முயன்று எழு, முன்னேறு ! (வெற்றியின் திறவுகோல்) நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

முயன்று எழு, முன்னேறு ! (வெற்றியின் திறவுகோல்) நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! வெளியீடு : குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை.600017 பக்கங்கள் 80, விலை ரூ. 80 ****** தொட்டு விடும் தூரத்தில் வெற்றி என்று தலைப்பிட்டு, நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் என்னுரை எழுதிவிட்டு, 28 தலைப்புகளில் தன்னம்பிக்கை விதைக்கும் கட்டுரைகள் வடித்துள்ளார். கோவையின் பெருமைகளில் ஒன்றானவர். எழுத்து, பேச்சு இரண்டு துறையிலும் முத்திரை பதித்து வருபவர். இந்த நூல் படிக்கும்முன் உள்ள மனநிலைக்கும், படித்து முடித்தபின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலின் வெற்றியாகும். கவிஞர் ஜெ.கமலநாதன் வாழ்த்துரை வழங்கி உள்ளார். படிக்கும் வாசகர்களுக்கு உற்சாகமும். உத்வேகமும். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் தரும் எழுத்துக்கள். முயன்று எழு முன்னேறு என்ற இந்த நூலைப் படித்து முடித்தால் சோம்பேறியும் சுறுசுறுப்பு அடைவான் என்பது உண்மை. இன்றைய இளைஞர்கள் பலர் சாதித்து வருகின்றனர். சிலர் கவலையுற்று சோம்பி விரக்தியில் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த நூலைப் படித்தால் சாதனையாளர்களாக மாறுவார்கள் என்பது உண்மை. கட்டுரையில் தலைப்புகளே தன்முன்னேற்றம் தருபவை. பதச்சோறாக சில தலைப்புகள் மட்டும் உங்கள் பார்வைக்கு. எழுவதே வெற்றி, முயற்சியே மூலதனம். தயக்கத்தை தகர்த்தெறி. முன்னேறு முன்னேறு. இப்படி கட்டுரைகளின் தலைப்புகளை படித்தாலே உந்துசக்தி வந்து விடுகின்றது. கட்டுரைகளை முழுவதும் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன. ஆயிரம் முறை தோற்றாலும் இன்னொரு முறை முயன்று பார் என்றார் சுவாமி விவேகானந்தர் என்று தொடங்குகின்றது நூல். இதைப் படித்தவுடன் தொடர்ந்து முயற்சி செய்து, மின்சாரம் கண்டுபிடித்து வென்ற எடிசன் நினைவுக்கு வந்து விடுகிறார். முடிந்தவரை முயற்சிப்பதல்ல முயற்சி, எடுத்ததை முடிக்கும்வரை முயற்சிப்பதே முயற்சி, நம்மில் பலர் சிலமுறை முயன்று விட்டு, தோற்றதும் துவண்டு முயற்சியை கைவிட்டு விடுவதைப் பார்க்கிறோம். அது தவறு. தொடர்ந்து முயன்று வெல்ல வேண்டும் என்பதை சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் நன்கு உணர்த்தி உள்ளார். மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் ஒரு செயலை முடிக்க, வெல்லும் வரை தொடர் முயற்சி வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். கட்டுரையின் முடிப்பு முத்தாய்ப்பு. “ஆகவே, விழாமல் இருப்பதல்ல வெற்றி, விழுந்தபின் எழுவதுதான் வெற்றி! தோல்வியின் சுவடுகளில் வியர்வைத் துளிகளைச் சிந்திக் கொண்டே இருங்கள். அதில் வெற்றி பயிர் விடும்”. ந லைப் படிக்கும் போது நம் மனதிற்குள் வெற்றிக்கான சூத்திரங்களை பதியம் போட்டு வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர். நூலாசிரியர் பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர். இவருடைய எழுத்தைப் படித்தாலும், பேச்சைக் கேட்டாலும், நமக்கு தன்னம்பிக்கை என்ற ரத்தம் ஊறி விடும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை நூல் தருகின்றது. எந்தவகை மனிதர் நீங்கள்? என்று கேள்வி கேட்கிறார். கால்பந்து விளையாட்டில் பந்து வரட்டும் என்று காத்திருக்காமல் பந்தைத் தேடி நாம் ஓட வேண்டும். அதுபோல வாய்ப்பு, வாசல் தேடி விரட்டும் என்று காத்திருக்காமல் வாய்ப்பைத் தேடி நாம் தான் ஓட வேண்டும் என்று உணர்த்துகின்றார். அவர்கள் தான் சாதித்து ஜொலிக்கிறார்கள். இரண்டாம் வகை, பந்து தன்னிடம் வந்தால் மட்டுமே விளையாடும் மந்த வீர்ர்கள், சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் மற்றவர்கள் உத்தரவுகளுக்கு காத்திருப்பவர்கள். இவர்கள் இரண்டாம் வகை என்கிறார். மூன்றாவது வகை விதியை நொந்து வீழ்ந்து கிடப்பவர்கள் என்று மூன்று வகையாக பிரிக்கிறார். இதில் நாம் முதல்வகையாக வாய்ப்பைத் தேடிச் சென்றால் சாதிக்கலாம். பிறந்தோம், இறந்தோம் என்பதல்ல பிறந்தோம் சாதித்தோம் என்பதே வாழ்க்கை என்பதை உணர்த்திடும் நூ ல். வாங்கிப் படியுங்கள், தன்னம்பிக்கை பெறுங்கள், வாழ்வில் பெற்றி பெறுவீர்கள். பிடிவாதம் எனும் மனோபலம் என்ற இறுதிக் கட்டுரையில், பிடிவாதம் என்னும் மனவலிமையை, ஆக்கச்செயலுக்காக திருப்பி விட்டால், நிலவில் இருந்தும் கனிகள் பறிக்கலாம், உலகத்தின் தலைவிதியை மாற்றிக் காட்டலாம், இதைத்தான் வைராக்கியம் என்று சொல்கின்றனர். எல்லோரும் பிடிவாதம் வேண்டாம் என்று தான் சொல்வார்கள். நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களோ, நல்ல விசயத்தை சாதிக்க, இலட்சியத்தை அடைய பிடிவாதம் என்னும் வைராக்கியம் வேண்டும் என்று வித்தியாசமாக அறிவுறுத்துகின்றார். பிறப்பு என்பது சம்பவமாக இருந்தாலும், இறப்பு என்பது சரித்திரமாக இருக்க வேண்டும் என்று மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன பொன்மொழியை மேற்கோள் காட்டி, படிக்கும் வாசகர்கள் மனிதில் வெற்றிக்கான விதையை விதைத்து உள்ளார். உங்களால் முடியும் என்று முதலில் நம்புங்கள் என்கிறார். வேலையை ஒத்திப் போடாமல் உடன் முடியுங்கள். செய்யவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு, வேலை முடிந்ததும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். மனம் தளர்கின்ற போது இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். முயற்சியைத் தடுக்கும் முட்டாள்களிடமிருந்து எப்போதும் விலகியே இருங்கள். வெற்றி என்பது நமது பிறப்புரிமை. இப்படி வெற்றிக்கான சூத்திரங்களைப் பட்டியலிட்டு நூலாசிரியர் வெற்றி மகுடம் நமக்கும் சூட்டி அவரும் சூடி இருக்கிறார்.

கருத்துகள்