கி பிடிக்கவைத்ததுதான் பிராமணீயத்தின் சாதனை. இன்றும் இந்தியா முழுக்க இருக்கும் மாக்ஸ் முல்லர் பவன்கள் ஆரிய பெருமையை பேசுபவையாகவே இருக்கின்றன.
சமகாலத்தில் பார்பனீயத்தின் ஆதிக்க மற்றும் மூடத்தனமான நம்பிக்கைகளுக்கு சவுக்கடி கொடுத்த சமணம் மற்றும் பௌத்தம் இரண்டையும் தங்கள் அடிமைகளாக இருந்த க்ஷத்திரியர்களான அரசர்களை கொண்டு அழித்தொழிக்கும் வேலையையும் கனகச்சிதமாக செய்தது இந்த பிராமணீயம்.பிராமணர் அல்லாத காயஸ்த வகுப்பை சேர்ந்த சுவாமி விவேகானந்தர், சிவ சேனா தலைவர் பால்தாக்கரே, உயர் சாதி இந்துக்களான ஜாட்டுக்கள், வொக்கலிகாஸ், நாயர்கள் போன்றோரையும் கூட தங்கள் சிந்தனைக்குள் கொண்டு வந்து இருக்கிறது பிராமணீயம் என்றால் அதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை நாம் தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும்.
இந்த பிராமணீயத்தின் முதன்மை பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொண்ட ஹெட்கேவார், கோல்வால்கர் போன்ற சித்பவன் பிராமணர்களால் வளர்த்தெடுக்கப்பட்டதுதான் இன்று மதவெறியால் இந்தியாவை துண்டாடிக்கொண்டு நடுவண் அரசை திரை மறைவில் இருந்து இயக்கி கொண்டு இருக்கும் RSS அமைப்பு.
பிராமண வகுப்பை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான அருண் ஷோரி 'Worshipping False Gods' என்ற தனது புத்தகத்தில் பிராமணீயத்தை கடுமையாக எதிர்த்து பௌத்தத்தை தூக்கி பிடித்த அம்பேத்கரின் நிறைய கருத்துக்களுடன் உடன்படுகிறார்.
மார்க்சிய புரட்சியாளர் என்று பலராலும் போற்றப்பட்ட பிராமண வகுப்பை சேர்ந்த பிரபல அரசியல்வாதி MN Roy - Manabendra Nath Roy (Born As Narendra Nath Bhattacharya better known as M. N. Roy) தன்னுடைய The Restless Brahmin என்ற சுயசரிதை புத்தகத்தில் சர்வாதிகாரத்துடன் மற்ற வகுப்பினரை தன் அடிமையாக வைத்து இருக்க நினைக்கும் பிராமணீய மனப்போக்கை கடுமையாக விமரிசனம் செய்து இருக்கிறார்.
The Annihilation of Caste என்ற தன்னுடைய பிரபலமான புத்தகத்தில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களும் பிராமணீயத்தின் அதிகார வெறியை கடுமையாக விமரிசனம் செய்து இருக்கிறார்.
இப்படி பிராமணீயத்தை கடுமையாக எதிர்க்கும் பிராமணர்களே பலர் இங்கு உண்டு. திராவிட கழகங்களும், பகுத்தறிவாளர்களும் பிராமணீய/இந்து மனப்பாங்கை ஏன் மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் என்பதற்கு இதுபோல பல ஆதாரபூர்வமான உண்மைகள் இந்த புத்தகத்தில் தரவுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய மற்றும் உலக அரசியலில் பிராமணீயத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்து வருகிறது என்பதும் இந்த புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
கடைசியாக இந்த புத்தகத்தை எழுதியவர் திராவிட கழகத்தை சார்ந்தவர் இல்லை என்பதையும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள்.
மீண்டும் மிக தெளிவாக சொல்லுகிறேன் .. இந்த பதிவு எழுதுவதன் மூலம் பிராமணர்களை எதிர்க்க வேண்டும் என்று நான் இங்கு சொல்லவில்லை. பல பிராமண நண்பர்களை கொண்ட நான் எந்த தனிப்பட்ட பிராமணருக்கும் எதிரி அல்ல என்பதையும் பணிவுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
மற்றவர்களை தன்னை விட சிறுமைப்படுத்தி தன் காலின் கீழ் வைத்து இருக்க நினைக்கும் பிராமணீய உணர்வுகளை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்று சொல்ல விரும்புகிறேன். அதனால் பண்பான அன்பான பிராமண நண்பர்கள் என் மீது கண்மூடித்தனமாக பாய வேண்டாம்.😎

கருத்துகள்
கருத்துரையிடுக