செய்தி

மதுரை வாசகர் வட்டம் சார்பில் சிறப்புக் கூட்டம், தாமரை தண்ணீர் தொட்டி அருகில் உள்ள மாநகராட்சி சிறப்புப் பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பாளர் பா. சண்முகவேலு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பேரா. ஜி. ராமமூர்த்தி சென்ற மாத செயல்பாடுகளை விவரித்தார். ஹைகூ கவிஞர் இரா. இரவி, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் எழுத்துலகம் பற்றி சிறப்புரை ஆற்றினார். அவர் தன் உரையில், இறையன்பு அவர்கள் எளிமையுடன் பல சாதனைகள் புரிந்தவர். தன் கல்வி அறிவு மற்றும் அனுபவங்களுடன் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் பயனடையும் வண்ணம் நூற்றுக் கணக்கான நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் பணியாற்றி சமுதாயத்துக்கு சேவையாற்றினார். அவரது சிறப்பான குணம், அவர் பிறருக்குச் செய்த உதவிகளை மறந்து விடுவார். தன் பணிக்காலம் முடிந்த பின்பு, அரசு அளித்த எந்தப் பதவியையும் ஏற்காமல், எழுத்து மற்றும் பேச்சாற்றலுடன் தமிழகத்தை வலம் வருகிறார். தமிழ்நாடு எழுத்தாளர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒருவர் என்று இறையன்புவின் பெருமைகளை எடுத்துரைத்தார். அடுத்த நிகழ்வாக, கவிஞர் இரா. இரவி எழுதிய இரு நூல்களின் அறிமுகம் நடைபெற்றது. இரவி எழுதிய "சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம்" -- என்ற திறனாய்வு கட்டுரைகளின் சிறப்பை எழுத்தாளர் பா. சண்முகவேலு எடுத்துரைத்தார். இரவி எழுதி, முனைவர் M. சாலமன் பெர்னாட்ஷா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த "Let Thousand Flowers Bloom" - நூலினை பேரா. ஜி. ராமமூர்த்தி அறிமுகப்படுத்தி, இந்நூல் தமிழைப் போல் எளிய நடையில் உள்ளதாகவும், சமூக,பொருளாதார, காதல், மாற்றுத் திறனாளி, குழந்தைகள் குறித்தும் கருத்து உள்ளதாகக் கூறினார். முனைவர் வாசுகி, முனைவர் உ. அனார்கலி, வாசகர்கள் சப்ராபீபீ, பாஸ்கரன், கவிஞர் முருகேசன் வாழ்த்திப் பேசினர். ஆசிரியர்கள் சதாசிவம், கோவிந்தராஜ், தங்கராஜ், கூட்டத்திகான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வாசகர் ஜெயசீலன் நன்றி கூறினார்.

கருத்துகள்