படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இஸ்லாம் மார்க்கம், பொதுப்புத்தியில் மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு, அரசியலும், திரைப்படங்களும் மிகுந்த பங்களிப்பை செய்திருக்கின்றன. சரி, நாம் செய்யத்தவறியது என்ன... அதன் உண்மைத்தன்மைகளை, சித்தாந்த மேன்மைகளை, திருகுர்ஆனின் மூலமாகவும், நபிகளார் வாழ்ந்து காட்டிச்சென்ற வாழ்க்கையின் மூலமாகவும், நமக்கு பொக்கிஷமாய் கிடைத்த சத்தியத்தை, தெளிவாக பரப்பியிருக்க வேண்டும். அதில் தவறிவிட்டோம். எப்படி...எதனால்... திருகுர்ஆனையும், நபிகளார் வாழ்ந்து காட்டிச்சென்ற வாழ்க்கை முறையையும், முழுமையாக அறிந்தவர்கள், நம் மதகுருமார்களான ஆலிம் பெருமக்கள் மட்டும் தான். நபிகள் பெருமானார், தனது வாரிசுகள் என்று அறிவித்துச்சென்ற, ஆலிம் பெருமக்கள், நமக்கு விலை மதிக்க முடியாத சொத்துக்கள் இல்லையா, அவர்களை எப்படியெல்லாம் நாம் பாதுகாக்க வேண்டும், செய்கிறோமா, ஒருபோதும் இல்லை. பல வருடங்கள் மிகுந்த சிரமத்துக்கிடையில், கட்டுப்பாட்டோடும், ஒழுக்கத்தோடும் ஒரு தவம் போல மார்க்கக்கல்வியை கற்று, தேர்ந்து, தெளிந்து, யா ஹக்கு யா ஹக்கு என்று, வீறுகொண்டெழுந்து, சத்தியத்தைப்பரப்ப, உத்வேகத்துடன் வரும் "ஆலிம்களை" நாம் எப்படி வைத்திருக்கிறோம்... அவர்களை தொழுகைப்பள்ளிகளில் வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், தோராயமாக மாதம் ஐயாயிரத்தில் இருந்து இருபதாயிரத்துக்குள் தான் இருக்கும். இந்த சம்பளத்தில், இன்றைய காலகட்டத்தில், வீட்டு வாடகை, சாப்பாட்டுச்செலவு, மருத்துவச்செலவு, குழந்தைகளுக்கான பராமரிப்புச்செலவு, கல்விச்செலவு, இன்னும் எதிர்பாராத எத்தனையோ செலவினங்கள் எல்லாவற்றையும் சரிக்கட்டி குடும்பத்தை நடத்துவதென்பது, மிக மிகக்கடினமானது. இவ்வளவு நெருக்கடிகளுக்குள்ளும், வேலை செய்யும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏவல்களுக்கெல்லாம் கட்டுப்பட்டு, எதையும் வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் தவித்து, எவ்வளவோ கற்பனைகளுடனும் இலட்சியத்துடனும் மார்க்கக்கல்வி கற்று, தீனை முழங்குவோம் என்று வெளியே வந்தவர்களுக்கு, நடைமுறை வேறுமாதிரியிருக்க, உரிய மரியாதை கூட அளிக்கப்படாமல், மன உளைச்சலுக்கு ஆளாகி, கூனிக்குருகி நிற்பவர்களால், எப்படி சத்தியத்தை ஓங்கி ஒலிக்க முடியும் ? காலங்காலமாக, எவ்வித பரிசீலனையும், சீரமைப்பும் இல்லாமல், இப்படியே தான் போய்க்கொண்டிருக்கிறது ஆலிம்களின் வாழ்க்கை. அதன் பலன், இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது, பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கே தெரியாத நிலை... ஆலிம்களின் வாழ்க்கைக்கு மறுசீரமைப்பை, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தலைமை காஜி அவர்கள் செய்ய வேண்டும். இதற்கான பொருளாதார தேவைகளை, வக்பு வாரியம் நிறைவேற்ற வேண்டும்.

கருத்துகள்