படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." இரண்டுவிதமான ஊக்கங்கள் இருக்கின்றன. ஒன்று வெளியிலிருந்து வரக்கூடிய ஊக்கம். மற்றொன்று பணியிலேயே இருக்கக் கூடிய ஊக்கத்திற்கான அம்சங்கள். பதவி உயர்வு, பணியின் பெயர், சம்பளம், பாதுகாப்பு, இன்னபிற வசதிகள் ஆகியவை பணியின் வெளியே இருக்கின்ற ஊக்கக் கூறுகள். ஆனால் இவற்றிற்காக மட்டுமே எல்லோரும் பணியாற்றுவதில்லை. ஆற்றுகிற பணியின் தன்மையும் பலரை ஆட்படுத்துகிறது. பணியிலேயே இருக்கக்கூடிய திருப்தி, சேவைக்கான சாத்தியக்கூறுகள், மற்றவர்கள் நடந்து கொள்கிற விதம், அங்கீகாரம், தன் ஆற்றலை முழுமையாக வெளிக்கொண்டுவர உதவியாக இருக்கும் சூழல் போன்றவை முக்கியமானவை. பணியில் திருப்தி கிடைக்காவிட்டால் எவ்வளவு சம்பளம் கிடைத்தாலும் பலரால் வேலைபார்க்க முடியாது. எதற்கெடுத்தாலும் எரிந்துவிழுகிற மேலாளர் இருந்தால், பதவி உயர்வைக் கண்டு ஒருவர் மகிழ்ச்சியடைந்துவிட மாட்டார். சேவை மனப்பான்மை உள்ளவர்கள் சின்னப் பதவியையும் பெரிதாக்கிவிடுவார்கள். அவர்கள் அந்தப் பணியின் முழுமையான தன்மையை ஆராய்ந்து அதன்மூலம் என்னென்ன நன்மைகள் செய்ய முடியும் என்பதைப் பட்டியலிட்டு இதுவரை யாரும் செய்யாத செயல்களையெல்லாம் செய்து அந்தப் பணிக்கே பெருமையை ஏற்படுத்தி விடுவார்கள். அவர்களுக்குப் பணி என்பது ஓர் ஊடகம், அதன்மூலம் நாம் ஆற்றுகிற விடையே முக்கியம் என்பதில் மும்முரமாக இருப்பார்கள் முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 498. இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்