பாட்டெழுதும் முன் ------------------------ பட்டுக்கோட்டையாருக்கு வாய்த்த ------------------------------------------- பயிற்சிப் பட்டறை ---------------------- - சோழ. நாகராஜன்
பாட்டெழுதும் முன்
------------------------
பட்டுக்கோட்டையாருக்கு வாய்த்த
-------------------------------------------
பயிற்சிப் பட்டறை
----------------------
- சோழ. நாகராஜன்
சேலம் நகரின் அந்தநாள் அடையாளங்களில் முக்கியமானது அங்கே இயங்கிவந்த சினிமா நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ்.
திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் என்ற டி.ஆர். சுந்தரம் அதனை 1935ல் தொடங்கினார்.
1982 வரை செயல்பட்டு வந்த அத் திரைப்பட நிறுவனம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று சுமார் 150 படங்களைத் தயாரித்தது.
ஒருநாள் அதன் படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்திருந்த பழம்பெரும் நடிகர் டி.எஸ். துரைராஜ் முன்பு போய் நின்றார் கல்யாணசுந்தரம்.
தனக்கு நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு வாங்கித்தருமாறு துரைராஜிடம் வேண்டினார்.
'தற்போது இங்கே பட வாய்ப்புகள் அதிகம் இல்லை.
தவிரவும் நாங்களெல்லாம் மிகச் சின்ன வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிவந்து, நாடகங்களில் நடித்து, அந்த அனுபவத்தோடு சினிமாவுக்கு வந்தவர்கள்.
அதுபோல நீயும் முதலில் நாடகத்தில் நடித்துப் பயிற்சி எடுத்துக்கொள்!' - என்று பட வாய்ப்பு கேட்டுவந்த கல்யாணசுந்தரத்திற்கு அறிவுரை கூறினார் துரைராஜ்.
அத்தோடு நில்லாமல் மதுரையில் நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த சக்தி நாடக சபா கிருஷ்ணசாமிக்கு ஒரு சிபாரிசுக் கடிதமும் எழுதிக் கொடுத்துவிட்டார்.
மதுரை வந்துசேர்ந்த கல்யாணசுந்தரத்துக்குத் துவக்கத்தில் வேடங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
அரங்க வேலைகள் தரப்பட்டன.
அதன்பின்னர் சின்னச் சின்ன வேடங்கள் கிடைத்தன.
பின்னர் கதாபாத்திரங்கள் தரப்பட்டன.
‘கவியின் கனவு’ - என்ற நாடகத்தை சக்தி நாடக சபா நடத்திவந்தது.
அதில் ராஜகுருவாகத் திறம்பட நடித்துவந்தவர் எம்.என். நம்பியார்.
அவருக்கு சினிமா வாய்ப்புகள் பிரகாசமாக அமைய அவர் நாடகத்திலிருந்து விலகிவிட்டார்.
அந்தப் பாத்திரத்திற்கேற்ற நடிகர் கிடைக்காமல் தவித்தார் கிருஷ்ணமூர்த்தி.
நம்பியார் இல்லாத அந்த நாடகம் வெற்றிகரமாக நடப்பதே இயலாத ஒன்றானது.
அந்தச் சமயத்தில் மிக உயரமான மனிதரான கல்யாணசுந்தரம் கம்பீரமாக அந்த வழியே நடந்துபோனார்.
கிருஷ்ணமூர்த்திக்குப் பொறிதட்டியது.
நம்பியார் ஏற்றிருந்த ராஜகுரு பாத்திரத்தின் வசனங்களைக் கல்யாணசுந்தரத்திடம் கொடுத்து சில பகுதிகளை நடித்துக்காட்டச் சொன்னார்.
அவரும் நடித்துக்காட்டினார்.
கூடியிருந்த நாடக சபா உறுப்பினர்களுக்கு வியப்பு உண்டாக,
அவர்களுக்கு ஒரு புது ராஜகுரு கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.
நாடகக்குழு பாண்டிச்சேரியில் முகாமிடத் திட்டமிடப்பட்டது.
பாண்டிச்சேரி என்றதும் தலைகால் புரியவில்லை கல்யாணசுந்தரத்திற்கு.
அப்போது அவரது பெயர் ஏ.கே. சுந்தரம்.
பின்னாளிலோ அவர்தான் பாட்டுக்கோட்டை எனும் செங்கோட்டையையே தமிழ் சினிமாவில் கட்டியெழுப்பிய கவிச் சிற்பியான மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
ராஜகுருவாக நடிப்பைத் தொடர்ந்த பட்டுக்கோட்டையாருக்குத் தன் மானசீக குருநாதரான பாரதிதாசனின் மண்ணான பாண்டிச்சேரியை நினைக்கையிலேயே மனமெங்கும் மகிழ்ச்சி பொங்கியது.
திட்டமிட்டபடி புதுவையில் நாடகம் வெற்றிகரமாக அரங்கேறியது.
நல்ல ஓவியரான தன் அண்ணன் கணபதிசுந்தரத்திடமிருந்து பாவேந்தரின் படமொன்றை வரையச்சொல்லி வாங்கிக்கொண்டார்.
பட்டுக்கோட்டை அழகிரியிடமிருந்தும், அணைக்கட்டு டேவிட்டிடமிருந்தும் பெற்றுவந்த கடிதங்களோடு, புதுவை விடுதலை வீரரும் கம்யூனிஸ்ட் தலைருமான வ. சுப்பையாவின் உதவியோடு, பாவேந்தரின் மைந்தர் மன்னர்மன்னன் அறிமுகத்தோடு தான் போற்றிவந்த பாவேந்தரைச் சந்தித்தார் பட்டுக்கோட்டையார்.
பாவேந்தர் பாரதிதாசன் பெரு மகிழ்ச்சியோடு பட்டுக்கோட்டையாரை இறுகத் தழுவி வரவேற்றார்.
தான் நடத்திவந்த ‘குயில்’ ஏட்டைக் கவனித்துக்கொள்ளும் அரிய பொறுப்பை அவருக்கு அளித்தார் பாவேந்தர்.
பட்டுக்கோட்டையார் தமிழ் சினிமாவில் பாட்டெழுதத் தொடங்குமுன் அவரது துவக்க காலப் பயிற்சிப் பட்டறைகளாக அமைந்தன இந்த அவரது நாடக அனுபவமும், பாவேந்தருடனான பெறற்கரிய அந்த நட்பு நாட்களும்.
--------------
(கட்டுரை: தீக்கதிர் ஏப் - 13, 2018 நாளிதழில் எனது "பட்டுக்கோட்டையார் பிறந்தநாள் சிறப்புத் திரைக்கதிர்!")
கருத்துகள்
கருத்துரையிடுக