*ஜெர்மன் பிளாக் ஃபாரஸ்ட் குக்கூ கடிகாரம் - சில குறிப்புகள்..,*
ஜெர்மன் பிளாக் ஃபாரஸ்ட் - குக்கூ கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற சரியான தகவல் நம்மிடம் இல்லை. முதல் ஜெர்மன் குக்கூ கடிகாரம், ஷான்வால்ட் கிராமத்தைச் சேர்ந்த கடிகார தயாரிப்பாளரான ஃபிரான்ஸ் அன்டன் கெட்டரரால் உருவாக்கப்பட்டது என்கிற சிறு குறிப்பை வைத்து முதல் குக்கூ கடிகாரம் 1600களின் முற்பகுதியில் சுமார் 1629 ஆம் ஆண்டு வாக்கில் இருந்ததாகத் தெரிகிறது,
இந்த உலகில் உள்ள பல அற்புதமான விஷயங்களைப் போலவே, குக்கூ கடிகாரத்தின் உண்மையான தோற்றக் கதை என்ன என்பது நமக்கு முழுமையாகத் தெரியவில்லை.
இருப்பினும், அது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என தெரியாவிடினும், குக்கூ கடிகாரம் அதன் முதல் பாடலை சுமார் 1738 ஆம் ஆண்டில் பாடியது. புதிய வகை கடிகார தயாரிப்பாளர்களுக்கு ஒரு புதுமையான விஷயமாக எவ்வாறு பிடித்திருந்தது என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
பல தலைமுறைகளாக, பல காலங்களாக, சோதனை முயற்சிகளில் பல சோதனைகளை சந்தித்து, அதில் தேர்ச்சிப் பெற்ற பல கண்டுபிடிப்புகளைப் போலவே, குக்கூ கடிகாரமும் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு, அடிப்படை கடிகாரத்தில் சேர்க்கப்பட்ட யோசனைகளின் தொடராகும்.
இன்றும் கூட, பழைய உலக அழகை புதிய உலக தொழில்நுட்பத்துடன் இணைக்க சில மாற்றங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த சேர்க்கைகள் நிரந்தரமானதாக இருக்க போவதில்லை, காலப்போக்கில் மென்மேலும் புதிதான பிற்சேர்க்கைகள் இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.எப்படியிருந்தாலும், 1700 களின் நடுப்பகுதியில், ஜெர்மன் பிளாக் ஃபாரஸ்ட் பகுதி பலரால் குக்கூ கடிகாரங்கள் தயாரிப்பதற்குப் பிரபலமானது. அந்த பகுதியைச் சேர்ந்த பலர், கடிகார தயாரிப்பாளர்களாக மாறினர், ஏனெனில் அந்தப் பகுதியின் கடுங்குளிர்கால மாதங்களில் குறைவான வெளிப்புற வேலைகள் இருந்ததால்,
அவர்களின் வருமானத்திற்கு கூடுதலாக, பலர் குக்கூ கடிகாரங்களை உருவாக்கக் கற்றுக்கொண்டனர். குளிர்காலம் அல்லாத மாதங்களில், கடிகார தயாரிப்பாளர்கள் விழுந்த மரங்களிலிருந்து பொருத்தமான மரங்களைச் சேகரித்து வைக்க தொடங்குவார்கள்.
கடிகார தயாரிப்பாளர்கள் கடிகாரங்களின் கூறுகளை உருவாக்க மரத்தைப் பயன்படுத்துவதைத் தாண்டி, கடிகாரத்தின் வெளிப்புறத்தை மேம்படுத்தத் தொடங்கினர்.
ஆரம்பத்தில், அனைத்து கூறுகளும் மரத்தால் செய்யப்பட்டன, ஆனால் காலப்போக்கில், உலோக கூறுகள் நீண்ட காலம் நீடிக்கும், மிகவும் துல்லியமாக இருப்பது பற்றி கற்றுக்கொண்டனர்.
அதற்கேற்றவாறு மாற்றத்தை கொண்டு வந்தனர்.
திறமையான குக்கூ கடிகார தயாரிப்பாளர்களின் ஒரு சில நிறுவனங்கள் இன்றும் பிளாக் ஃபாரஸ்டில் உள்ளன. இந்த வகை கடிகாரங்களின் எதிர்காலம், பாரம்பரிய குக்கூ கடிகார கைவினைஞர்களின் நிலை எப்படி இருக்கும் என கணிப்பது கடினம். இருப்பினும் கடிகார உற்பத்தியில், அதன் தொழில்நுட்பத்தில், வடிவமைப்பில், உச்சத்தை தொட்டு விட்ட இன்றைய நவீன காலக்கட்டத்திலும், குக்கூ கடிகாரத்தை ரசிப்பவர்கள், அதை தங்கள் வீட்டில் வைத்திருப்பதை பெருமையாக நினைப்பவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். எனவே குக்கூ சத்தம் ஒருபோதும் ஓயாது, எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
பிகு:-
எங்களது குடும்ப நண்பர்களான ராஜசேகர் ராஜேஸ்வரி தம்பதியினர் கோவையிலிருந்து, சமீபத்தில் இங்கிலாந்து ஐரோப்பிய சுற்றுலாவுக்காக வந்து சென்றனர்.
அவர்கள் அன்பளிப்பாக வாங்கி தந்த குக்கூ கடிகாரம், எங்கள் வீட்டு வரவேற்பறையில் மாட்டப்பட்டு மணிக்கொரு தரம் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

கருத்துகள்
கருத்துரையிடுக