கடல் ராணியின் கன்னி பிரயாணம்..,இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கடல் ராணியின் கன்னி பிரயாணம்..,* 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி 2200 பேருடன் பயணத்தை துவக்கிய டைட்டானிக் கப்பல், நான்கு நாட்கள் கழித்து, ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு வட அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பெரிய பனிப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளாகி, மூன்று மணி நேரத்திற்குள் மூழ்கியது. இந்த விபத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாமறிந்ததே. 800 அடி நீளம், 92 அடி அகலம், நீர் மட்டத்தில் இருந்து 60 அடி உயரம், 45 ஆயிரம் டன் எடை, 19 தண்ணீர் தொட்டிகள் என வடிவமைப்பில் ஆன பிரம்மாண்டமான கடலின் ராணி தனது முதல் பயணத்தையே, இறுதி பயணமாக்கிக் கொண்ட சோகம். டைட்டானிக் ஒரு மூழ்க முடியாத கப்பலாக கருதப்பட்டது. டைட்டானிக் கப்பலை கட்டியவர்களின் கூற்றுப்படி, கடலில் மிக மோசமான விபத்தில் கூட, இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டாலும் கூட கப்பல் இரண்டு மூன்று நாட்கள் மிதந்து இருக்க வேண்டும். ஆனாலும் டைட்டானிக் கப்பல், வெறும் மூன்று மணி நேரத்தில் எப்படி மூழ்கியது என்பதற்கான காரணங்கள் பலவாறு சொல்லப்படுகின்றன. முதலாவது கப்பல் வடிவமைப்பு: வாட்டர் டைட் அறை தடுப்பு கொண்ட வடிவமைப்பு டைட்டானிக் கப்பலில் இல்லை. அதாவது கப்பலில் ஒரு பகுதியில் நீர் புகுந்தால், மற்ற பகுதிகளுக்கு பரவ கூடாது. ஆனால் டைட்டானிக் கப்பலில் அது இல்லாததால், தண்ணீர் எல்லா பகுதிகளுக்கும் பரவியது.இரண்டாவது டைட்டானிக் கப்பல் கட்ட பயன்படுத்தப்பட்ட இரும்பு. அதில் சல்பர் அதிகம் இருந்தது. இதனால் குறைந்த வெப்பநிலையில், இரும்பு தகடுகள் மேல் பனிப்பாறைகள் உரசிய போது, தகடுகள் கீறல் ஏற்பட்டு கிழிந்தன. அதாவது இரும்பு தகடுகள் மீது, பனிப்பாறை உரசிய போது, மிக குளிர்ந்த வெப்பநிலை, அதிக தள்ளு விசை, இரும்பில் அதிக சல்பர் அளவு இருந்த காரணங்களால் படார் படார் என இரும்பு தகடுகள் நொறுங்கியதால், கடல் நீர் மளமளவென கப்பலுக்குள் புகுந்தது. டைட்டானிக் கப்பல் பனிப்பாறையுடன் மோதியவுடன், கப்பலின் மேலோடு உள்வாங்கி சப்பையாகி வளைந்து இருக்க வேண்டும். இதனுடன் சேர்த்து கப்பலின் சில வடிவமைப்பு குறைபாடுகளும், மனித தவறுகளும் டைட்டானிக் கப்பலின் விபத்துக்கு காரணமாக ஆகிவிட்டது. 1912 ஏப்ரல் 10 அன்று கிளம்பி, 14 அன்று இரவே பனிப்பாறையில் மோதி, தன்னை அட்லாண்டிக் கடலுக்குள் புதைத்துக் கொண்ட பிறகு பல நாடுகள், பல வருடங்கள் நடத்திய தேடுதல் வேட்டை, 1985 செப்டம்பர் 1 அன்று ஒரு முடிவுக்கு வந்தது. டைட்டானிக் கப்பல் இப்போதும் கடலுக்கடியில் 12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் இன்னமும் உறங்கி கொண்டிருக்கிறது. டைட்டானிக்கின் பாகங்கள் என்னாயிற்று என்று சோதனை நடத்திய போது, ஆழ்கடல் பாக்டீரியாக்கள் அவற்றை அரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இப்படி இரும்பைத் துரும்பாக்கும் பாக்டீரியா இனத்திற்கு உடனே ஹாலோமோனஸ் டைட்டானிக்கே என்று பெயர் சூட்டி விட்டனர் என்பது கொசுறு செய்தி. விபத்து நடந்து, 113 ஆண்டுகள் கடந்து விட்டாலும் டைட்டானிக் கப்பல், காலத்தையும் வென்று நிற்கிறது! இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்