இளங்கோவன் சுந்தரம்
ஆய்வறிஞர் பொதிய வெற்பன் அவர்களின் அருமையான பதிவுக்கும் அவர் மேற்கோள் காட்டிய பிரமிள் அவர்கள் சிந்தனைக்கும் நன்றி பாராட்டி இந்தப் பின்னூட்டத்தை படைக்கிறேன்.
"தங்களுடைய அருமையான சிந்தனை ஓட்டத்தினால் தமிழ் இலக்கிய உலகில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வகி பாகங்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளீர்கள் .அவர்களைப் பற்றிய நூறு பக்க வாழ்க்கை வரலாறுகள் ஆகிய இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை நூல்களை வெளியிட இத்தகைய எதிர்ப்பு இருந்தது மறக்க முடியாத உண்மை தான். இருப்பினும் தமிழ் இலக்கியத்தின் பேராற்று வெள்ளம் அத்தகைய தடைகளை மீறி அந்த ஆளுமைகளை சிறப்பு செய்துள்ளது"
பேரறிஞர் அண்ணா பற்றிய இந்திய இலக்கிய சிற்பிகள் நூலை காவியா சண்முகசுந்தரம் எழுதி சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ளது .
அறிஞர் அண்ணா நாவல் ,சிறுகதை, நாடகம், திரைக்கதை ,கவிதை இவற்றில் எல்லாம் ஈடுபட்டிருந்தார் என்பதும் அவருடைய பல படைப்புகள் படைப்பாளுமை உச்சத்தை தொட்டு உள்ளன என்பதும்இந்த நூலிலும் சாகித்திய அகாதமி நடத்திய அண்ணா 99 கருத்தரங்கம் பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சி நிகழ்விலும் பேராசிரியர் அன்பழகன் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சாகித்ய அகாடமி ஆலோசனை குழு உறுப்பினர்கள் போன்றவர்களால் அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள் "என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் பேரறிஞர் அண்ணாவை இலக்கியச் சிற்பியாக ஏற்க எதிர்கொள்ளல்கள் எழுந்த சூழலை மிகவும் தாண்டி தந்தை பெரியார் பற்றிய இந்திய இலக்கிய சிற்பிகள் நூலை பேராசிரியர் ஆறு. அழகப்பன் அவர்கள் எழுதி சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ளது. இந்த நூலை அவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மூலமாகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் உரைநடையை நவீனப்படுத்தியதில், கூர்மைப்படுத்தியதில் ,எழுத்து சீர்திருத்தத்தில் பாசாங்கையும்,ஆடம்பர அலங்காரத்தையும் தூள் தூளாக்கியதில் தந்தை பெரியாரைப் போன்ற சாதனையாளர்கள் யாரும் இல்லை. அவருடைய பேச்சு நடையிலும் எழுத்து நடையிலும் ஓர் எழுத்து சந்தம் இயற்கை சங்கமம், தமிழின் வல்லினம் மெல்லின இடையின நடனம் ரீங்கரித்தது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நேரடித் தன்மை, எளிமை , கூர்மை ,சுற்றி வளைக்காமல் ,பிறரை குறிப்பிடாமல் மேற்கோள் காட்டாமல், வளையாமல் நெளியாமல் " துணிவு ,தெளிவு ,கனிவு" மின்னுகிற உரைநடையைத் தந்தை பெரியார் நேரடிப் பேச்சிலும் எழுத்திலும் கையாண்டார்.
இன்று அவரது கருத்தியல்எதிரிகள் கூட தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சாதி ஒட்டைச் சேர்க்க முடியாத தமிழ் சமூக அமைப்பு இந்த சாதனையை உறுதி செய்துள்ளது. அவரது எழுத்துச் சீர்திருத்தம் அதன் பின்னர் வந்த கலைஞர் எம்ஜி ஆர் போன்ற பெருந்தலைவர்களால் ஏற்கப்பட்டு இன்று அரசின்ஏற்பைப் பெற்றுள்ளது.
தந்தை பெரியாரின் எடுத்தமைப்பே இன்றைய எழுத்து அமைப்பு தந்தை பெரியாரின் எழுத்து நடையை இன்றைய இனிய தெளிவான தமிழ் நடை வடமொழியையும் பழங்கதைகளையும் தூக்கி வீசி எறிந்த அசலான செந்தமிழ் மண்ணின் சொல்லும் திறமை அவருடைய எடுத்துரைப்பியல் இன்றைய உரைநடையும் பேச்சு நடையும் எழுத்தமைப்பும் அவரது கருத்தியல் நோக்கையும் சரியான போக்கையும் மெய்ப்பித்து வருகின்றன.
பேரறிஞர் அண்ணாவின் இலக்கிய படைப்புகளை தொகுத்து பார்த்து அவற்றை நாடறியும் வண்ணம் ஒரு தொகுப்பு அவருடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சாகித்திய அகாதெமி யால் வெளியிடப் பெற்றுள்ளது. பச்சையப்பன் கல்லூரி தமிழ்்துறை தலைவரும் தமிழ்நாட்டில் உச்ச நிலை சிந்தனையாளர்களில் ஒருவருமான பேராசிரியர் இராம குருநாதன் அவர்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு வழிகாட்டி அதனைத் தொகுத்து சாகித்ய அகாடமி வழியாக வெளியிட்டுள்ளார்.
இதுவே தடைக் கற்களைப் படிக்கற்கள் ஆக்கிய சாதனை வரலாறு.
கருத்துகள்
கருத்துரையிடுக