நூல் விமர்சனம் திரும்பிப் பார்க்கிறேன் நூல் ஆசிரியர் : தமிழ்ச் செம்மல் கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம்: சீ.தேவராஜபாண்டியன்.மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முதுகலை மாணவர்.

நூல் விமர்சனம் திரும்பிப் பார்க்கிறேன் நூல் ஆசிரியர் : தமிழ்ச் செம்மல் கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம்: சீ.தேவராஜபாண்டியன்.மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முதுகலை மாணவர். வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. பக்கங்கள் : 78, விலை : ரூ. 70! மிகவும் எளிமையான பழகுவதற்கு இனிமையான மாமனிதர் கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள். நான் இந்த நூலைப் படித்த போது உணர்ந்தது அவரின் இரண்டு குணங்கள் நன்றி மறவாமையும், தானாக சென்று உதவும் பண்பும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுர வாசலில் கட்டாய சிறப்பு தரிசனச்சீட்டு விற்கப்பட்டதை அன்றைய தலைமைச் செயலாளர் இறையன்பு அய்யா அவர்களிடம் எடுத்துச் சென்று பக்தர்களின் இடையூறுக்கு தீர்வு கண்டார். அப்போது குறிப்பிடுகிறார் கவிஞர் அய்யா "*நான் நாத்திகன் தான் என்றாலும்...*" என்று, இதைப் படித்த போது என் நினைவுக்கு வந்தது ஒருமுறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழைய செய்ய வேண்டும் என்று பேசும்போது, காங்கிரசைச் சார்ந்த அனந்தநாயகி என்ற சட்டமன்ற உறுப்பினர் உங்களுக்கு ஏன் இதில் அக்கறை? ஏனென்றால் கலைஞரும் நாத்திகர் தான். அப்போது கலைஞரிடம் இருந்து வந்த பதில் "*நீதிமன்றத்திற்கு கொலையாளிகள் மட்டுமா செல்கிறார்கள் வாதாடுபவர்களும் தானே*". மதுரையின் மறு அடையாளமாக உருவெடுத்து இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உணவகம் திறக்கப்படாமல் இருந்ததை அன்று தலைமைச் செயலாளராக இல்லாத இறையன்பு அய்யாவிடம் எடுத்துச் சென்று, ஒரு வாரத்தில் உணவகம் திறக்கப்பட்டு மாணவர்களும், பணியாளர்களும் பயன்பெற வழிவகை செய்த கவிஞர் அய்யா அவர்களுக்கு மாணவர்களின் சார்பாக என் பாராட்டுக்களும் நன்றிகளும் பல பல. இதில் சிறப்பு என்னவென்றால் பொறுப்பில் இல்லாத போதும் சமூகப் பொறுப்போடு முன்வந்து உதவிய இறையன்பு அய்யா அவர்களின் நற்குணம் தான். ஒருமுறை இறையன்பு அய்யா அவர்கள் "*செய்த உதவிகளை உடன் மறந்து விடுவேன் பெற்ற உதவிகளை மறப்பதில்லை*" என்று கவிஞரிடம் கூறியிருக்கிறார். அதை நானும் என் வாழ்நாளில் கடைபிடிக்க முயல்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தன்னைச் சார்ந்த நண்பர்கள் 50 பேருக்கும் பெற்று கொடுத்த பெருமை கவிஞர் அய்யா அவர்களையே சாரும். "*யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்*". இப்படிப்பட்ட மாமனிதருக்கு வாழ்க்கையில் இடையூறுகள் இல்லாமல் இருக்குமா என்ன? பல ஆளுமைகளுடன் நெருக்கமாக இருப்பதால் கவிஞர் அய்யா அவர்களை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று அன்றைய சுற்றுலாத்துறை அமைச்சர் அம்மையார் கோகுல இந்திரா அவர்களிடம் மேலதிகாரிகள் கூறிய போது, அதற்கு "*இரவி செவ்வனே அவர் பணியை செய்பவர், அவரை மாற்றக் கூடாது*" என்று உறுதியாக கூறிவிட்டார். பெரும் பேராசிரியர் தொ.பரமசிவம் அய்யா அவர்களை மருத்துவர் சான்றிதழுக்காக விமானத்தில் அனுமதிக்காத போது "*தனக்காக அனுமதியுங்கள், எது நடந்தாலும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்*" என்று மற்றவர்களுக்காக இறங்கும் மனமும் இரக்க குணமும் நம் கவிஞர் அய்யா அவர்களுக்கு உண்டு. அவர் எங்கேயும் தன்னை நாத்திகன் என்று சொல்லிக் கொள்வதில் தயங்கியதில்லை. பஜனை பாடிய அவரை தந்தை பெரியாரின் பகுத்தறிவு பாதைக்கு அழைத்து வந்தவர் பெரியார் நெறியாளர் மானமிகு பி. வரதராசன் அய்யா அவர்கள். புரட்சிக் கவிஞரைப் போல் பாரதி மீது அதீத பற்று கொண்டவர் எங்கள் திராவிடக் கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள். பெரும் மரியாதைக்குரிய என்னுடைய பேராசிரியர் முனைவர் இரா. பிறையா அவர்களின் உடன் பிறந்த அண்ணன் முனைவர் இரா. திருநாவுக்கரசு. இ. கா. பா. அவர்களைப் பற்றியும் கவிஞர் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். அதில் "*பந்தா எதுவும் இல்லாத எளிய மனிதர் பண்பாளர்*" என்று, இதைப் படித்த உடன் எனக்குத் தோன்றியது கவிஞர் அய்யாவும் எவ்வித பந்தாகவும் இல்லாத எளிய மனிதர். அதைப் போன்று தானே அவருடைய நண்பர்களும். இது கவிஞரின் 33 வது நூல், 1330 திருக்குறள்களைப் போல் இன்னும் நிறைய நூல்கள் இத்தமிழ் சமூகத்திற்குத் தர வாழ்த்துகளும் பாராட்டுக்களும். நன்றி.

கருத்துகள்