*வா.செ.குழந்தைசாமி நினைவு நாளில்..,*
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋
இந்தியப் பொறியாளர் வா.செ.குழந்தைசாமி 1929ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் பிறந்தார்.
நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம்
எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத்துறை திட்டக்குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும், சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் இருந்தவர்.
சர்வதேச தொலைநிலைக் கல்வி குழுவின் ஆசிய துணைத் தலைவராக, காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுத்தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர். தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்றவர்.
பன்முக ஆளுமைத் திறன் கொண்ட வா.செ.குழந்தைசாமி தனது 87வது வயதில் 10.12.2016 அன்று மறைந்தார்.
கோடி கோடியாய் இலக்கியங்கள் படைக்கப்பட்டாலும் கோடியில் ஒன்றாய் இறவா வரம் பெற்றுத் திகழ்வது நம் வள்ளுவம். வள்ளுவத்திற்கு இந்த சிரஞ்சீவித்துவம் எப்படி கிட்டியது என்பது ஒரு சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி. அதை அலசி ஆராய சுவாரஸ்யமானதும் கூட. இவரது வாழும் வள்ளுவம் என்கிற திருக்குறளின் அமரத்துவத்தின் அடிப்படை பற்றிய ஆய்வு நூல் அதற்கான விடையை தருகிறது. அறிஞர், கவிஞர் பேச்சாளர், ஆய்வு மேதை , விஞ்ஞானி, செறிவு மிக்க ஆசிரியர் என பன்முறை திறன் கொண்ட வா.சே.கு அவர்கள்
குலோத்துங்கன் என்கிற புனைப்பெயரில் மனிதகுலம் வளர்ந்த வரலாறு முழுவதையும் அது நாகரிகமும் பண்பாடும் பெற்ற சரிதத்தையும் `மானுட யாத்திரை`யாக கவிதைப்படுத்தியிருக்கிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக