பராசக்தி ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! இயக்கம் . சுதா கொங்கரா !

பராசக்தி ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! இயக்கம் . சுதா கொங்கரா ! ****** தமிழுக்காக தமிழகத்தில் நடந்த போராட்டத்தை திரைப்படத்தில் உயிரோட்டமாக உயிராக்கி உள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா மூவரும் போட்டிப் போட்டு நடித்துள்ளனர். இதில் அதர்வா பாத்திரம் முதலிடமும், சிவகார்த்திகேயன் இரண்டாம் இடமும், ரவிமோகன் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். மொழிக்காக உயிர்துறந்தவர்கள் தமிழர்கள் என்பதை இன்றைய இளையதலைமுறையினர் கேள்விப்பட்டு இருப்பார்கள். நேரிடையாக பார்த்தது இல்லை. அவர்களுக்கு உணர்த்திடும் வண்ணம் இப்படம் வந்துள்ளது. மெல்லிய காதல் காட்சிகளும் இரண்டு பாடல்களும் உள்ளன. மத்தியை ஆள்வோர் யாராக இருந்தாலும் அவ்வப்போது இந்தியை புகுத்தும் முயற்சியை இன்றுவரை செய்துதான் வருகிறார்கள். இந்தித் திணிப்பை தமிழ்நாடு என்றும் எதிர்க்கும் பயம் இருந்தபோதும், அவ்வப்போது தமிழர்களைச் சீண்டிப் பார்ப்பது வழக்கம். இந்தி எதிர்ப்பு என்பது தமிழர்கள் உள்ளத்தில் நீரு பூத்த நெருப்பு என்பதை உணர்த்தும் படம். இப்படத்தின் மூலம் அந்த தீ நன்கு பரவி உள்ளது. படம் பார்த்துவிட்டு வரும் அனைவருக்கும் தமிழ்ப்பற்றும் இந்தித்திணிப்பிற்கான எதிர்ப்பும் மனதில் நன்கு விதைத்து உள்ளது படம். அண்ணா பேசிய வசனத்தை படத்தில் வைத்திருந்திருந்தால் கூட இவ்வளவு பிரபலம் ஆகி இருக்காது. தணிக்கை குழு அக்காட்சியை வெட்டியதன் காரணமாக அறிஞர் அண்ணா பேசிய ஒளிப்படமும் வசனமும் சமூக வலைத்தளங்களில் பரவி கோடிக்கணக்கான மக்களிடம் பதிந்து விட்டது. திரையில் வசனம் மிக நன்றாக உள்ளது. இந்திக்கு, வட இந்தி பேசுவோருக்கு நாங்கள் எதிரி அல்ல. இந்தித் திணிப்பிற்குத்தான் நாங்கள் எதிரி என்பதை வசனத்தின் மூலம் உணர்த்தி உள்ளனர். 25 இடங்களில் வெட்டப்பட்டும். பல இடங்களில் பீப் ஒலித்தும் படத்தின் உணர்வை அவர்களால் சிதைக்க முடியவில்லை. தற்போது இந்தியைப் புகுத்த நினைக்கும் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் படம் வந்துள்ளது, இந்த ஒரு படம் போதும் இந்தித்திணிப்பிற்கான எதிர்ப்பை தீயென பரவ விட்டுள்ளது. அச்சம் என்பது மடமையடா பாடல் பின்னால் ஒலிப்பது. செழியன் என்ற சிவகார்த்திகேயன் முதலில் மிதவாதியாக இருக்கிறார். தம்பியை போராட்டம் வேண்டாம் என்று வற்புறுத்துகிறார் .பின்னர் இந்திக்காரர்களின் சதி புரிந்து செழியனும் போராளியாக மாறுகிறார். நமது மொழிக்கான உரிமையை உணர்த்திடும் படம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டமும் உண்மை. மொழி என்பது சத்தமும் எழுத்தும் இல்லை. இனத்தின் மூச்சுக்காற்று, அடையாளம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளனர். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி பாத்திரமும் படத்தில் வருகிறது. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று திரைப்பட வரிசையில் பராசக்தியிலும் அமோக வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர். இந்தி எதிர்ப்புப் போராட்டம், மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதியில் நடந்ததை பலர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். அதே மேலமாசி வீதி மதுரை என்று கட்சி அலுவலகம் பெயர்ப்பலகை எழுதி இருந்தது, படத்தை எடுக்குமுன் இப்படம் குறித்து ஆய்வு செய்தே திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர். மதுரையில் நேதாசி சாலையில் மாப்பிள்ளை விநாயகர் சோடா நிறுவனம் இன்றும் இயங்கி வருகின்றது. போராட்டத்திற்கு அந்தக் கம்பெனி பெயருடன் வாகனம், குண்டு சோடா பாட்டில் படத்தில் வருகின்றது. போராட்டத்திற்கு அந்த நிறுவனம் அன்று உதவியது வரலாறு. குரு சோமசுந்தரம் அவர்கள் கலைஞராகவும், சேத்தன் அறிஞர் அண்ணாவாகவும் கனகச்சிதமாக பொருந்தி உள்ளனர், நேரு, இந்திராகாந்தி பாத்திரத்திற்கான நடிகர், நடிகை தேர்வும் சிறப்பாக உள்ளது. பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கி சூடு உண்மையில் நடந்த கொடூரம். அதை அப்படியே பதிவு செய்துள்ளார். எவ்வளவு கொரமாக மனிதாபிமானற்ற முறையில் பிற மாநிலங்-களிலிருந்து தமிழ் பேசாத சிறப்புக் காவலர்களை வரவழைத்து, அடித்து, உதைத்து சுட்டுக் கொன்று உள்ளனர்.மறக்கமுடியாத வன்முறை வெறியாட்டம் . படத்தின் முடிவில் 6 பேர் இறந்ததாக அரசு சொன்னாலும், 200க்கும் மேற்பட்டோர் இறந்தது உண்மை. அதனை மறைத்து விட்டார்கள் என்ற செய்தியும் சொல்லியது சிறப்பு. இலங்கையில் தமிழினத்தை அழிக்குமுன் யாழ் நூலகத்தை அழித்தார்கள். அதுபோலத்தான் ஒரு இனத்தை அழிக்க, அந்த மொழியை அழிக்க முனைவார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் தமிழைப் பறித்து இந்தியைப் புகுத்தும் கனவு பலிக்காது என்பதை மெய்ப்பிக்கும் படம். தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை புத்தகத்தில் படித்து இருக்கிறோம். இருமொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடர வேண்டும். கல்விநிதியை தர மறுத்து இந்தியை ஏற்கச் சொல்லி இன்றும் வற்புறுத்தி வரும் ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் தேர்தலில் பாடம் புகட்டிட உதவிடும் சிறந்த படம். --

கருத்துகள்