முக்கடல் சங்கமத்தில் முப்பால் நாயகர்!
கவிஞர் இரா. இரவி !
*****
முப்பது அடி உயரமான பாறையில் நூற்றி முப்பத்தி மூன்று அடி
முப்பால் 133 திருக்குறள் அதற்கு ஒப்பாக வள்ளுவர் சிலை !
சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கும் சுந்தரச் சிலை
சுற்றி வளைக்கும் சுனாமியே விலகிச்சென்றது திருவள்ளுவரிடம்!
சுனாமி வந்தபோது அனைவரையும் புரட்டிப்போட்டது
சும்மா விட்டுச்சென்றது அய்யன் திருவள்ளுவர் சிலையை!
இந்தியாவின் வடக்கே இமயமலை எல்லை என்றால்
இந்தியாவின் தெற்கே திருவள்ளுவர் சிலை எல்லை என்றானது!
அன்று விவேகானந்தர் பாறை என்று விழித்தனர்
இன்று திருவள்ளுவர் பாறை என்று விழிக்கின்றனர்
கலைஞரின் ஏற்பாட்டில் கணபதி சிற்பி வடித்தார்
காண்போரின் உள்ளத்தில் பிரமிப்பை விதைத்து வென்றார்!
இரண்டாயிரம் ஆண்டு ஜனவரி ஒன்றில் திறக்கப்பட்டது
இருபத்தி ஐந்து ஆண்டுகளாக உயர்ந்து நிற்கும் கம்பீரம்!
அறத்துப்பால் 38 அடியில் பீடம் பொருள், இன்பம் 95 அடியில் சிலை
ஆக மொத்தம் 133 அடியில் அமைக்கப்பட்ட பிரமாண்டம்!
இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்டது
இந்தியாவே வியந்து பார்த்து ரசித்து வருகின்றது!
படகு சவாரி செய்துவிட்டு முப்பால் நாயகரைப் பார்ப்பது பரவசம்
பார் போற்றும் திருக்குறளை எழுதியவருக்கு வானளாவிய சிலை!
காகம் அமர சிலை வைப்பர், கலைஞர் அமைத்தது “மேகம் அமர சிலை”
காவியக் கவிஞர் வாலி பொருத்தமாகப் பாடினார் அன்று!
உலகம் உள்ளவரை திருக்குறள் என்றும் வாழும்
உலகம் உள்ளவரை திருவள்ளுவர் சிலையும் வாழும்.!

கருத்துகள்
கருத்துரையிடுக