இறையன்பு ஓராண்டு உரைகள் தொகுதி 1 நூல் ஆசிரியர் : இறையன்பு அவர்கள் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம்.
இறையன்பு ஓராண்டு உரைகள்
தொகுதி 1
நூல் ஆசிரியர் : இறையன்பு அவர்கள்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம்.
சிலருக்கு நன்றாக பேச வரும், சிலருக்கு நன்றாக எழுத வரும், வெகு சிலருக்கு நன்றாகப் பேசவும் ,எழுதவும் வரும். அந்த வெகு சிலரில் சிகரமானவர் மாமனிதர் இறையன்பு அவர்கள். அவரது பல உரைகளை நேரடியாக கேட்டு ரசித்து இருக்கிறேன். ஒருமுறை பேசியதை மறுமுறை பேச மாட்டார். கூறியது கூறல் அவரிடம் எப்போதும் இல்லை.
ஒரு சில பிரபலங்கள் பேச்சை முதல் முறை கேட்டால் டாப். மறுமுறை கேட்டால் டேப். என்றைக்கும் ஒரே பேச்சு, அன்று பேசியதையே பேசுவார்கள்.
இறையன்பு அவர்களின் 180வது நூல் இது. 4 தொகுதிகளில் வந்துள்ளன. 1800 பக்கங்கள் கொண்ட நூல். 1500 ரூபாய்க்கு விலை குறைவாக. தரமான தாளில். மிக நன்றாக வடிவமைத்து வெளியிட்டுள்ள பவள விழா கண்டுள்ள புகழ்பெற்ற நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
முதல் தொகுதியை மட்டுமே எழுதி உள்ளேன். வரிசையாக மற்ற தொகுதிகளும் எழுதுவேன். பதிப்புரையும் முன்னுரையும் சிறப்பாக உள்ளன. 25 தலைப்புகளின் உரைகள் முதல் தொகுதியில் உள்ளன. பேசிய நாள், இடம் எல்லாம் குறிப்பிட்டு மிக நுட்பமாக ஆவணப்படுத்தி உள்ளனர்.
முதல் உரை 11.7.2023 அன்று இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கல்வி குறித்து ஆற்றிய உரை. தலைப்பு “இனியதொரு கல்வி”. தலைப்பே கல்வியை இனியது என்கிறது. அவர் அடிக்கடி சொல்வார் : 'இஷ்டப்பட்டு படிக்க வேண்டும், கஷ்டப்பட்டு படிக்கக் கூடாது'. எந்த ஒரு செயலையும் விரும்பிச் செய்ய வேண்டும் என்பார்.
அவர் உரையாற்றும்போதும் மனம் விரும்பி லயித்துப் பேசுவார். கையில் எந்தவித குறிப்பும் எந்தக் கூட்டத்திற்கும் வைத்துக் கொள்வதில்லை. மடைதிறந்த வெள்ளமென உரையாற்றுவார். தெளிந்த நீரோடை போல இருக்கும் அவர் உரை. எப்போதும் உரக்கப் பேசமாட்டார், இரைச்சல் இருக்காது. எல்லோருக்கும் புரியும்படி பேசுவார்.
இவருடைய பேச்சை பலரும் ரசிப்பது உண்டு. கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார், இறையன்பு அவர்களின் உரைகளைக் கேட்டுவிட்டு மனம்திறந்து பாராட்டினார். நினைவாற்றலை நினைவு கூர்ந்தார். பதிப்புத்திலகம் வானதி இராமனாதன் அவர்கள் ஐயாவின் உரைகளைக் கேட்டுவிட்டு அசந்து போனார். இனி ஐயா எங்கு பேசினாலும் போய் கேட்பதுதான் என வேலை. அவரது உரைக்கு நான் அடிமை என்றே உரைத்தார். இவை எல்லாம் மிகையல்ல நடந்த உண்மை. ½ மணி நேரம் உரை குறித்துப் பாராட்டை அலைபேசியில் உரைத்தார்.
உரை முழுவதும் முக்கியமான கருத்துக்கள் தான், கருத்துக் களஞ்சியம், அறிவுக் கருவூலம் என்றே சொல்லலாம். தேவையற்ற ஒருசொல் கூட நூலில் இல்லை. எல்லோருடைய உரையையும் நூலாக்க முடியாது. நூலாக்கும் அளவிற்கு தரம் இருக்காது மலிவான நகைச்சுவைகள் சொல்வார்கள் அவற்றை நூலாக்க முடியாது. ஆனால் ஐயா உரையில் எள்ளல் இருக்கும், தரமானதாக இருக்கும்.
25 உரைகளிலும் முக்கியமான கருத்தை நிலவு போல வட்டமிட்டு தனியாக பெரிய எழுத்தில் அச்சிட்டுள்ளனர். பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு : “பல குழந்தைகள் மின்னணுச் சாதனங்களை ஒரு நிமிடம் கூட பிரிய முடியாமல், கைக்குழந்தையை அருகில் படுக்க வைத்திருக்கும் தாய்மாரைப் போல, தூக்கத்தின் போதும் அருகிலேயே வைத்து ஆராதிக்கிறார்கள்”. உண்மை தான் அலைபேசியில் செய்தி வந்துள்ளதா? என அடிக்கடி பார்ப்பவர்கள் இரவு சரியாகத் தூங்குவதில்லை இது ஒருவித மனநோய் என்றே சொல்ல வேண்டும். இன்னும் ஒரு சிலர் கழிவறை செல்லும் போது கூட ஒரு இலட்ச ரூபாய் அலைபேசியை கொண்டு செல்வதையும் பார்த்து இருக்கிறேன்.
இன்றைய இளையதலைமுறையை நெறிப்படுத்தும் விதமாக வன்மையாகக் கூறாமல், மிக மென்மையாக கருத்து இயம்பி உள்ளார். என்சைக்கிளோபீடியா போல, கூகுள் போல பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.
லாவோட்சு, “பெண்களை நீரோடு ஒப்பிடுகிறார். ஆண்களைப் பாறையோடு ஒப்பிடுகிறார்”. பாறை வலிமையாக இருக்கும். சொர சொரப்பாக இருக்கும். ஆனால் நீர் பாய்ந்து பாய்ந்து அதன் சொர சொரப்பு போய்விடும்,”
புயலையும் தென்றலாக்கும் வித்தையைக் கற்றவர்கள் பெண்கள். பெண்களால் பல ரவுடிகள் நல்லவர்களாக மாறிய நிகழ்வுகள் உண்டு.
இறையன்பு ஐயா, சங்க இலக்கியப் பாடல்களானாலும், திருக்குறள்களானாலும், சென் கதைகள், மேல்நாட்டு அறிஞர்களின் பெயருடன் அவர்கள் கருத்தை மேற்கோள் காட்டுவதாக இருந்தாலும் நினைவாற்றலுடன் உரைப்பார். இது உரைநூல் என்றே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது. மனிதனை பண்படுத்துவது தான் நல்ல இலக்கியம் அதனை இந்த நூல் செவ்வன செய்துள்ளது. அள்ள அள்ள வரும் அட்சயப்பாத்திரம் போல, படிக்க படிக்க புதிதாக தெரிந்து கொள்ள உதவிடும் உன்னத நூல். அனைவரும் வாங்கிப் படித்து பயன்பெறுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக