படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிப்பில் 'ஃப்ரீடம்' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் புரோமோஷனுக்காக சினி உலகம் யூடியூப் சேனலுடனான நேர்காணலில் சசிகுமார் பங்கேற்றார். அப்போது, மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிற்கும், தனக்குமான உறவு குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, "நான் நேசித்த மனிதர்களில் இயக்குநர் பாலு மகேந்திரா மிக முக்கியமான நபர். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இயக்குநர் பாலா பணியாற்றினார். பாலாவிடம் உதவியாளராக நான் பணியாற்றினேன். இதனை என்றுமே மாற்ற முடியாது. ஏழாம் வகுப்பு பயிலும் போதே திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன். அப்போது இருந்தே பாலு மகேந்திராவின் படங்களை பார்க்க தொடங்கினேன். அவருடைய பேட்டிகள் எனக்கு உந்துசக்தியாக அமைந்தன. அந்த அளவிற்கு நான் நேசித்த பாலு மகேந்திரா ஒரு முறை என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது தான் 'தலைமுறைகள்' படத்தின் கதையை என்னிடம் கூறினார். கதையை கூறி முடித்த பின்னர், 'நான் எல்லாருடைய கதவுகளையும் தட்டிவிட்டேன் சசி. இறுதியாக உன்னிடம் வந்திருக்கிறேன். இப்படத்தை நீ தயாரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். 'முதலிலேயே என்னிடம் வந்திருக்கலாமே சார், இப்படத்தை நான் தயாரிக்கிறேன்' என்று அவரிடம் கூறினார். இதனால் மிக மகிழ்ச்சியாக சென்றார். ஏற்கனவே, பொருளாதார ரீதியாக நெருக்கடியில் இருக்கும் போது, எதற்காக இப்படத்தை தயாரிப்பதற்கு ஒத்துக் கொண்டீர்கள் என்று என்னிடம் பலரும் கேட்டனர். ஆனால், நான் நேசித்த ஒரு மனிதரை மிகவும் மகிழ்ச்சியாக அனுப்பியதையே ஆஸ்கராகவும், தேசிய விருதாகவும் கருதினேன். நான் கூறியது போலவே 'தலைமுறைகள்' திரைப்படம் எனக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது" என்று சசிகுமார் தெரிவித்துள்ளார். நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

கருத்துகள்