படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஃப்ரீடம்’ திரை அனுபவம்! – மு.இராமசுவாமி https://cinirocket.com/freedom-screen-experience/ சத்ய சிவாவின் நெறியாளுகையில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிற படம் ‘ஃப்ரீடம்’! ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு அப்புறம் சசிகுமார் பெயர் சொல்லி வருகிறது ‘ஃப்ரிடம்’! ‘மெட்ராஸ் மேட்னி’, ‘குட் டே’, ‘லவ் மேரேஜ்’, ‘3 பிஹெச்கே’ வரிசையில் வருகிற இன்னொரு தமிங்கிலீஷ் பெயரிலான தமிழ்ப் படம்! சுதந்திரம், விடுதலை என்பவை ஏற்கெனவே தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களாயிருப்பதால், இது ‘ஃப்ரீடம்’ ஆகியிருப்பது தெரிகிறது. பார்வையாளரைத் தன்வசப்படுத் தக்கூடிய பெயராகத்தான் இருக்கிறது அது! இது, 1947 ஆகஸ்ட் 15 அன்று, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா பெற்றிருந்த அரசியல் சுதந்திரம் பற்றியது அல்ல; 1995 ஆகஸ்ட் 14 அன்று, விசாரணைக் கைதிகளாக, சுதந்திரம் பெற்ற இந்தியாவில் - தமிழ்நாட்டின் வேலூர் திப்புமகால் சிறைக்குள் நான்காண்டுகளாய்த் தள்ளப்பட்டிருந்த, எந்தக் குற்றமும் புரியாத, அகதிகள் முகாமைச் சேர்ந்த புலம் பெயர் ஈழத் தமிழர்கள் 43 பேர் தீரத்துடன் சிறையுடைப்பு நடத்தி, காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி, சொந்த மண்ணில், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கப் பறந்த நாள்! இது இந்த மண்ணில் நடந்து, நாம் கடந்து போயிருக்கிற, இப்பொழுது மறந்தும் போயிருக்கிற, ஒரு வரலாற்று நிகழ்வை, 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நமக்கு நினைவுபடுத்தி, நம் தொப்பூள்க் கொடி உறவுகளின் ‘பிரபாகர’த் தீரத்தைப் பேச வைத்திருக்கிறது இந்த ‘ஃப்ரீடம்’! 1991 இல், இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி, ‘தனு’ என்கிற மனித வெடிகுண்டால் கொடுரமாகக் கொல்லப்பட்ட நிலையில், இதற்குச் சம்பந்தமேயற்ற, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலுமுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து, அங்கிருந்த அப்பாவிகளை நூற்றுக்கணக்கில் அள்ளிச் சென்று, வேலூர் சிறையில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்திருந்த இன்னொரு கொடுமையை இந்த ‘ஃப்ரீடம்’ பேசுகிறது. நான்காண்டுகளாய் இவர்கள்மீது எந்தவித நியாய விசாரணையும் நடைபெற்றிருக்கவில்லை. குடும்பத்தைப் பிரிந்தும், குழந்தை குட்டிகளைப் பிரிந்தும், மனைவியைப் பிரிந்தும், பேத்தியைப் பிரிந்தும், காவல்துறையினரின் அன்றாட அடக்குமுறையை எதிர்கொண்டும் இருந்தவர்களில், சுடுரத்தம் கொண்ட 43 பேர் மட்டும், பூட்டிய சிறைக் கதவுகளுக்குள்ளும், குழம்பிப்போன மனச் சிறைகளுக்குள்ளும் குமுறிக் கிடந்து, தவித்துத் தத்தளித்து, ஒருநாள், ‘இங்கிருந்து வாழ்வதைவிட, சாவதேமேல்! சாவதை விடவும் சரித்திரம் ஆவதே மேல்!’ என முடிவுசெய்து, வளைக்குள் வளையவந்த எலிகளாயிருந்தவர்கள், மனதிற்குள் பொருமி, மனதில் உறுதிபெற்ற நெஞ்சினராய், புலிகளாய்த் தங்களைப் புடம்போட்டுக் கொண்டவர்களின் கதை இது! நானும் ஓர் அப்பாவிக் கிழ அகதியாய், பேத்தியைத் திருச்சி அகதிகள் முகாமல் தனித்து விட்டுவிட்டு நிர்க்கதியாய் வேலூர் சிறைக்குக் கொண்டுவரப்பட்டவன்! எலி புலியாகிற வித்தையைச் சொல்லும் ஒரு மந்திரமாய், ‘ஃப்ரீட’த்தில் நடித்திருக்கிறேன். நான் நடித்திருக்கிற படம் என்பதால், விமரிசிக்க என் மனம் தயங்குகிறது. ஆனால் திரைப்பட இரசிகனாய்ப் படத்தின் ஓரத்தில் நின்றும், நடித்த நடிகனாய்ப் படத்தின் ஆரத்தில் நின்றும் உள்வாங்கிய அந்நேர அனுபவங்களைப் பகிர்ந்து எழுதலாம் தானே! சிறைப் பறவையாய் நடிக்க ஒப்புக்கொண்டவுடன், கோவை சென்று தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொறுப்பாளர் தோழர் ஆறுச்சாமியைச் சந்திக்கிறேன். அவரும் தோழர் கோவை இராமகிருஷ்ணனும், தப்பிச் சென்ற தோழர்களின் பக்கத்துச் சிறை அறையில்-செல்லில்-வைக்கப்பட்டிருந்தவர்கள். அவர்களுடன் சிறைக்குள்ளிருந்துகொண்டே, பக்கத்து வீட்டுக் குடித்தனக்காரர்களாய் அவர்கள்மேல் பரிவுகொண்டவர்களாய் உறவாடி இருந்திருக்கின்றனர். அந்தக் கதைகளைக் கேட்டதால், எனக்குள் வெப்ப அலை ஒன்று, உள்ளுக்குள் பரவ ஆரம்பித்திருந்தது. பொறிக்கிற பக்குவச் சூட்டிற்குள் நான் தள்ளப்பட்டிருந்தேன். பழ. நெடுமாறன் அய்யா அவர்கள் அன்றைய முதல்வரைச் சந்தித்து இது பற்றிப் பேசியிருந்த பதிவையும் வாசிக்க முடிந்தது. என் நினைவு சரியாயிருந்தென்றால் அவர்களுக்கிடையிலான அந்த உரையாடல் இப்படியிருக்கும்: - ‘பிடிபட்டவர்கள்போக தப்பிச் சென்றவர்களை எல்லாம் பிரபாகரன் சுட்டுக் கொன்றுவிட்டாராமே?’ / ‘யார் சொன்னது?’ / ‘உளவுத் துறை… நீங்கள் சொல்லுங்கள்!’ / முதல்வராகக் கேட்கிறீர்களா, இல்லை, கட்சியின் தலைவியாகக் கேட்கிறீர்களா?’ / ‘ஏன்? முதல்வராகக் கேட்டால்…?’ / ‘எனக்கு எதுவும் தெரியாது’ / ‘சரி, கட்சியின் தலைவியாகக் கேட்கிறேன். சொல்லுங்கள்!’ / ‘எல்லோரும் பத்திரமாக இயக்கத்திற்குள்தான் இருக்கின்றனர்’ / ‘நான் அவுங்களெ சும்மாதானெ உள்ளெ வச்சிருந்தேன். ஏன் தப்பிச்சுப் போகணும்?’ - இப்படிச் செல்லும் அந்த உரையாடல்! அது இருக்கட்டும்! ‘சும்மாதானெ வச்சிருந்தேன்’ என்கிற அந்தச் ‘சும்மா’வின் வலியைத்தான், சிறைக்குள்ளிருந்து ‘ஃப்ரீடம்’ பேசுகிறது. உண்மையில், தப்பிச் செல்ல முயன்றவர்களில் 3 பேர் சயனைடு சாப்பிட்டு உயிர்விட்டதாகவும், 17 பேர் ஈழத்திற்கே தப்பிச் சென்று, புலிப் போத்துக்களாய்த் தங்களைப் ‘பிரபாகர’ ஊற்றில் கரைத்துக் கொண்டு விட்டதாகவும், மீதி 23 பேர், காவல்துறையிடம் பிடிபட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறின. இப்பொழுது, பெயர் தெரியாத அவர்களில் ஒரு கிழவன், இந்தக் கிழவனைத் தனக்குள் வாரியெடுத்துக் கொண்டிருந்தான். 16 ஜூன் 2022 இல் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று சொன்னார்கள். நான் அங்குதான் முதலில் நெறியாளுநர் சத்யசிவாவைச் சந்திக்கிறேன். கோவைக்குப் போய்வந்த தகவலைச் சொல்லுகிறேன் - அவருக்கு அத்தனை மகிழ்ச்சி! அதுதான் கதை என்கிறார். ‘கழுகு’ பார்த்திருக்கிறேன். அதன் வித்தியாசமான களம் எனக்குப் பிடித்திருந்தது. இதுவும் வித்தியாசமான களம். ‘தி கிரேட் எஸ்கேப்’, ‘ரிடெம்ஸன் தி டே’ படங்களைப்போல என்று பேசிக்கொண்டிருந்துவிட்டு, வாழ்த்துகள் சொல்லுகிறேன். படப்பிடிப்பில் அவருடைய இயங்கு திசைகளைப் பார்க்கையில், அவருக்கு எது தேவையோ அதை மட்டும் நடிகர்களிடம் / தொழில்நுணுக்கர்களிடம் கேட்டு வாங்குகிற அவரின் நேர்த்தியில், என் மனசு மகிழ்ந்தது. படப்பிடிப்பில் என் முதல் கவனிப்பிலே, ‘முதல் சுவடிலேயே, தன்னைக் கெட்டிக்கார வித்தைக்கார’னாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார் ‘சத்யசிவா’! மனசுக்குப் பிடித்த கதைப்பொருள்; என் வயதிற்கேற்ற பிடித்தமான கதாபாத்திரம்; கதையின் நாயகனாக நடிப்பவர் பிரியத்திற்குரிய சசிகுமார்; கச்சிதமான உளிகொண்டு என்னைச் செதுக்குகிற படத்தின் நெறியாளுநர் சத்யசிவா! - இவை போதும் என்று உள்ளுக்குள் பூரித்திருந்தேன். நடிக்கிற இடத்தில், என்னை நடிப்பால் மிரட்டியும், நடிப்பு முடிந்து மடங்குற இடத்தில், என்னைத் திரட்டியும், எனக்குப் புத்துணர்வு தந்துகொண்டிருந்த சக நடிகப் பயணிகளின் அன்பும் எனக்குள் புதுப் பாடம் நடத்திக் கொண்டிருந்தது. இப்படித்தான் ஃப்ரீடத்தின் படப்பிடிப்பு - ஒரு நல்ல காரியத்தில் நாமும் இணைந்திருக்கிறோம் என்கிற பெருமிதத்தை, எனக்குள் விதைத்திருந்தது. முழுப் படமாய் இப்பொழுது பார்க்கையில், அந்தப் பெருமிதம் பேருண்மையாய் எனக்குள் பிரவகித்துக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின்போது ஒருநாள் சசிகுமாரிடம் சொன்னேன், ‘உங்களுக்குக் ‘கிடாரி’க்குப் பிறகு இது பேசப்படக்கூடிய படமாக இருக்கும் என்று! அவரும், அந்த என் விரிச்சியை இரசித்துக் கொண்டிருந்தார். ஆனால், ‘ஃப்ரீடம்’ வெளிவருவதற்குள், இடையில் வந்த ‘அயோத்தி’யும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யும் அவரை இன்னும் பெரும்பெரும் உயரங்களுக்கு தூக்கிக் கொண்டு சென்றிருக்கின்றன. ‘ஃப்ரீட’த்திற்கு ஏன் இந்தச் சோதனை? பந்தயத்தில் ஓடுகிற ஒருவன், விசையில், மனக்குறியில் தடுமாற்றமின்றி, மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடி, இலக்கைத் தொடவேண்டும். அந்தக் கணக்குத் தப்பிப்போய், மூச்சு வாங்கிக்கொண்டு… வாங்கிக்கொண்டு தன் விசையில் தடுமாறி ஓடினால், அது, ஓட்டத்திற்கு ருசிப்பைத் தராது. படத்தின் களமும், வடிவமும் அந்த இடைவெளியைக் கேட்டிருந்தால், அந்த இடைவெளியும் இன்னுமொரு அழகாய் மிளிரும். பணத்தைத் தேத்தித் தேத்தி, உழைப்பைச் சிந்தியவர்களை ஏய்த்து ஏய்த்துப் படம் பண்ணினால், அந்த இடைவெளி, படத்தின் தரத்தைப் பாதிக்கும் என்பதை, லாபக் கணக்கின் கனவில் மட்டுமே மிதக்கும் தயாரிப்பாளர்கள் உணரவேண்டும். அந்தத் திட்டமிடல் இல்லாமல், கதை வேண்டுகிற நாட்கள் / காட்சி அமைப்புகள் / நடிகர்கள் / தொழில்நுணுக்கர்கள் ஆகியோரின் தேவையை தரத்திற்கானதாய்க் கருதாமல், வெறுமனே எண்ணிக்கை அளவிற்கானதாய் மட்டும் கருதினால், எப்படியாவது புரட்டிக் கொள்ளலாம் என்றிருந்தால், அவை கவைக்கு உதவாது என்பதை அவர்கள் உணரவேண்டும். அல்லது அதற்கேற்ற கைக்கடக்கமான கதையைக் கொண்டு, கைக்கடக்கமான நடிகர்கள் / தொழில் நுணுக்கர்களைக் கொண்டு முயல்வதே நல்லது என்கிற பாடத்தையும் இந்தப் படம் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. காட்சிகள் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழல்களில், வந்திருப்பவரைக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால், அவற்றிற்கிடையிலான காட்சி இயைபில் சில நெருடல்கள் வருகின்றன. இது, தயாரிப்பு நிர்வாகம் திடிர் திடீரென்று விழித்துக் கொள்வதால் நிகழக்கூடியது. எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பவர் படத்தின் நெறியாளுநர் சத்யசிவா! பாவம் அவர்! நான் அவரை முதலில் பார்க்கையில், சிகப்பாய், சிரித்த பழமாக இருந்தார்’. இப்போது அவரைப் பார்க்கையில், கருத்து, மெலிந்து ஆளே உருமாறி இருக்‘கிறார்’. இந்தக் ‘கிறா’ருக்குள் அவரின் மனவலி பொதிந்து கிடப்பது தெரிகிறது. அந்தப் புன்சிரிப்பும், முகப் பொலிவும் தொலைந்துபோய் இருக்கிற அவரைப் பார்க்கையில், இந்தப் படம் அவருக்கான வாழ்வின் விளக்காக அமையவேண்டும் - அமையும் என்றே நம்புகிறேன். உலகத் தமிழர்களே உங்களைக் கொண்டாடுவார்கள் சத்தியசிவா சார்! இதற்குத் தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தியிருக்கிற, சசிகுமாரையும்தான்! இப்பொழுதும், சசிகுமார் என்கிற மனிதரின் தனிப்பட்ட முயற்சியில் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது என்றுதான் கருதுகிறேன் – நம்புகிறேன்! சசிகுமார், ஈழத்திலிருந்து 1990 இல் தப்பிவந்து, இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தன் மனைவியுடன் ஒரு கொட்டடிக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர். அவர் பெயர் ‘மாறன்’! அவர் மனைவி கருவுற்றிருக்கிறார். குழந்தையுடன் சோகத்தையும் சுமந்திருந்தாலும், இந்த மண்ணில் பிறக்கப் போகிற தங்கள் குழந்தைக்கான கனவில் அவர்கள் ஆழ்ந்திருக்கின்றனர். அப்பொழுது அவர்கள் வாழ்வில் இடியாக இறங்கியது, திருப்பெரும்புதூரில், அன்றைய பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தியின் கொலை! புலன்விசாரணைக் குழுவினர் பலரையும் கைதுசெய்து விசாரணை நடைபெற்றிருக்கக்கூடிய நிலையில், தமிழகம் முழுக்க உள்ள அகதிகள் முகாமிலிருந்து, சமீபத்தில் அகதிகளாகப் பதியப்பட்டிருந்தவர்களை, இரண்டுநாள் விசாரணைக்கென்று வேலூருக்கு அழைத்துச் செல்கின்றனர். அப்படி மண்டபத்திலிருந்து கைதான பலரில் மாறனும் ஒருவர்! மாறன் என்கிற பெயரைக் கேட்கையில், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்து, பின் வீரப்பனுடன் தொடர்பாய் இருந்து, பின் கைது செய்யப்பட்ட மாறன் எனும் வரலாற்றுப் பாத்திரத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. இதுபோல், அங்கங்கிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்ட பலரும் சந்திக்கிற இடமாகிறது வேலூர் திப்பு மகால்! அங்கு அவர்கள் எதிர்கொள்கிற அக, புறச் சித்திரவதைகள், மன அவதிகள், பிரிவினையை அவர்களுக்குள்ளேயே உண்டுபண்ணி, அதில் குளிர்காய எத்தனித்த காவல்துறையின் குல்லூகச் செயல்கள் - அதற்கான வாழ்வியல் போராட்டங்கள் என்று சிரிப்பைத் தொலைத்தவர்களாய், எதற்கென்றெ தெரியாமல் நான்காண்டுகளாய்ச் சிறைக் கொட்டடிக்குள் தங்கள் வாழ்வைத் தொலைத்தவர்களாய் இருந்த அவர்கள், சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அசாதாரணத்தைச் செய்து, அந்தக் காளவாயிலிலிருந்து தப்பிக்கின்றனர். எந்த அச்சமுமில்லாமல், சுதந்திரமாய் மூச்சுக் காற்றை வெளியிட அவர்கள் மேற்கொண்டிருந்த அதிசாகசப் பயணத்தை கற்பனை கலந்து சொல்லப் பார்த்திருக்கிறார் சத்யசிவா! உங்கள் கைகளுக்கு, கண்ணிரில் முத்தமிடுகிறேன் சத்யசிவா சார்! சித்திரவதை என்றால் என்ன? இந்திய அரசியல் சட்டம் சித்திரவதையைப் பற்றித் தெளிவுபடுத்தி இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஐ.நா. சபையால் நிறைவேற்றப்பட்ட சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை இப்படிச் சொல்கிறது:- ‘ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற, அல்லது தண்டிக்க, அல்லது அச்சுறுத்த, அரசு அதிகாரியின் தூண்டுதலால், அல்லது ஒப்புதலின் பெயரால், உடல்ரீதியாக அல்லது மனரீதியாக வலியை ஏற்படுத்துவது, சித்திரவதை’ என்கிறது. இதை, இந்தப் படத்தின் முதற்பகுதி, அழுத்தம் திருத்தமாகக் காட்டுகிறது. இதுதரும் மன அழுத்தத்திலிருந்து மீண்டு, கழிவறையைத் தூர்த்து, 120 மீட்டர் தூரத்திற்குச் சுரங்கம் தோண்ட முற்படுவதும், மண்ணை எங்கு எடுத்துப் போய்க் கொட்டுவது என்று திட்டமிடுவதும் - அதை இவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருப்பதும், காவல்துறையினர் அறைகளைச் சோதனை இட்டுக் கொண்டே இருப்பதையும் ஒரே சட்டகத்தில் காட்டுகிற நவீனம் அழகு! படத்தில் பல முகங்கள் இருந்தாலும், சில முகங்களுக்கு மட்டுமே கதைகள் தொட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன. படத்தின் மையம், சித்திரவதையும் தப்பித்தலும்தாம்! அதைக் கதையாக்குவதற்கு மாறனின் மனைவி செல்வி, அவன் குழந்தை, அப்பாவைக் கண்டிராத அக்குழந்தையின் ஏக்கம் - இவை உணர்வால் பூட்டுப்போடும் இப்படத்திற்கான புங்கை மரத்து நிழல்கள்! ‘இக்கரையில் நானிருக்க, அக்கரையில் அவரிருக்க’ என்கிற பாணியில், நாயகன் - நாயகிக்குச் சோகத்தைக் கிளறி எடுக்கும் பாடல் ஒன்று வைக்காததற்கு படத்தின் நெறியாளுநர் பாராட்டப்பட வேண்டியவர்! காட்சிகள், நூல் பிடித்தமாதிரி ஒரே நேர்க் கோட்டில், உயர உயர நகருவது சிறப்பு! அதிர்ச்சியும் பிரமிப்புகளாயுமே நகருகிறது படம்! வரலாற்றில் நிகழ்ந்திருக்கிற ஒரு சம்பவத்திற்கு, தன் பாத்திரங்களைக் கொண்டு உயிரூட்டி இருக்கிறார் சத்யசிவா! பிருமாண்டப் பொருட்செலவில், பலநூறு நடிகர்களைக் கொண்டு, அத்தனைத் தத்ரூபமாகத் தயாரித்திருக்க வேண்டிய படம் இது! வெறும் கையை வைத்தே, நெறியாளுநர் சத்யசிவா பிரமிக்க வைக்கும் தரத்தில் முழம் போட்டிருக்கிறார். இருப்பதைக் கொண்டும், கட்டப்பட்டிருக்கிற கைகளைக் கொண்டும் கலை இயக்குநர் அற்புதங்கள் செய்து, எளிமையில் பிருமாண்டங்கள் தரப்பார்த்திருக்கிறார். மாநிலக் கல்லூரி விடுதியின் ஒரு பகுதியை, காவல்துறையின் கர்ஜனைக்குரிய இடமாகவும், கைதிகள் அடங்கிக் கிடக்கிற தொழுவமாகவும், கலவரம் ஏற்படும் பூகம்பமுமாக மாற்றிக் காட்டியதிலும், ஈவிபி ஸ்டுடியோவிற்குள் சுரங்கத்திற்கான கால்வெட்டி, உண்மையான சுரங்கத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதற்காகவும் கலை இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர். இவற்றையெல்லாம் ஒளிக்குள் சிறைப்படுத்தி, ஓவியமாய் ஆக்கிக் காட்டியிருக்கிற ஒளியமைப்பாளர், தப்பிக்கக் கைதிகள் சுரங்கம் தோண்டும் பணியையும், காவல்துறையினரின் கரடுமுரடுத் தன்மைகளையும், டிரக்கில் தப்பிப்பதையும், சுழல்விளக்கு வண்டியில் காவல்துறை பரபரப்பைக் கூட்டுவதையும் எதிரெதிராய் நிறுத்திவைத்து அழகு செய்திருக்கிற படத்தொகுப்பாளரின் பணியும் என்றும் நினைக்கப்படும்! ஜிப்ரன், படத்தின் உணர்வுகளுக்குள் சாகசகம் செய்யக்கூடிய அருமையான இசையமைப்பாளர். ஆனால், இங்கு, இசை, மண்ணிழந்து, மனசிழந்து, மானமிழந்து வந்து நிற்கிற அப்பாவி அகதிகளின் மன வலியை அர்த்தத்துடன் மீட்டியெழுப்பி, மனசின் குரலாய் அவை ஒலித்து, அவர்கள் மேலான ஒரு பச்சாதாபத்தை உருவாக்கவில்லை என்று படுகிறது. காவல்துறை அதிகாரிகளின் கரடுமுரடுத்தனமே, அதிகார அடாவடித்தனமே படம் முழுக்க விரவி நிற்பதாய்ப் படுகிறது. மனசின் கசடுகளைப் போக்கத் துணை நிற்கவில்லை என்பதாய் எனக்குப் படுகிறது. பின்னணி இசையை விடவும், அது இசைக்க மறக்கும் மௌனங்களே, இசை கைவிட்ட தருணங்களே நம்மை இன்னமும் ஆழமான சோகத்திற்குள் தள்ளக்கூடியது. ஒருவேளை, அந்தச் சோகம் பார்வையாளரைத் தொடர்ந்து விடக்கூடாது, அராஜகத்தின் அந்தக் குரூரம் மட்டுமே மனதில் நிற்கவேண்டும் என்று இந்தவகையாய் இசைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. கதையோடான உணர்வுபூர்வ ஒன்றுதல் எங்கோ தடைப்படுகிறது. இந்த ஒன்றுதல் கூடாது என்கிற கருத்தில் இசை பெய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. பாடல் வரிகள் எவையுமே மனசைத் தொடமுடியாமல், மற்றொரு சாகசத்தைக் நமக்குள் கடத்தாமல், கடந்து போய்விடுகின்றன. ‘அயோத்தி’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ சசிகுமாரை, ‘ஃப்ரீடம்’ சசிகுமார் மறக்க வைத்திருக்கிறார். அப்துல் மாலிக் இல்லை இந்த சசிக்குமார்! தர்மதாஸும் இல்லை இந்த சசிக்குமார்! இவர் ‘மாறன்’ – பேரைக் கேட்டாலே அதிருதில்ல என்கிற, தமிழர் தீரத்தின் அடையாளம்! அட்டகாசம் செய்திருக்கிறார். அப்துல் மாலிக், தர்மதாஸ் வரிசையில் மாறனும் பேசப்படுவார்! ஜெய்பீம் லிஜோமோல் ஜோஸும், செல்வியாக, அவருக்குண்டான பாத்திரத்தை அளவோடு செய்திருக்கிறார். கடந்த மூன்று, நான்கு படங்களாக, சசிகுமாருக்கு டூயட் பாடல் கொடுக்காமலிருப்பதற்கு, வருத்தப்படுவதாய்ச் சிலர் குரல் கொடுப்பதையும் பார்க்க முடிந்தது. புரிந்துகொள்ள முடியவில்லை! யப்பா தாமஸ் ஆல்வா எடிசா! நீதான் எங்கள் தமிழ் சினிமா ரசிகர்களைக் காப்பாற்ற வேண்டும்! சுதேவ் நாயர், சிறைக் காவல் உயரதிகாரியாய் வருகிறார். ‘எல்(எஃப்)டிடிஇலெ யாருடா நீ?’ என்று கேட்கிற முதல் மிடுக்கிலேயே, நாற்காலியில் நம்மை நிமிர்த்தி உட்கார வைத்து விடுகிறார். அதன் பின் உருட்டல் மிரட்டலுடன், எரிச்சல் ஏமாற்றத்துடன் தன் பங்கை அழகாக்கித் தந்திருக்கிறார். மாளவிகா அவினாஷ், மனித உரிமை வழக்கறிஞராக மிடுக்காக வந்து அகதிகளான எங்களுக்கான குரலாக ஒலிக்கிறார். போஸ் வெங்கட், மண்டபம் முகாம் காவல் கண்காணிப்பாளராக வருகிறார். ரமேஷ் கண்ணா, சிபிஐ அதிகாரியாக, மிக எளிமையாக, மனிதாபிமானம் கொண்டவராய், இந்திய நிலவரத்தை காஷ்மீரிலிருந்து இராமேஸ்வரம் வரைக்கும் புரிந்திருப்பவராக, தன் இயல்பான நடிப்பால் அசத்துகிறார். இவர்கள் போக, எங்கள் அகதிக் கூட்டமாக, பாய்ஸ் மணிகண்டன், அந்தோனி, கேரள மணிகண்டன், நார்வே வின்செண்ட், போப், பிரசாத் (இணை நெறியாளுநரும்கூட), குணா ஆகியோர், அவரவர் பாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருந்தோம். ஜூலை 10 இல் திரையரங்குக ளைத் தேடி வந்திருக்கவேண்டிய திரைப்படம், ஏதோவொரு சிக்கலில் நேற்று வெளியாகவில்லை என்பதுதான், நான் முன்பே குறிப்பிட்டிருந்த தயாரிப்பு நிர்வாகத்தின் செயற்பாட்டை அடையாளப் படுத்துகிறது. ஆனால், நல்ல படத்தில் நாமும் பங்களித்திருந்தோம் என்பதன்றி, வேறொன்றும் கிடைத்திலது பராபரமே! பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பதைப்போல், பிருமாண்டமாக எடுத்திருக்க வேண்டிய இந்தப் படத்தின் களத்தை, கலை இயக்குநர், ஒளி ஓவியர், கிடைத்த நடிக நடிகையர் ஆகியோரைக் கொண்டு அற்புதப்படுத்தி இருக்கிறார் நெறியாளுநர் சத்யசிவா! வாழ்த்துகள்! பாராட்டுகள்! - முனைவர் மு.இராமசுவாமி #டூரிஸ்ட்_ஃபேமிலி #ஃப்ரீடம் #சத்

கருத்துகள்