நூல் : வானவில் வாழ்க்கை நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

நூல் : வானவில் வாழ்க்கை நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை. பக்கங்கள் 120, விலை ரூ. 90 ****** நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் என்னுரையில் “வாழ்க்கை எண்ணமயமானது, எண்ணங்களே வாழ்க்கைக்கு வண்ணங்களைத் தீட்டுகின்றன. வாழ்க்கை ஒரு வானவில், எண்ணங்களைப் போலவே வாழ்வின் வண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கும்.” வானவில் நிரந்தரமில்லை என்றாலும் வண்ணங்களால் அழகானது. அதுபோலவே இந்த வாழ்க்கை நிரந்தரமற்றது என்றாலும் வண்ணமயமாக அழகாக்குவது நம் கடமை என்பதை வலியுறுத்தி உள்ளார். ராணி வார இதழில் கட்டுரைகளாக பிரசுரமான 28 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். ராணி வார இதழில் பிரசுரமான போதே தொடர்ந்து படித்து விட்டு, எனது முகநூலிலும், வலைப்பூவிலும் பதிந்து வந்துள்ளேன். மொத்தமாக நூலாகப் படிப்பதில் பரவசம். நூலில் 28 கட்டுரைகள் உள்ளன. சிறிய கட்டுரைகளாக இருப்பதால் எளிதாக படிக்க முடிகின்றன. முதல் கட்டுரை, ‘மகிழ்ச்சியின் தூண்கள்’. ஒரு ஜென் கவிதை உள்ளது. குளிர் காய்வதற்காக சுள்ளி பொறுக்குகிறாய் சுற்றி பொறுக்குவதிலேயே உன் ஆயுள் முடிகிறது இறுதி வரையில் நீ குளிர் காய்வதேயில்லை. இந்த கவிதையைப் பணத்தோடு ஒப்பிடுகின்றார். மனிதன், ‘பணம் பணம்’ என்று ஓடுகிறான், போதும் என்ற எண்ணம் வருவதே இல்லை. உண்மையான மகிழ்ச்சி, பணத்தில் மட்டும் இல்லை என்பதை மனிதர்கள் உணருவதில்லை. மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடு இருந்தால்தான் வெற்றிபெற முடியும். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் மனதில் பதியும் வண்ணம் கல்வெட்டு கவிதைகளை பொன்னான வாசகங்களை எழுதி முடித்து உள்ளார். பதச்சோறு சில மட்டும் உங்கள் பார்வைக்கு, இதோ : ஊருக்கு பாலம் கட்ட ஒரு கோடி கைகள் வேண்டும். உறவுக்குப் பாலம் கட்ட ஒரு ஜோடி கைகள் போதும். அறியாமை – அலட்சியம் - சோம்பல் அவற்றுடன் ஆணவச் செருக்கை அடியோடு ஒழித்து விரட்டினால் வானவில் வாழ்க்கை வண்ணமயமாகும். தடைகளைத் தகர்க்கும் தன்னம்பிக்கை வேண்டும் முயற்சிகளை முடுக்கும் தளராத நம்பிக்கையும் வேண்டும் தோல்வியைக் கடக்கும் துணிச்சலும் வேண்டும். சிந்தனையை மாற்றுங்கள், வாழ்க்கை மாறும், பின்னர் வசந்தமாக மலரும். வாய்ப்புகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். நாம் தான் விழிப்புணர்வுடன் இருந்து அதைப் பயன்படுத்த வேண்டும். நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதுவது, பேசுவது மட்டுமன்றி கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இயக்குனராக உள்ளார். சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் செயலாளராகவும் உள்ளார். புத்தகத் திருவிழா உள்பட பல அரங்குகளில் பேசி தன்னம்பிக்கை விதைத்து வருகிறார். நேரத்தை திட்டமிட்டு வகுத்துப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி வருகிறார். எழுத்து, சொல், செயல் மூன்றிலும் தனிமுத்திரைப் பதித்து வருகிறார். இவரது உரை கேட்டு பலருக்கு உத்வேகம் பிறந்து சாதித்தது போல, இவரது நூல்கள் படித்து உணர்ந்து சாதனை புரிந்திட வாசகர்களுக்கு உதவிடும் நூல் இது. வாங்கிப் படித்துப் பாருங்கள். நான் எழுதியது முற்றிலும் உண்மை என்பதை உணர்வீர்கள். வெறும் புகழ்ச்சி அல்ல, உண்மை. நூலாசிரியர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் பயின்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும், ‘சிறந்த மாணவர்’ என்ற விருது வழங்கிப் பாராட்டி உள்ளனர். நூலாசிரியரிடம் சிறிது நேரம் உரையாடினால் போதும், அவரிடம் உள்ள சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும். நம்மிடமிருந்து சோம்பல், கவலை எல்லாம் காணாமல் போய்விடும். அவருடைய எழுத்தும் பேச்சும் இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டி உரம் சேர்த்து வெற்றிகளை, சாதனைகளை குவிக்க வழி செய்கின்றன. ‘ஒரு நிமிட பொறுமை, வாழ்க்கைக்கே பெருமை’. இந்த இரண்டு வரிகளை கடைபிடித்தால் போதும். நமக்கு கோபம் வராது. ஒருவர் நம்மை காயப்படுத்தினால் பதிலுக்கு பொறுமையின்றி அவரை நாம் காயப்படுத்தி விடுகிறோம். அதனால் வரும் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும். எனவே ஒரு நிமிட பொறுமை என்பது அவசியம் என்பதை நூலாசிரியர் நன்கு உணர்த்தி உள்ளார். பழகும்போது புரியாத பிரியம் ; பிரியும்போது புரியும் என்ற ஆட்டோ வாசகத்தைப் படித்து உணர்த்தி உள்ளார். பிரிந்துவிட்டு வருந்துவதை விட, பிரியாமல் அன்பு செலுத்துவது மேல் என்பதை விளக்கி உள்ளார். இது காதலர்களுக்கும் இணையர்-களுக்கும் தரும் ஆலோசனையாகப் பார்க்கிறேன். பிறப்பே ஒரு வெற்றி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தந்தையிடமிருந்து தாயின் கருவறையை அடைவதில் வென்ற உயிரணுவின் வளர்ச்சி தான் ஒவ்வொரு மனிதனும். ஆக, கருவாக உருவாகும் போதே தொடங்கிய போட்டியும் சவாலும் கல்லறைக்கு செல்லும் வரை தொடர்கிறது. நாம் கருவாக உருவாகி குழந்தையாகப் பிறந்ததே மிகப்பெரிய வெற்றி என்கிறார். ஆக, நாம் மனிதனாகப் பிறந்ததே வெற்றி தான். நூல் முழுவதும் தன்னம்பிக்கை கருத்துக்கள் நிரம்பி வழிகின்றன. நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு பாராட்டுகள்.

கருத்துகள்