தோழர் நிகில் தேவ் முக நூல் பக்கத்தில் இருந்து....*
*அனைவரும் சமம்*
ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, எங்கு செல்வதாக இருந்தாலும் ரயில் பயணத்தை தான் மிகவும் விரும்புவேன். வேறு எந்த வாகனங்களை விட ரயில் மீது ஈர்ப்பு உள்ளது. இவ்வளவு பிடித்த ரயில் பயணத்தில் சிறுவயதில் என்னை அச்சுறுத்திய இரண்டு விஷயங்கள்.
ஒன்று, ரயிலின் Horn சத்தம். குறிப்பாக ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து என்னை கடந்து ஓடும் காட்சிகளை ரசிக்கும் பொழுது திடீரென Horn அடித்தவாறு எனக்கு எதிரில் ஒரு ரயில் கடந்து செல்லும் அது பயத்தை உருவாக்கும். மற்றொன்று திருநங்கைகளின் கைத்தட்டலின் சத்தம்.
பொதுச் சமூகத்தின் வளர்ப்புதான் நானும், அதனால் திருநங்கைகள் என்றாலே தவறுதலான புரிதல் எனக்குள்ளும் இருந்தது. ஆகையால் அவர்களின் கைத்தட்டலை கேட்டாலே சிறிய பயம் உள்ளே இருக்கும். அதுமட்டுமின்றி சில கசப்பான அனுபவங்களும் எனக்கு இருந்ததால் திருநங்கைகளை பார்த்தால் பயந்து ஒளிந்து கொள்வேன். என்னுடன் வீர வசனம் பேசி ஆம்பள திமிரில் திரியும் ஆண்களும் திருநங்கைகளை கண்டால் கண்ணை மூடி உறங்குவதாக நடித்து விடுவார்கள் அவ்வளவு தைரியசாலிகள். தாயின் தாலாட்டிலும் வலிமையானது திருநங்கையின் கைத்தட்டல். எப்படிப்பட்டவர்களையும் தூங்க வைத்து விடும்.
நானும் இப்படியான மனநிலையுடன் தான் இருந்தேன். ஒரு விளையாட்டுப் போட்டிக்காக எனக்கு பஞ்சாப் செல்ல வேண்டி இருந்தது. ரயிலில் பயணிக்கும் பொழுது எனக்கு எதிரில் ஒரு திருநங்கை பயணித்திருந்தார். அதுவே அந்தச் சமூகத்தை புரிந்து கொள்ள எனக்கு அமைந்த முதல் படி. ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் அவர் என்னுடன் உரையாடத் தொடங்கியதும் எனக்குள் இருந்த அச்சங்கள் அனைத்தும் உடைந்து விட்டது மேலும் இவர்களை தவறாக புரிந்து கொண்டோமோ என்ற குற்ற உணர்ச்சியும் எனக்குள் எழுந்தது. நான் முதலில் குறிப்பிட்டதை போல பொதுச் சமூகத்தின் வளர்ப்பு நான், யாரோ ஒருவர் தவறு செய்தால் அதை அந்த ஒட்டுமொத்த சமூகத்தின் மீது திருப்பும் பழக்கம் நமக்கு உள்ளது. ஆனால் அது ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு ஆண், ஒரு பார்ப்பனர் அல்லது இந்த சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று கருதக்கூடிய மனிதர்கள் தவறு செய்தால் அதை அந்த சமூகத்தின் மீது நாம் திருப்புவதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் துவங்கி பஞ்சாப் வரை சென்ற ரயில் ஒரு பெரும் பாடத்தை கற்பித்தது, திருநங்கைகளின் கைத்தட்டலுக்கு பின்னால் உள்ள வலிகளும், வேதனைகளும் அந்த ரயிலின் ஓசையுடன் என் காதுகளில் ஒலித்தது.
வசதி வாய்ப்புகளுடன், சமூகத்தில் சலுகை பெற்றவர்கள், உணவுக்காக கையேந்துபவர்களை பார்த்து கேட்கும் கேள்வி " கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு? உழைத்து சம்பாதிக்கலாம்லா? " கேட்பதற்கு சரியாக தோன்றினாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்த சமூகம் ஊனமாக இருக்கும் வரை அவர்களுக்கு கை கால் நன்றாக இருந்தும் எந்த பலனும் இல்லை.
திருநங்கைகளின் வாழ்க்கையில் நடக்கும் துன்பங்களை, வேதனைகளை, வலிகளை அவர் அந்த ரயில் பயணத்தில் எனக்கு விளக்கினார். குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்த அவர் இந்தச் சமூகத்தால் ஒடுக்கப்பட்டு அவரது மருத்துவத்திற்கும் உணவுக்கும் மக்களிடையே கையேந்த வேண்டிய நிலை.
நன்றாக படித்த அவருக்கு இந்த சமூகம் வேலை கொடுக்க மறுத்தது. பெண்களுக்கே பல துறைகளில் தடைகள் இருக்கும் பொழுது திருநங்கைகளை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை இந்த சமூகத்திற்கு இருக்கிறதா என்ன?
சுகாதார வசதிகளும், மருத்துவ வசதிகளும் திருநங்கைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் திருநங்கைகளின் மன அழுத்தம் காரணமாக எத்தனை தற்கொலைகள் நடக்கிறது என்பதையும் அவர் விளக்கியது மேலும் அதிர்ச்சியையும் நான் திருநங்கைகளை பார்க்கும் கோணத்தையும் என்னுள் மாற்றி அமைத்தது.
ஏன் இந்த சமூகம் உங்களை இவ்வளவு வெறுக்கிறது ஆண்கள் உங்களை இவ்வளவு வெறுக்கிறார்கள் என்ற கேள்வியை கேட்கலாம் என்று நினைப்பதற்கு முன்பே அவர் கூறியது, ஆண்களுக்கு எங்களை மிகப் பிடிக்கும் ஆனால் அது இருட்டு அறையில் மட்டுமே. காதலில் விழுவதும் ஏமாற்றப்படுவதும், கஷ்டப்பட்டு கைத்தட்டி சம்பாதித்த பணத்தை பறிகொடுத்து இறுதியில் தற்கொலை செய்து மடிவதும் எங்களின் வாழ்க்கையில் வாடிக்கையாகவே உள்ளது என்று அவர் கூறினார்.
நாங்கள் பாசத்துக்காக ஏங்குபவர்கள், இந்தச் சமூகத்தில் யாரேனும் எங்களை கரிசலத்தோடும், பாசத்தோடும் அணுகினால் அதை நம்பி ஏமாறும் கூட்டம். இதை புரிந்து கொண்ட சிலர் சரியாக எங்களை உபயோகப்படுத்திக் கொள்வதும் எங்களை சுரண்டுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பலரும் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நாளடைவில் எங்களில் ஒருவரை இழப்பது எங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றார்.
மருத்துவ வசதியின்மை, ஆண்களால் சுரண்டப்படுவது, பொதுச் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது, பெற்றவர்களால் புறக்கணிக்கப்படுவது இதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் என தங்களின் வாழ்க்கையின் அனைத்து வலிகளையும் ஒன்றிணைத்து அவர்கள் தட்டும் அந்த கைகள் அந்த ரயில் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் கேட்க வேண்டும்.
இன்று திருநங்கைகளுக்கான உரிமைகளை போராடி பெறுவதற்கு சிலர் முன் வருகிறார்கள், அவர்களின் சமூகத்தில் முட்டி மோதி படித்து அவர்களின் உரிமையை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். நாங்களும் இங்கு இருக்கிறோம் என்று உறுதிப்படுத்துவதற்கே அவர்கள் இவ்வளவு போராட வேண்டி இருக்கு. நாம் அனைவரும் அவர்களோடு இணைந்து போராட வேண்டியது நமது கடமையாகும்.
*அனைவரும் சமம் என்பது அனைவரையும் ஒருங்கிணைத்து சொல்ல வேண்டிய சொல், நமக்கு விருப்பமில்லாத மனிதர்களை ஒதுக்கி வைத்து மற்றவர்களின் கைகளை மட்டும் இறுக்கமாக பிடித்து கத்தி சொல்லி எந்தவித பயனும் இல்லை..*
கருத்துகள்
கருத்துரையிடுக