சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 : இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 08 July 2025 அகரமுதல
(சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 : தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 981-985
981. Audience அவையோர்;
கேட்பவர்
(சட்டத்) தகவல் பெறுநர்
audientia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கேட்டல். பொது நிகழ்ச்சியைக் குழுவாகப் பார்ப்பவர்களும் கேட்பவர்களும் Audience எனப்படுகின்றனர். தமிழில் பார்வையாளர், அவையோர், கேட்பவர், கேட்போர், அவையினர் என்கிறோம். சட்டச் சூழலில் கேட்குநர் அல்லது கேட்புஅவை என்பது சட்டத்தகவல் தொடர்பான விவரங்களைப் பெறுபவர்களைக் குறிக்கிறது. இதில் பல்வேறு அளவிலான சட்ட அறிவு, குறிப்பிட்ட தேவைகளைக் கொண்ட பல்வேறு தனியாட்கள், குழுக்கள் அடங்கும். பார்வையாளர்கள் நீதிபதிகளா, சாரரா(client), பிற சட்ட வல்லுநர்களா என்பதைப் புரிந்துகொள்வது பயனுள்ள சட்ட எழுத்துரை, சாருரைமை, ஒட்டுமொத்த தகவல் தொடர்புக்கு மிகவும் முதன்மையானது.
client என்றால் கட்சிக்காரர், வாடிக்கைக்காரர், வேண்டுநர் என இடத்திற்கேற்பக் கூறுகின்றனர். பொதுவாகக் கூறுவதானால் சார்ந்திருக்கும் பயனாளி – பயனர் எனலாம். சுருக்கமாகச் சாரர் எனலாம்.
982. Audience in all courts, right of அனைத்து மன்ற வாதுரிமை
எல்லா நீதிமன்றங்களிலும் வாதாடும் உரிமை
அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுரிமை
Audience என்றால் பார்வையாளர் என்ற பொருளில் இங்கே பார்க்கக் கூடாது. கட்சிக்காரர் சார்பாக நீதிமன்றத்தில் தோன்றி வழக்கு நடவடிக்கைகளில் பங்கேற்பவர் என்பதே பொருள்.
இந்தியத்தலைமை வழக்குரைஞருக்கு இந்தியாவிலுள்ள எல்லா நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை உள்ளது. (வாக்குரிமை இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்திலும் பங்கேற்கும் உரிமையும் உண்டு.)
983. Audience, right of வழக்காடுரிமை
நீதிமன்றத்தில் தோன்றவும் வழக்கை நடத்தவுமான உரிமை
வழக்குரைஞருக்குத் தன் சாரருக்காக/கட்சிக்காரருக்காக அவர் சார்பில் வழக்குமன்றத்தில்/நீதி மன்றத்தில் வழக்காடும் உரிமை உள்ளது. எனினும் எல்லா நிலை வழக்குரைஞரும் எல்லாநிலை நீதி மன்றத்திலும் வழக்காட இயலாது.
இங்கிலாந்து, வேல்சில் நடைமுறையிலுள்ள ஆங்கிலேயச் சட்டம் (English law) பொதுச்சட்டம்(common law )என்றும் கூறப்படுகிறது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மா உரைஞரே வழக்காட உரிமை பெற்றவர். மூத்த நீதிபதிகளைக் கொண்ட மூத்த நீதி அவையில் மூத்த வழக்குரைஞர்கள் வாதிடுவதே ஏற்றதாகக் கருதப்படுகிறது. பட்டறிவும் பணியறிவும் குறைந்த வழக்குரைஞர்கள் வாதிடுவது நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக அமையும் என நம்பப்படுகிறது. எனவே இளைய வழக்குரைஞர்களுக்கு உச்சநீதிமன்றததில் வாதாடும் / வழக்காடும் உரிமை மறுக்கப்படுகிறது.
மூத்த வழக்குரைஞர்களான வழக்கு மா உரைஞர்கள்(barrister) மட்டுமே உச்சநீதி மன்றத்தில் சாரர்/கட்சிக்காரர்கள் சார்பில் வழக்காடும் உரிமை பெற்றவர்கள்.
நீதிமன்றங்கள் – சட்ட சேவைகள் சட்டம் 1990 இன் கீழ்ச் சட்டப்பூர்வமற்ற வல்லுநர்கள் வழக்காடும் உரிமை வரையறுக்கப்பட்டுள்ளது.
984. Audit தணிக்கை
audītus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதன் பொருள் ‘நான் கேட்கிறேன்’ என்பது. பின்னர் கேள்வி கேட்பதையும் குறிப்பதாயிற்று. எனவே Audit என்பதன் நேர் பொருள் கேட்பர்/வினவுநர் என்பதுதான்.
எனினும் பணியின் அடிப்படையில் கணக்காய்வு அல்லது கலைஆய்வு (திரைத்துறை முதலியவற்றில்) எனலாம்.
அரபுச் சொல்லான tanqiya என்பது மருவி தணிக்கையானது என்பர். தணி என்பது தமிழ்ச்சொல். இதன் அடிப்படையில் பல சொற்கள் உள்ளன. அமைப்பின் குறைகளைக் களைந்து நிறைகாணும் வகையில் செயல்பாட்டு வேகத்தைத் தணிப்பதால் தணிக்கையாயிற்று என்பர்.
985. Audit fees தணிக்கைக் கட்டணம்
தணிக்கைக் கட்டணம் என்பது ஒரு நிறுவனத்தின் நிதிப் பதிவுகளை ஆய்வு செய்து, நடுநிலைத்தன்மையுடனும் துல்லியமாகவும் கருத்தை வழங்குவதற்காகத் தணிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உழைப்பீட்டுத் தொகையாகும் (ஊதியமாகும்). இந்தக் கட்டணங்கள் நிறுவனத்தின் அளவு, சிக்கலான தன்மை, தணிக்கையின் நோக்கம், தணிக்கையாளரின் பணியறிவு, இருப்பிடம் முதலான பல காரணிகளின் அடிப்படையில் மாறுபடும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள்
கருத்துரையிடுக